பாஜகவுக்கு குட்பை சொல்கிறாரா சுரேஷ் கோபி?

மீண்டும் ராஜ்ய சபா சீட் கொடுக்காததால் சலசலப்பு
சுரேஷ் கோபி
சுரேஷ் கோபி

கேரள பாஜகவின் நம்பிக்கைக்குரிய முகம் என்பதைத் தாண்டி, அங்கு கவர்ச்சி முகமாகவும் இருப்பவர் நடிகர் சுரேஷ் கோபி. அண்மையில் அவரது ராஜ்ய சபா எம்.பி பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்த்தார். ஆனால், வழங்கப்படவில்லை. இதனால் பாஜகவில் இருந்து சுரேஷ் கோபி வெளியேற இருப்பதாக கேரளத்தில் ஒரு தகவல் வட்டமடிக்கிறது.

சுரேஷ் கோபி
சுரேஷ் கோபிhindu

கேரளத்தில் முன்னணி நடிகர்கள் யாரும் பாஜக விரித்த வலையில் சிக்காத நிலையில், சுரேஷ் கோபி அவர்களோடு ஐக்கியமானார். கடந்த 2016-ம் ஆண்டு அவரை ராஜ்ய சபாவுக்கும் அனுப்பியது பாஜக. நாயர் சமூகத்தைச் சேர்ந்த சுரேஷ்கோபி மூலம், நாயர் சமூக வாக்குகளை கணிசமாக தங்கள் பக்கம் இழுக்க பாஜக போட்ட கணக்கு இது. ஆனால், அது பலிக்கவில்லை. பலமான அஸ்திவாரத்தைக் கொண்ட மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளை மீறி சுரேஷ்கோபியால் தனது சமூகத்து வாக்குகளை பாஜக பக்கம் திருப்ப முடியவில்லை. இதையடுத்து அதே சமூகத்தைச் சேர்ந்த மோகன்லால் மீதும் கண் வைக்கத் தொடங்கியது பாஜக.

நாயர் சமூகம் கேரளத்தில் எஃப்சி பட்டியலில் வருகிறது. பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு பத்து சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்த மத்திய அரசு, அதை முன்னிறுத்தி நாயர் சமூக வாக்குகளை வசீகரிக்க முயன்றது. அதுவும் எடுபடவில்லை. கேரள சட்டப்பேரவையில் இப்போது பாஜகவுக்கு பிரதிநிதுத்துவமே இல்லாத நிலை. இந்நிலையில் நாயர் சமூகத்தினர் பெருவாரியாக இருக்கும் திருச்சூரை மையப்படுத்தி சுரேஷ் கோபியை அரசியல் செய்ய வலியுறுத்தியது பாஜக. அவரும் அதை முன்னெடுத்தார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபியை களம் இறக்கியது பாஜக. அந்தத் தேர்தலில் 2,93,822 வாக்குகளைப் பெற்று மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டார் கோபி. அதேபோல் 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் திருச்சூரில் போட்டியிட்டு மூன்றாமிடமே வந்தார். இருந்த போதும் சுரேஷ் கோபிக்கான முக்கியத்துவத்தை பாஜக குறைக்கவில்லை. அவர் மாநில பாஜக தலைவராக நியமிக்கப்படலாம் என்ற பேச்சுகூட கடந்த ஆண்டு பலமாக அடிபட்டது. ஆனால், அதுவும் நடக்கவில்லை. அரசியல் தனக்கு சோபிக்காததால் சுரேஷ் கோபி கடும் சங்கடத்திலும் அதிருப்தியிலும் இருப்பதாக தகவல் பரவியது.

இந்த நிலையில், ஏப்ரல் மாதம் சுரேஷ் கோபியின் ராஜ்ய சபா எம்பி பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து மீண்டும் தனக்கு கட்சித் தலைமை வாய்ப்பளிக்கும் என பெரிதும் நம்பினார். அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது. ஏற்கெனவே கேரள மாநில பாஜக தலைமையோடு கோபிக்கு உரசல் இருக்கிறது. இதனால் அவர் பாஜகவை விட்டு நகரும் முடிவில் இருப்பதாக பாஜக வட்டாரத்திலேயே சிலர் தகவல் பரப்புகிறார்கள். இதனிடையே, தான் எம்பி-யாக இருந்த காலத்தில் பயன்படுத்திய இரண்டு செல்போன் எண்களை மாற்றி இருக்கிறார் சுரேஷ் கோபி. அவர் கட்சியைவிட்டுப் போகலாம் என்று சொல்பவர்கள் இதையும் ஒரு துணைச் செய்தியாகச் செருகுகிறார்கள்.

