பிரதமர் நாற்காலியை நோக்கி நகர்கிறாரா ஸ்டாலின்?

சமூகநீதி கூட்டமைப்புக்கான அழைப்பின் அரசியல்
பிரதமர் நாற்காலியை நோக்கி நகர்கிறாரா ஸ்டாலின்?

தமிழ்நாட்டின் முதலமைச்சராக யார் இருந்தாலும், அவர்கள் அடிக்கடி டெல்லிக்குக் கடிதம் எழுதுவது கேலியாகப் பார்க்கப்படும். கருணாநிதியாக இருந்தாலும் சரி, ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி, அதுதான் நிலை. பிற மாநிலத் தலைவர்களுக்கு எழுதப்படும் கடிதங்களும் பெரிதாகக் கவனம் ஈர்க்காது. ஆனால், தமிழகத்தின் இன்றைய முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம் அகில இந்திய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பை உருவாக்க ஒத்துழைக்குமாறு 37 கட்சித் தலைவர்களுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம்தான் அது.

“பாஜக தன் வாழ்நாளில் ஒருபோதும் தமிழக மக்களை புரிந்துகொள்ள முடியாது. உங்களால் தமிழ்நாட்டை ஆளவே முடியாது என்று மக்களவையில் ராகுல் காந்தி பேசியதுகூட, ஸ்டாலின் கடிதத்தின் விளைவுதான்” என்று காங்கிரஸ்காரர்களே சொல்கிறார்கள். ஸ்டாலினின் கடிதத்தையும், ராகுலின் உரையையும் ஒப்பிடும் வகையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்பியுமான பீட்டர் அல்போன்ஸ் தனது ட்விட்டர் பதிவில், “தமிழகத்தில் கருக்கொள்ளும் புயல் டெல்லியில் சூறாவளியாக மாறியிருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதேநேரத்தில், ‘இது சமூகநீதிக் கூட்டமைப்பில்லை; அரசியல் கூட்டமைப்பு’ என்கிற விமர்சனமும் எழுந்திருக்கிறது. “இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் சமூக நீதிக்கு என்ன பாதிப்பு வந்துள்ளது என யாருக்கும் புரியவில்லை. தான் பிரதமராக வேண்டும் என்ற எண்ணத்தில் 2024 -ல் வரும் தேர்தலுக்கு இப்போதே முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறாரோ எனத் தோன்றுகிறது” என்று அறிக்கை விட்டிருக்கிறார், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

உ.பலராமன்
உ.பலராமன்

அரசியல் இருக்கிறதா, இல்லையா?

இதுகுறித்து சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான உ.பலராமனிடம் கேட்டபோது, “எல்லோருக்கும் எல்லா உரிமைகளும் சமமாகக் கிடைப்பதுதான் சமூகநீதி. இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) மூலம் நாட்டையும், கட்சியையும் ஒருங்கிணைத்து அடுத்தடுத்த தேர்தல்களைச் சந்திக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 10 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னார். காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அதற்கு முழுமையாகச் செவிசாய்க்கவில்லையோ என்று நினைக்கிறேன். இன்று அதை ஸ்டாலின் செய்திருக்கிறார். அவர் 37 தலைவர்களுக்குக் கடிதம் எழுதியதில் அரசியல் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஏனென்றால் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்றால், இன்றைக்கிருக்கிற மத்திய ஆட்சி மாறியாக வேண்டும். நாடு முழுவதும் உள்ள பல்வேறு கொள்கைகளைக் கொண்ட கட்சிகளையும், மக்களையும் ஒருங்கிணைப்பதற்கு இது ஒரு அற்புதமான திட்டமாக இருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த வேலையைத் தொடங்கியிருக்கிறார். தமிழக மக்களுக்கு மட்டுமல்ல, இந்திய மக்களுக்கும் சேர்த்து உரிமையைக் கேட்கலாம் என்பதுதான் ஒரு பொதுத்தலைவரின் எண்ணமாக இருக்கும். அந்த அளவுக்கு நமது முதல்வர் உயர்ந்திருப்பதைப் பார்த்து உண்மையில் நாம் பெருமைப்பட வேண்டும்.

இந்தக் கடிதத்துக்கு 37 கட்சித்தலைவர்களும் சரியாக எதிர்வினையாற்றினால், அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பு கொள்கை ரீதியான ஒரு அணி உருவாக வாய்ப்பு ஏற்படும். இன்று நாட்டை ஒருங்கிணைப்பதற்கான சூட்சுமமான ஆயுதம் இதுதான். இந்தியாவில் முதல் அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளக் காரணமாக இருந்தது பெருந்தலைவர் காமராஜர். பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கவே, நேருவிடம் வலியுறுத்தி அந்தத் திருத்தத்தைக் கொண்டுவந்தது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி. சமூகநீதியில் முன்னணியில் உள்ள தமிழ்நாடு, இந்தியாவுக்கே வழிகாட்ட வேண்டியது காலத்தின் தேவைதான்” என்றார்.

எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ
எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினரான எஸ்.எஸ்.பாலாஜியிடம் இதுகுறித்து கேட்டபோது, “முதல்வர் கடிதம் எழுதியதற்கான காரணம், வெறும் அரசியல் நகர்வு அல்ல. மக்களை அரசியல்படுத்துவதற்கான நகர்வு. இன்று சமூகநீதிக்கு எதிரான சக்திகள் ஒன்றுதிரண்டு சமூகநீதி மீது பெருந்தாக்குலைத் தொடுக்கிறார்கள். எனவேதான், அகில இந்திய அளவில் இத்தகைய கூட்டமைப்பு தேவைப்படுகிறது. உதாரணமாக, நீட் தேர்வு என்ற பெயரில் கிராமப்புற, ஏழை மாணவர்களைப் பாதிக்கிற செயலில் தீவிரம் காட்டுகிறது மத்திய அரசு. ஒட்டுமொத்த தமிழ்நாடும் அதை எதிர்த்தாலும்கூட, அனைத்துக் கட்சிகளும் இணைந்து நீட் விலக்கு சட்டம் கொண்டுவந்தாலும்கூட அதை நிராகரிக்கிறது மத்திய பாஜக அரசு. அவர்கள் கொண்டுவந்திருக்கிற நீட் தேர்வில்கூட இடஒதுக்கீடு இல்லை. எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின்கீழ் இருக்கிற அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமே நீட் தேர்விலும் இடஒதுக்கீடு இருக்கிறது. மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழங்களில் இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கு அளித்திருக்கிறார்கள். ஏற்கெனவே, ஓபிசி இடஒதுக்கீட்டை அழித்தொழிப்பதற்காக க்ரீமிலேயர் முறையைப் புகுத்திவிட்டார்கள். அடுத்து எஸ்சி, எஸ்டி ஒதுக்கீட்டிலும் க்ரீமிலேயரைக் கொண்டுவரும் முயற்சி நடக்கிறது. அதேநேரத்தில் முன்னேறிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு (இ.டபிள்யு.எஸ்) என்ற பெயரில் 10 சதவீத ஒதுக்கீட்டைக் கொண்டு, சமூகநீதியை அழித்தொழிக்கப் பார்க்கிறார்கள். இதற்கு எதிராகத்தான் இந்தக் கூட்டமைப்பு.

முதல்வரின் கடிதத்தை உன்னிப்பாகக் கவனித்தால் இன்னொரு உண்மையும் புரியும். சாதி ரீதியாக ஒடுக்கப்படுபவர்களுக்கான சமூகநீதிக்காக மட்டும் அவர் குரல் கொடுக்கவில்லை. பெண்களுக்கான இடஒதுக்கீடு, மாற்றத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு என்று அவர்களுக்கான சமூகநீதிக்கும் குரல் கொடுத்திருக்கிறார். அதேநேரத்தில் நாட்டில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ற அளவுக்கு இடஒதுக்கீடு இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார் முதல்வர்” என்றார்.

ஆனால், “பிரதமர் பதவிக்காகத்தான் இந்தக் கடிதத்தை முதல்வர் அனுப்பியிருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருக்கிறாரே?” என்று கேட்டபோது, “ஸ்டாலின் பிரதமராக அதிமுக விரும்புமா என்ன? சமூகநீதி கருத்தை ஓரளவுக்கேனும் ஏற்றுக்கொள்கிற கட்சிகளுக்கு எல்லாம் கடிதம் அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அதிமுக ஒருங்கிணைப்பாளருக்கும் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அகில இந்திய அளவிலான ஒரு முயற்சியை, அதன் உள்ளர்த்தத்தைப் புரிந்துகொண்டு ஆதரிக்க வேண்டியது சமூகநீதியில் அக்கறை கொண்டவர்களின் கடமை” என்றார்.

அகில இந்திய அரசியலில் ஆர்வம்

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே, மு.க.ஸ்டாலின் பிரதமராகவே ஆவார் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சொன்னார். வேறு சிலரும் அதை வழிமொழிந்தார்கள். ஆக, ஸ்டாலினுக்கு அந்த ஆசை இல்லை என்று சொல்லிவிட முடியாது. கருணாநிதியைப் போல, “என்னுடைய உயரம் எனக்குத் தெரியும்” என்று அகில இந்திய அரசியலில் இருந்து விலகியிருக்க ஸ்டாலின் விரும்பவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஒருவேளை ஸ்டாலின் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகிறார் என்றே வைத்துக்கொள்வோம். அந்தக் கனவு நிறைவேறினால், தமிழ்நாட்டுக்கும், தென்னிந்தியாவுக்கும் பெருமைதானே?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in