கல்வியில் காவி மயம் என்பது சாதி மயமா?

கல்வியில் காவி மயம் என்பது சாதி மயமா?

கடந்த மார்ச் 19-ம் தேதி உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் தேவ் சமஸ்கிருதி விஷ்வ வித்யாலயாவில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான தெற்காசிய நிறுவனம் திறக்கப்பட்டது. இதை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசிய பேச்சு ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து கல்வியாளர்கள் இன்னும் மீளமுடியாத நிலையில் உள்ளனர். “கல்வியை காவி நிறமாக்குவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளோம். ஆனால், காவி மயமாக்குவதில் என்ன தவறு?” என்று வெங்கய்ய நாயுடு எழுப்பிய கேள்வி தான் இந்தியா முழுவதும் இப்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

மேலும் அவர் பேசுகையில், "நமது பாரம்பரியம், கலாச்சாரம், முன்னோர்கள் பற்றி நாம் பெருமைப்பட வேண்டும். நாம் நமது வேர்களுக்குத் திருப்ப வேண்டும். நாம் நமது காலனித்துவ மனப்பான்மையை கைவிட்டு நம் குழந்தைகளுக்கு அவர்களின் இந்திய அடையாளத்தில் பெருமிதம் கொள்ள கற்றுக்கொடுக்க வேண்டும். முடிந்தவரை இந்திய மொழிகளைக் கற்க வேண்டும். நாம் நம் தாய்மொழியை நேசிக்க வேண்டும். அறிவுப் பொக்கிஷமாக விளங்கும் நமது வேதங்களை அறிய சம்ஸ்கிருதத்தைக் கற்க வேண்டும்” என்றும் பேசியுள்ளார். தாய்மொழியை நேசிக்கச் சொல்லும் வெங்கய்யா நாயுடு, எதற்கு சம்ஸ்கிருதத்தைக் கற்க வேண்டும் எனச் சொல்கிறார் என்று திராவிட, இடதுசாரி சிந்தனையாளர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இந்தியா போன்ற பன்முகக் கலாச்சாரம் கொண்ட நாட்டில் மதக்கல்வி முறையை திணிப்பதுப்போல குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசுவது மதநல்லிணக்கத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்ற அச்சத்தை கல்வியாளர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், வெங்கய்ய நாயுடு பேசியது தனிமனித ஒழுக்கம் சார்ந்தது என்று அதற்கு ஆதரவு நிலைபாடு கொண்டவர்களும் உள்ளனர். வெங்கய்யா நாயுடு பேசிய காவிமயப் பேச்சு குறித்து என்ன நினைக்கிறார்கள் என்று பேராசிரியர்களிடம் கேட்டோம்.

மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரி துணை முதல்வர் வி.பார்த்தசாரதி கூறுகையில், “சர்வே பவந்து சுகினா (அனைவரும் மகிழ்ச்சியாக இருங்கள்) மற்றும் வசுதைவ் குடும்பம் (உலகம் ஒரே குடும்பம்) ஆகியவை நமது பண்டைய நூல்களில் உள்ள தத்துவங்களை வெங்கய்ய நாயுடு குறிப்பிட்டுள்ளார். இந்த தத்துவங்கள் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதத்தில்தான் உள்ளன. அவற்றைத்தான் அவர் குறிப்பிட்டுள்ளார். தனிமனித ஒழுக்கத்தை ராமாயணமும், ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதை மகாபாரதமும் உலகிற்கு வழிகாட்டுகின்றன. ஆனால், குரான், பைபிள் அப்படி சொல்கின்றனவா? யாரெல்லாம் முஸ்லிமாக மாறியிருக்கிறார்களோ அவர்களிடம் மனிதநேயம் செலுத்த வேண்டும் என்று குரான் சொல்கிறது. இயேசு வாழ்ந்த விதத்தை தான் பைபிள் சொல்கிறது. ஆனால், அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று இதிகாசங்கள் சொல்வதனால்தான், அவற்றை குடியரசு துணைத்தலைவர் மேற்கோள்காட்டியுள்ளார். அதில் என்ன தவறு இருக்கிறது ?” என்று கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து பேராசிரியர் அருணனிடம் கேட்டதற்கு, “கல்வியைக் காவி மயமாக்காதீர்கள் என்றால், அதை பாரம்பரியம் என்கிறார் வெங்கய்யா நாயுடு. ராமாயணம், மகாபாரதத்தில் மட்டும்தான் பாரம்பரியம் இருக்கிறதா? பாரம்பரியம் என்றால், சிந்துவெளி நாகரிகத்தில் இருந்துதான் துவங்க வேண்டும். ஆனால், அவருக்கு வேதநாகரிகம், அதாவது பிரமாணிய நாகரிகம்தான் தேவைப்படுகிறது. கல்வியில் நீதிபோதனை வேண்டும் என்றால், குரான், பைபிளைச் சேர்க்க வேண்டாமா? மதம் சார்ந்த சிந்தனைகளைத் தாண்டி இந்தியா முழுவதும் தோன்றிய சமூக சீர்த்திருத்தவாதிகள் பலர் சிறந்த கருத்துகளைக் கூறியுள்ளனர். அவற்றை நீதிபோதனைகளாக பாடங்களில் சொல்லித்தர வேண்டாமா? நமது வேர்கள் பன்மைத்தன்மை வாய்ந்தவை. ஆனால், ஒற்றை மொழி, ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றை நாடு பேசுகிறவர்களுக்கு பன்மைத்தன்மை பிடிக்காது. அதனால்தான் கல்வியைக் காவி மயமாக்குவதில் என்ன தவறு இருக்கிறது என்ற கேள்வியை வெங்கய்யா நாயுடு மூலம் எழுப்புகின்றனர்" என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "வெங்கய்ய நாயுடு தாங்கிப் பிடிக்கும் ராமாயணம், மகாபாரதம், பகவத்கீதை ஆகியவை வர்ணாசிரமத்தை ஆதரிப்பவை. அவை சூத்திரர்கள், பெண்கள் கல்வி கற்பதை ஏற்கவில்லை. கல்வியில் காவி மயம் என்பது சாதி மயமாகும் ஆபத்து உள்ளது. குடியரசு துணைத்தலைவர் சொல்லும் காவி மயம் ஆர்எஸ்எஸ் சிந்தனை. இது மாணவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. எனவே, ஜனநாயக சக்திகளுக்கும், சமூக நீதியாளர்களுக்கும் இன்னும் நிறைய வேலையிருக்கிறது. ஆகவே, குலக்கல்வி முறையை நோக்கி இந்தியக்கல்வி முறை செல்லாமல் தடுக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in