சுரேஷ் கோபிக்கு மாணவப் பருவத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மீது மோகம் இருந்தது. அக்கட்சிக்காக களப்பணியும் ஆற்றியிருக்கிறார். 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்காக தேர்தல் பிரச்சாரமும் செய்தார். 2016 ஏப்ரலில் சுரேஷ் கோபியை ராஜ்ய சபாவுக்கு அழைத்தது பாஜக. ஆனாலும் அடுத்த ஐந்து மாதங்கள் கழித்தே அவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

சுரேஷ் கோபி  இப்போது...
சுரேஷ் கோபி இப்போது...

மலையாள தேசத்தில் அலையடிக்கும் சர்ச்சைகள் குறித்து சுரேஷ் கோபியிடம் பேசினோம். “நான் வேறுகட்சிக்குச் செல்கிறேன் என சர்ச்சை எழுந்ததே நல்ல கற்பனை. மோடி, அமித்ஷா, நட்டாவுக்கு எப்போதும் நான் விசுவாசமாக இருப்பேன். கேரளத்தில் இடதுசாரிகளும் காங்கிரசும் ஆழமாக வேரூன்றி இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக தீவிர அரசியலை முன்னெடுத்து வருகின்றேன். எம்பி-க்களின் பதவிக்காலம் முடிந்தால் டெல்லி வீட்டைக் காலி செய்வது வழக்கமானதுதான். அதன்படி அங்கே வீட்டைக் காலிசெய்துவிட்டு நான் மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்பியிருப்பதை மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சியினரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கேரளத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு பெருந்துணையாக இருப்பேன் என யூகித்துத்தான் எதிர்க்கட்சிகள் எனக்கெதிராக இப்படியொரு சர்ச்சையைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் ஏடுகளில் தான் முதலில் இந்த செய்தி வெளியானது. இது முற்றிலும் பொய்.

கேரள மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருக்கிறது. விரைவில் அதற்காக போராட்டங்களை நடத்த உள்ளேன். கே ரயில் திட்டம் என்னும் பெயரில் கேரள மக்களின் நிலங்கள் சூறையாடப்படுகின்றன. இன்னொருபுறம் ஸ்வப்ணா தங்க கடத்தல் வழக்கு வேகம் பெற்றிருக்கிறது. அண்மையில் நடந்த திருக்காக்கரைத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி தோற்றுப்போனது. காங்கிரஸ் கட்சியில் அவர்களுக்குள்ளேயே பல குழப்பங்கள் இருக்கிறது. கேரள மக்கள் பாஜகவை நோக்கித் திரும்பிவிட்டார்கள். 2024 மக்களவைத் தேர்தலில் கேரளத்திலும் பாஜக தனது கணக்கைத் தொடங்கும்” என்றார்.

சுரேஷ் கோபியின் மகனும், நடிகருமான கோகுலிடம் பேசினோம், “என் அப்பா கல்லூரி நாட்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கத்தில் இருந்தார். இப்போது பாஜகவில் இருக்கிறார். ஒவ்வொரு தருணத்திலும் அவர் தெளிவான அரசியல் பார்வையுடன் இருக்கிறார். இவ்வளவு ஏன், மார்கிஸ்ட் கட்சியின் முன்னாள் முதல்வர் ஈ.கே.நாயனார், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் கருணாகரன் ஆகியோருடன்கூட அப்பாவுக்கு நல்ல நெருக்கம் இருந்தது. அரசியலைப் பொறுத்தவரை அப்பா எப்போதுமே தெளிவாகவே முடிவு எடுப்பார்” என்றார்.

சுரேஷ் கோபி நடித்து ஆறுமாதங்களுக்கு முன்பு வெளியான காவல் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது. தொடர்ந்து அதேபோல் அடுக்கடுக்காக படங்களில் கமிட் ஆகியிருக்கும் சுரேஷ் கோபி, 2024 மக்களவைத் தேர்தலிலும் பாஜக சார்பில் களம் இறங்குவார் என உறுதியாகச் சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

அதேநேரம், சுரேஷ் கோபி மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்பி இருப்பதால் தங்கள் தலைக்கு ஆபத்து ஏதும் வந்துவிடுமோ என கேரள பாஜக தலைகளும் கொஞ்சம் பயந்து போய்த்தான் கிடக்கிறார்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in