பாஜகவில் இணைகிறாரா ஓபிஎஸ்?

பழனிசாமியை முடக்க பாஜக போடும் பலே கணக்கு!
பாஜகவில் இணைகிறாரா ஓபிஎஸ்?

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை ஜனவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஓபிஎஸ் பாஜகவில் இணைகிறார் என்ற நம்பமுடியாத செய்தி ஒன்று பாஜக வட்டாரத்தில் பரபரக்கத் தொடங்கி இருக்கிறது.

இப்படி நடக்குமா... இது உண்மைதானா? என்று பாஜக வட்டாரத்தில் பேசியபோது, ” அவர் பாஜகவில் சேருவது உறுதி. டெல்லியில் அமித் ஷா, மோடி உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் சேர நினைக்கிறார் அதனால் தான் தள்ளிப் போகிறது. இல்லாவிட்டால் இந்நேரம் சேர்ந்திருப்பார். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி முடிந்ததும் ஓபிஎஸ் பாஜகவில் இணைவது நிச்சயம்” என்று அடித்துச் சொன்னார்கள்.

“நான் தான் அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர்” என என்னதான் பதினாறு வயதினேலே கமல் கணக்காக ஓபிஎஸ் சொல்லிக் கொண்டே இருந்தாலும் அதிமுக கைவசத்தில் இருப்பது என்னவோ ஈபிஎஸ் பக்கம் தான். இது ஓபிஎஸ்ஸுக்கும் தெரியும். ஆனாலும் தனது மகனின் அரசியல் எதிர்காலம் உள்ளிட்ட சில அஜெண்டாக்களுக்காக அவர் இன்னும் அதிமுக அதிகாரத்தைப் பிடிக்கத் தொங்கிக் கொண்டிருக்கிறார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக வாக்கு வங்கியை வைத்துத்தான் அடுத்த நிலைக்கு உயர வேண்டும் என அப்பட்டமாக நினைக்கிறது பாஜக. அதிமுகவுடன் கூட்டணி வைத்து நினைத்ததைச் சாதிக்க வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாவிட்டால் அந்தக் கட்சியை சிதைத்துவிட்டு அந்த இலக்கை அடைய வேண்டும். இதுதான் பாஜகவின் பிளான்.

அசுர பலத்துடன் இருக்கும் திமுக கூட்டணியைச் சமாளிக்க வேண்டுமானால், அதிமுகவின் சிதறல்களான சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் அனைவருமே அதிமுகவுக்குள் மீண்டும் ஐக்கியமாக வேண்டும் என நினைக்கிறது பாஜக. ஆனால், அதை மூர்க்கத்தனமாக எதிர்க்கிறது எடப்பாடி முகாம். இதனால் அடுத்தகட்டம் பற்றி தீவிர யோசனைக்குப் போய்விட்டது பாஜக.

இதுகுறித்து பாஜக தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், “2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஜெயித்தாலும் ஜெயிக்காவிட்டாலும் மீண்டும் மத்தியில் நாங்கள் தான் ஆட்சி அமைக்கப் போகிறோம். இதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேசமயம், 2026 தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதுதான் பாஜக தலைமையின் தொலைநோக்குத் திட்டம். அதற்கான வெள்ளோட்டமாக மக்களவைத் தேர்தலை பார்க்கிறோம்.

இது விஷயமாக அண்மையில் அமித் ஷாவை சந்தித்துப் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, ‘மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி என்றால் நமக்கு ஒற்றை இலக்கத்தில் தான் தொகுதிகளைத் தருவார்கள். அதில் ஒருசில தொகுதிகளை ஜெயிப்பதால் நமக்கு எந்தப் பிரயோஜனமும் இருக்கப் போவதில்லை. 2026-ல் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி என்ற திட்டத்துக்கு இது எந்த விதத்திலும் உதவாது. அதற்குப் பதிலாக நாமே தமிழகத்தில் கூட்டணியைக் கட்டமைப்போம். நமது தலைமையில் கூட்டணியை அமைப்போம். இதற்கு ஈபிஎஸ் ஒத்துவரமாட்டார். அவரை நாம் கண்டுகொள்ள வேண்டாம். அதற்குப் பதிலாக, தினகரன், சசிகலா, பாமக, ஐஜேகே, புதிய தமிழகம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் சேர்க்கலாம். திமுக மீது கடும் அதிருப்தியில் இருக்கும் நடிகர் விஜயும் அரசியலுக்கு வரும் ஆர்வத்தில் இருக்கிறார். பேச வேண்டிய விதத்தில் பேசினால் அவரும் நமது கூட்டணிக்குள் வந்துவிடுவார்’ என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார். அமித் ஷாவும் இதை அமோதித்து இருக்கிறார்.

அண்ணாமலை - அமித் ஷா சந்திப்புக்குப் பிறகுதான் ஓபிஎஸ்ஸை பாஜகவில் இணைக்கும் பேச்சுகளும் அடிபட ஆரம்பித்தது. ஈபிஎஸ்ஸை சமாளித்து அதிமுகவை கைப்பற்றும் அளவுக்கு தன்னிடம் தெம்பில்லை என்பது ஓபிஎஸ்ஸுக்கு நன்றாகத் தெரியும். அதேசமயம், ஈபிஎஸ்ஸின் அரசியல் வாழ்க்கையை அஸ்தமிக்கவைக்கும் வேலையை நிச்சயம் பாஜக செய்யும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. அதற்காகவே அவர் தன்னை பாஜகவில் இணைத்துக்கொள்ள ஆயத்தமாகி விட்டார். அவரால் இனி தனியாக இயக்கம் நடத்தி ஜெயிக்கமுடியாது என்பதும் இதற்குக் காரணம்.

