பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை: திமுகவில் தண்டனை துறையா?

பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை: திமுகவில் தண்டனை துறையா?
அமைச்சர் ராஜ கண்ணப்பன்

போக்குவரத்துத் துறையும் அத்துறையின் அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பனும் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வந்த நிலையில், அத்துறையிலிருந்து அவர் அதிரடியாகத் தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார். கடந்த 10 மாதங்களாகவே இது குறித்து தகவல்கள் வெளியாகிவந்த நிலையில், முதுகுளத்தூரில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனை சாதி பெயரைச் சொல்லி திட்டிய விவகாரம், ராஜ கண்ணப்பன் மீது அதிரடி நடவடிக்கை பாய காரணமாக இருந்தது. முக்கியமான துறையான போக்குவரத்துத் துறையிலிருந்து, அவரை பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு மாற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்த பரிந்துரையை ஏற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

அதன்படி சக்திவாய்ந்த துறையான போக்குவரத்து துறையிலிருந்து ராஜ கண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு மாற்றப்பட்டார். பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையைக் கவனித்து வந்த சிவசங்கர் போக்குவரத்து துறை அமைச்சராகியிருக்கிறார். சாதியைச் சொல்லி திட்டிய ராஜ கண்ணப்பனை சாதிகள் தொடர்புடைய பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு மாற்றியிருப்பதும் மு.க.ஸ்டாலின் அரசுக்கு எதிராக விமர்சனத்தைக் கிளப்பியிருக்கிறது. இதெல்லாம் ஒரு புறம் இருக்க, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை திமுகவில் தண்டனை துறையா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

கடந்த, 2006-11 காலகட்டத்தில் கருணாநிதி ஆட்சியிலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது.

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

2006-ல் திமுக ஆட்சி அமைந்தபோது பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்தான் பொறுப்பேற்றார். ஆனால், இடையில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு மாற்றப்பட்டார். அன்று தென் மண்டலத்தில் மு.க.அழகிரி கோலோச்சிக் கொண்டிருந்தார். விருதுநகரின் இன்னொரு அமைச்சரான அன்றைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவரோடு இணக்கமாக இருந்தார். ஆனால், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனோ அழகிரியிடமிருந்து ஒதுங்கி இருந்தார். இதனால் அவரை டம்மியாக்க, காய் நகர்த்தி, கருணாநிதிக்கு அழகிரி அழுத்தம் கொடுத்து கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும் அழகிரி மாற்றியதாக அன்று திமுகவில் பேசப்பட்டது.

இன்றும் ராஜ கண்ணப்பனை மாற்ற முடிவு எடுத்தவுடன் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்குத்தான் அவரை மாற்றியிருக்கிறார்கள். ஆக, திமுகவைப் பொறுத்தவரை பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை என்பது மாண்புமிகு அமைச்சர்களுக்குத் தரும் தண்டனை துறையா என்ற கேள்வி எழுவது இயல்புதானே?!

Related Stories

No stories found.