பாஜகவை பதறவைத்த ஆக்‌ஷன் பிளான்: பிரதமர் வேட்பாளராகிறாரா நிதீஷ்குமார்?

பாஜகவை பதறவைத்த ஆக்‌ஷன் பிளான்: பிரதமர் வேட்பாளராகிறாரா நிதீஷ்குமார்?

இந்தியாவின் பல மாநிலங்களின் அரசுகளை அசைத்துப்பார்த்துக்கொண்டிருக்கும் பாஜகவையே, ஒரே நாளில் அதிர வைத்திருக்கிறார் நிதீஷ்குமார். காலையில் கூட்டணியை விட்டு விலகி, மாலையில் ராஜினாமா செய்து, அடுத்த சில மணி நேரங்களிலேயே மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரியிருக்கிறார் நிதீஷ்.

243 உறுப்பினர்களைக் கொண்ட பிஹாரில் ஆட்சியமைக்க 122 இடங்களே போதும் என்ற நிலையில், ஆர்ஜேடி கட்சிக்கு 79 இடங்களும், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 19 இடங்களும், சிபிஎம்-எல்க்கு 12 இடங்களும் உள்ளதால் சுமார் 160 உறுப்பினர்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற உரிமை கோரியுள்ளார் நிதீஷ் குமார்.

2020ம் ஆண்டு பிஹார் சட்டமன்ற தேர்தலில் பாஜக 77 இடங்களில் வென்ற நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 இடங்கள் மட்டுமே கிடைத்தது. இந்த சூழலில் குறைவான இடங்களில் வென்ற நிதீஷ் குமாரை முதல்வர் ஆக்கியது தேசிய ஜனநாயக கூட்டணி. மேலும் துணை முதல்வர் மற்றும் முக்கிய இலாகாக்களை தன்வசம் வைத்துக்கொண்டது பாஜக. இதனால் ஆட்சியமைத்தது முதலே நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதன் காரணமாக பாஜக அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் நிதீஷ்குமாரை அடிக்கடி வெளிப்படையாகவே கடுமையாக விமர்சித்து வந்தார்கள். எனவே பாஜக மீது அதிருப்தியில் இருந்த நிதீஷ்குமார் கடந்த சில மாதங்களாக பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்காமல் தவிர்த்து வந்தார்.

இந்த சூழலில் கடந்த மாதம் டெல்லியில் நடந்த முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழா, ஜனாதிபதி திரௌபதி முர்முவின் பதவியேற்பு விழா, நிதி ஆயோக் கூட்டம் உள்ளிட்ட மத்திய அரசு ஏற்பாடு செய்த எந்த நிகழ்வுகளிலும் பங்கேற்காமல் இருந்தார் நிதீஷ்குமார். இதிலிருந்தே அவர் பாஜகவிடமிருந்து விலகி வருகிறார் என்ற சந்தேகம் எழுந்து வந்தது.

முக்கியமாக மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவின் கிளர்ச்சி நிதீஷ்குமாரை அதிகமாக சிந்திக்க வைத்துவிட்டது என்றே சொல்லலாம். எங்கே தனது கட்சியிலும் ஒரு ஷிண்டேவை பாஜக வளர்த்து விடுமோ என்ற அச்சப்பட்டார் நிதீஷ். மேலும் கடந்த தேர்தலில் தங்கள் கூட்டணியில் இருந்த பாஜக அதிக இடங்களில் வென்றதையும் நிதீஷால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதே நிலை நீடித்தால் தனது கட்சி காணாமல் போக வாய்ப்புள்ளதாக கணக்கு போட்டார் நிதீஷ்குமார். இத்தனையையும் எடைபோட்டு பார்த்த அவர், அக்னிபத் திட்டம் காரணமாக மாநிலத்தில் ஏற்பட்ட கொதிநிலையை பயன்படுத்தி, அந்த திட்டத்தை கடுமையாக விமர்சித்து, பாஜகவிடமிருந்து தன்னை விலக்கி காண்பிக்க ஆரம்பித்தார்.

சில மாதங்களுக்கு முன்பு அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை சந்தித்தார் நிதீஷ் குமார். அப்போது பிரசாந்த் கிஷோர் சொன்ன சில ஆலோசனைகள் நிதீஷை சிந்திக்க வைத்தது, அதில் ஒன்றுதான் பிரதமர் வேட்பாளர் திட்டம். தற்போது காங்கிரஸின் பெயரை சொல்லி எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது அத்தனை எளிது கிடையாது. எனவே பாஜக கூட்டணியிலிருந்து விலகினால் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வாய்ப்புள்ளது என்றும் திட்டமிட்டுள்ளார் நிதீஷ்குமார். தற்போதைய இந்த ஆட்சி மாற்றத்தை பிஹாருக்கான ஒரு பரபரப்பாக மட்டுமே பார்க்க முடியாது, மாறாக இது தேசிய அரசியலிலும் எதிரொலிக்க வாய்ப்பு உள்ளது. இன்று வெடித்த இந்த மாற்றம் 2024 நாடாளுமன்ற தேர்தல் அணி சேர்க்கை மற்றும் முடிவுகளில் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாகவே கணிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

கண்ணுக்கெட்டிய தூரம் எதிரிகள் இல்லை என பாஜக நினைத்திருக்கும் நேரத்தில், அதன் கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றாக கழன்று செல்வது என்பது வரும் நாடாளுமன்ற தேர்தல் களத்தை மேலும் சூடாக்கவே செய்யும். அதற்கான ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்கை இப்போது தொடங்கி வைத்துள்ளார் நிதீஷ் குமார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in