எடக்கு மடக்கு எதிர்க்கட்சிகள்; எப்படி சமாளிக்கிறார் ஸ்டாலின்?

ஸ்டாலின்
ஸ்டாலின்

"எதிர்க்கட்சி என்றால் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்?" இது, எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும்போது அவரைப் பார்த்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த திமுக தலைவர் ஸ்டாலின் கேட்ட கேள்வி. நிலைமைமாறி ஆட்சிக்கட்டிலில் ஸ்டாலின் அமர்ந்திருக்கிறார், எடப்பாடி எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். அதிமுகவும், பாஜகவும் பலமான எதிர் அரசியலை செய்து வருகின்றன. ஒவ்வொரு விஷயத்திலும் கடுமையான நிலைப்பாட்டை கையிலெடுத்து, தமிழக அரசின்மீது தாக்குதலை தொடுக்கின்றன. அவர்களின் எடக்கு மடக்கான தாக்குதல்களை எதிர்கொண்டு சரியானபடி சமாளிக்கிறாரா முதல்வர் ஸ்டாலின்?

அண்ணாமலை
அண்ணாமலை

பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருந்தாலும் திமுக எதிர்ப்பு அரசியலில் பாஜகவே முன்னிற்கிறது. மக்களின் உணர்வுகளைத் தூண்டி அதன்மூலம் அரசியல் லாபம் பார்க்கும் உத்தியை தமிழ்நாட்டிலும் அக்கட்சி தொடங்கியிருக்கிறது. அதற்கு உதாரணம், தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம். மாணவி மதம் மாற வலியுறுத்தப்பட்டார் என்று ஒரு காரணத்தைக் கையிலெடுத்துக் கொண்டு விவகாரத்தை பெரிதாக்கியது. உயர் நீதிமன்றத்தில் வழக்கு, தேசிய குழந்தைகள் ஆணைய விசாரணை, மேலிடக் குழு விசாரணை, சென்னையில் ஆர்ப்பாட்டம் என்று தமிழக அரசுக்கு அடுத்தடுத்து அழுத்தங்களை கொடுத்தது பாஜக.

ஆனாலும், அது அக்கட்சிக்கு எதிர்பார்த்த பலனைக் கொடுக்கவில்லை. திமுக அரசு இவர்களின் தொடர் போராட்டங்களை பெரிதுபடுத்தவில்லை. ஊர்மக்களும், சம்பந்தப்பட்ட பள்ளி மாணவிகளும் ஆட்சியர் முதல் ஆணையம் வரைக்கும் சென்று மதமாற்றக் குற்றச்சாட்டை பொய்யென்று சொன்னார்கள். அதனால், திமுகவை சிக்கவைக்கும் சூத்திரம் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு பலிக்கவில்லை.

கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட பகுதி
கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட பகுதி

அடுத்ததாக, சென்னையிலுள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட விவகாரத்தை பாஜக கையிலெடுத்தது. “திமுக ஆட்சிக்கு வந்து எட்டுமாத காலத்தில் வன்முறை அதிகரித்துவிட்டது. இந்தச் சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும்” என்றார் பாஜக தலைவர் அண்ணாமலை. கூடவே, மத்திய இணையமைச்சர் முருகன், பாஜக மேலிட இணைபொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்தனர்.

ஆனால், நள்ளிரவு 1.30 மணி அளவில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணையை முடுக்கிவிட்ட திமுக அரசு, பொழுது விடிவதற்குள் குற்றவாளியைக் கைது செய்து எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்தது. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக நலனுக்கு எதிராக பாஜக இருப்பதைக் கண்டித்து இதைச் செய்ததாக, கைதான கருக்கா வினோத் சொல்லியிருப்பதாக, பந்தை பாஜக பக்கமே திருப்பியும் விட்டது போலீஸ்.

நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய விவகாரத்திலும் பாஜக பெரிதாக அரசியல் செய்தது. நீட் தேர்வு தேவை என்று அண்ணாமலை மேடைக்கு மேடை முழங்கினார். உடனடியாக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, நீட் வேண்டாம் என்பது திமுகவின் நிலைப்பாடு மட்டுமல்ல... அனைத்துக் கட்சிகளின் நிலைப்பாடும் இதுதான் என்பதை பாஜகவுக்கும், மத்திய அரசுக்கும் முதல்வர் எடுத்துக்காட்டினார். நீட் தேர்வால் எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்தும் சமூக ஊடகங்கள் வழியாக பதிலடி கொடுத்தது திமுக.