பாஜகவுக்கு வந்தால் அவருக்கு மாநில அளவிலான ஒரு முக்கிய பதவி தரப்படும். அதேபோல், அவரது மகன் ரவீந்திரநாத் குமார் தேனி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்படுவார். அங்கே வெற்றிபெற்றால், ஓபிஎஸ் நீண்ட நாட்களாக மன்றாடிக் கேட்டுக்கொண்டிருக்கும் மத்திய அமைச்சர் பதவியும் ரவீந்திரநாத்துக்கு சாத்தியமாகும். 2026-ல் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும் பட்சத்தில் அங்கே ஓபிஎஸ்ஸுக்கும் முக்கிய இடம் இருக்கும். இதுதான் பாஜக போட்டு வைத்திருக்கும் பி பிளான். ஈபிஎஸ் இதற்கு மேலும் இழுபறி செய்தால் இந்த பிளானை மெல்ல மெல்ல செயல்படுத்த ஆரம்பிக்கும் பாஜக” என்று சொன்னார்கள்.

இது தொடர்பாக மேலும் பேசிய அவர்கள், “ஈபிஎஸ்ஸை பொறுத்தவரை அதிமுகவை இப்போது கவுண்டர் கட்சி கணக்காகவே வைத்திருக்கிறார். அதே சாதி கணக்கை வைத்துத்தான் பாஜகவும் கூட்டணியை கட்டமைக்க நினைக்கிறது. தினகரன், ஓபிஎஸ், சசிகலாவை அணிக்குள் கொண்டு வருவதன் மூலம் முக்குலத்தோர் வாக்கு வங்கி பாஜக பக்கம் திரும்பும் என கணிக்கிறோம். கவுண்டர் பெல்ட்டில் தேமுதிக இன்னமும் செல்வாக்குடன் இருக்கிறது. தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவருவதன் மூலம் கவுண்டர் பெல்ட்டிலும் கணிசமான வாக்குகளை இழுக்க முடியும். டாக்டர் கிருஷ்ணசாமியையும், பாரிவேந்தரையும் உள்ளே இழுத்துப் போட்டால் பட்டியலினம் மற்றும் உடையார் சமூகத்து வாக்குகளால் பாஜக அணிக்கு பலம் சேர்க்க முடியும். பாமக எங்கள் அணியில் இருக்கும்பட்சத்தில் வன்னியர் ஓட்டுகளையும் பாஜக அணிக்கு சாதகமாக்க முடியும். கூடுதல் பலத்துக்கு இருக்கவே இருக்கிறார் விஜய். இந்தக் கணக்குகளை எல்லாம் போட்டுத்தான் அண்ணாமலை, ‘2026-ல் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி’ என்கிறார்.

என்னதான் பாஜக அணி திரட்டினாலும் அதிமுக என்ற கட்சி ஈபிஎஸ் தலைமையில் இருக்கிறதே என்று கேட்கலாம். ஆனால், அதையும் சமாளிக்கும் வித்தையும் பாஜகவுக்குத் தெரியும். வழிக்கு வராதபட்சத்தில் ஈபிஎஸ்ஸுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலையை பாஜக தலைமையால் உருவாக்க முடியும். அப்படியொரு நிலை ஏற்பட்டால் ஈபிஎஸ் தலைமையிலான அதிமுகவை சாதி கட்சி அளவுக்கு சுருங்கிவிடவும் சான்ஸ் இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் தினகரன் தரப்பு தங்கள் செல்வாக்கை நிரூபித்துக் காட்டிவிட்டால் அவர்கள் வசமே அதிமுகவை ஒப்படைத்துவிடும் உத்தியும் பாஜக தலைமைக்குத் தெரியும்” என்று சொன்னார்கள்.

பாஜகவுடன் எந்தக் காலத்திலும் ஒட்டுமில்லை உறவுமில்லை என அறிவித்தார் ஜெயலலிதா. ஆனால், அவரது மறைவுக்குப் பிறகு அதிமுகவின் கையைப் பிடித்தே பாஜக தன்னை வளர்த்துக் கொண்டுவிட்டது. இந்த வளர்ச்சியானது இப்போது அதிமுகவையே அந்தலை சிந்தலையாக்கும் நிலைக்கு வந்துவிட்டது. இது அத்தனை நல்லதல்ல. அதிமுக அழிந்தால் அது திமுகவுக்கும் தான் கேடு. எனவே, அதிமுகவை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு திமுகவுக்கும் இருக்கிறது” என்று விவரம் தெரிந்த அரசியல்வாதிகள் ஆரம்பத்திலேயே அடித்துக் கொண்டார்கள். அவர்கள் சொன்னதெல்லாம் மெல்ல மெல்ல நடக்க ஆரம்பித்திருக்கிறது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in