இந்த விவகாரத்தில், அதிமுகவையும் வேறு வழியில்லாமல் அதன் நிலைப்பாட்டிலிருந்து இறங்கிவர வைத்திருக்கிறார் ஸ்டாலின் என்றே சொல்லலாம். முதலில் ஆளுநருக்கு ஆதரவாக, தமிழக அரசின் நிலைப்பாட்டை தாக்கி கடுமையான வார்த்தைகளால் கண்டனம் தெரிவித்தார்கள் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள். தமிழக அரசையும் அவர்கள் கடுமையாகச் சாடினார்கள். ஆனால், அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுகவும் கலந்துகொள்ளாது என்று அதிமுக அறிவித்ததை வாகாகப் பிடித்துக்கொண்ட ஸ்டாலின், அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளாததன் மூலமாக அதிமுக இரட்டை வேடம் போடுவதாகவும், தமிழக நலனுக்கு எதிராக இருப்பதாகவும் போட்டுத் தாக்கினார். இதையடுத்து இந்த விவகாரம் தங்களுக்கு எதிராக திரும்புவதை கண்ட அதிமுக, சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் சத்தமில்லாமல் கலந்துகொண்டு நீட் விலக்கு தீர்மானத்தை ஆதரித்தது.

நீட் தேர்வு விவகாரத்தை மையமாக வைத்து, தேசிய அளவிலும் தனது ஆதரவை பெருக்கிக்கொள்ள திமுக தவறவில்லை. 37 அரசியல் கட்சி தலைவர்களுக்கு, சமூக நீதி கூட்டமைப்பில் இணைய அழைப்பு விடுத்தார் முதல்வர் ஸ்டாலின். இதையும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கடுமையாக விமர்சித்தார். “தமிழகத்தில் கடந்த 9 மாத காலமாக அலங்கோல ஆட்சி நடத்தி வரும் மு.க.ஸ்டாலின் தன்னுடைய நிர்வாகத் தோல்வியை மறைக்க சமூக நீதி கூட்டமைப்பு என்ற பெயரில் நாடகம் ஆடுவதை நிறுத்திவிட்டு, தமிழகத்தின் முன்னேற்றத்துக்காகவும், தமிழக மக்களின் நலனுக்காகவும் முடிந்தால் ஏதாவது செய்தால் நல்லது” என்றார் எடப்பாடி. ஆனாலும் தேசிய அளவில் காங்கிரஸ் உட்பட பல முக்கிய கட்சிகள் ஸ்டாலின் பக்கம் நிற்பதாக அறிவித்தது, திமுகவுக்கு பக்கபலமானது.

தேர்தல் பிரச்சாரத்தை சேலத்தில் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, ‘திமுக அரசு புதிதாக எதையும் செய்யவில்லை, அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களையே தற்போது தொடங்கி வைக்கிறார் முதல்வர்’ என்று கடுமையாக விமர்சித்தார். மறுநாள் இணையவழி பிரச்சாரத்தை தொடங்கிய முதல்வர், ‘மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்து வசதி, ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, முகாம்வாழ் இலங்கைத் தமிழர்க்கு 317 கோடி ரூபாயிலான திட்டங்கள், அயோத்திதாச பண்டிதருக்கு நினைவு மணி மண்டபம், விழுப்புரத்தில் சமூக நீதிப் போராளிகளுக்கு மணிமண்டபம், பஞ்சுக்கு ஒரு விழுக்காடு நுழைவுவரி ரத்து, தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையம் உருவாக்கம்’ என திமுக அரசு நிறைவேற்றியிருக்கும் திட்டங்களை பட்டியலிட்டார்.

‘இல்லம் தேடிக்கல்வி, மக்களைத்தேடி மருத்துவம், ‘நம்மைக் காக்கும் 48’ திட்டம், ஏழு மாதங்களில் மூன்று உலக முதலீட்டாளர் மாநாடுகள், அதன்மூலம் 56,230 கோடி முதலீடுகள், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் 2,29,216 மனுக்களுக்கு தீர்வு, 1,628 கோடி ரூபாய் மதிப்புள்ள 432 ஏக்கர் பரப்பளவு திருக்கோயில் நிலங்கள் மீட்பு’ என்ற அவரது நீண்ட பட்டியல் எடப்பாடியை வாய் மூடவைத்தது.

“தனது சொந்த மாவட்டமான சேலத்துக்கு எடப்பாடி செய்திருப்பது என்ன என்பதை பட்டியலிட முடியுமா?” என்று ஸ்டாலின் கேட்ட கேள்விக்கு, இதுவரை பதில் சொல்லவில்லை எடப்பாடி. சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என்ற எடப்பாடிக்கு கோடநாடு கொலை, கொள்ளையை உதாரணமாக்கி பதில்சொன்னார் ஸ்டாலின்.

எதிர்க்கட்சியினரின் இந்த எடக்கு மடக்குகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் அதை சமாளிக்கும் விதம் குறித்தும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் சிவசங்கரிடம் கேட்டபோது, ‘’எங்கள் தலைவர் சொன்னதைச் செய்து கொண்டிருக்கிறார். அவரின் செயல்பாடுகளை முன்வைத்து நாங்கள் மக்களைச் சந்திக்கிறோம். ஆனால், அதிமுகவினர் மக்களின் கருத்துக்கு விரோதமானவற்றை கையில் எடுக்கிறார்கள். அது மக்களிடம் எடுபடவில்லை. உதாரணத்துக்கு, அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தையே எடுத்துக் கொள்வோம். உண்மை என்ன என்பதை உலகம் அறிந்துகொண்டு விட்டது. மாணவியின் வீீடியோவும் வெளியாகி அவர்கள் அம்பலப்பட்டு நிற்கிறார்கள்.

அமைச்சர் சிவசங்கர்
அமைச்சர் சிவசங்கர்

நீட் விவகாரத்திலும் அப்படித்தான் நடந்திருக்கிறது. தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும், மக்களும் ஓரணியில் நிற்கிறார்கள். அதிமுகவினர் மட்டும் அதற்கு நேர் எதிராக நிற்கிறார்கள். பாஜக தலைவர் அண்ணாமலையை மக்களே பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதனால் நாங்களும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அவர் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாகவும், பொதுக்கருத்துக்கு மாறாகவும்தான் பேசிவருகிறார். பிரதமர் மோடியையே தமிழ்நாட்டு மக்கள் தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படி இருக்கும்போது அண்ணாமலையை தலைவராக ஏற்றுக்கொள்வார்களா?

தமிழக முதல்வர் கொள்கை ரீதியாக தெளிவாகப் போய்க் கொண்டிருக்கிறார். இந்திய அரசியல்வாதிகளில் கொள்கை ரீதியாகப் பேசிக் கொண்டிருப்பவர் அவர் ஒருவர்தான். ஓபிசி இட ஒதுக்கீடு, நீட் தேர்வு விவகாரம், விவசாயிகள் போராட்டம், இந்திய குடியுரிமை சட்டம் என்று எல்லா விசயத்திலும் திமுக மட்டும்தான் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறது. தலைவர் அப்படி இருப்பதால் தமிழ்நாட்டின் உரிமைகளை காப்பாற்றும் நடவடிக்கைகளில் தெளிவாகப் போய்க் கொண்டிருக்கிறார். அப்படி இருக்கும்போது, உண்மைக்கு மாறாகப் பேசிவரும் எதிர்க்கட்சிகளுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க எங்கள் தலைவரும் நாங்களும் விரும்பவில்லை” என்றார்.

எதிர்க்கட்சிகள் தரப்பில் மாத்திரமல்ல... உள்ளாட்சித் தேர்தல் பங்கீடு உள்ளிட்ட பிரச்சினைகளில், திமுக கூட்டணிக் கட்சிகள்கூட பெரிய அளவில் விமர்சனங்களை வீசமுடியாத அளவுக்கு செக் வைத்து, சமாளித்து வரும் ஸ்டாலினை திமுகவினரே வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் நிஜமே!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in