அதிமுகவில் உள்கட்சிக் குழப்பம் தலைவிரித்தாடும் சூழலில் ஓ.பன்னீர் செல்வம் பக்கம் நிற்கிறார் மனோஜ் பாண்டியன். ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏவான மனோஜ் பாண்டியன் தன் அலுவலகத்தில் இருக்கும் ஓ.பி.எஸ் படத்தை இப்போது அகற்றியிருப்பது சர்ச்சையைப் பற்றவைத்துள்ளது.
ஓ.பன்னீர் செல்வம் கடந்த ஆட்சியில் தர்மயுத்தம் நடத்தியபோதும் மனோஜ் பாண்டியன், அவரது தந்தை மறைந்த பி.எச்.பாண்டியன் ஆகியோர் ஓ.பி.எஸ் பக்கமே நின்றனர். இப்போதும் அதிமுகவில் 60க்கும் அதிகமான எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் நிற்கும் போது, ஓ.பன்னீர் செல்வத்துடன் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் தான் நிற்கின்றனர்.
கடந்த சிலவாரங்களாகவே கட்சிக்குள் நிலவும் குழப்பத்தினால் சென்னையிலேயே முகாமிட்டிருந்த மனோஜ் பாண்டியன், தன் தொகுதியான ஆலங்குளத்திற்கு இப்போதுதான் வந்துள்ளார். தன் ஆதரவாளர்களோடு தொடர்ந்து ஆலோசனையும் நடத்தி வருகிறார். அப்போது அவரிடம் தொண்டர்கள் பலரும் உங்களின் எதிர்காலத்திற்கு கட்சியில் பெரும்பான்மையினோர் இருக்கும் பக்கம் செல்வதே நல்லது என அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் மனோஜ் பாண்டியன், ‘விசுவாசத்தின் பக்கமே தான் நிற்பேன்’ என உறுதியாகச் சொல்லியுள்ளார். இதனிடையே எப்படி சர்ச்சை வெடித்தது?
மனோஜ் பாண்டியனின் அலுவலகத்தின் வாசலில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் என இருவரும் இருக்கும் பேனர் ஒன்று இருந்தது. இதில் மனோஜ் பாண்டியனின் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை மட்டும் கத்திரித்து அகற்றியிருந்தனர். நீண்டநாள்களுக்குப் பின்பு தன் தொகுதி அலுவலகத்திற்கு வந்த மனோஜ் பாண்டியன், அந்தப் புகைப்படத்தை முற்றிலும் அகற்றிவிட்டு அதில் புதிய பதாகை வைத்துள்ளார். அதில் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களோடு, தன் படத்தை பெரிதாக வைத்துள்ளார். இதில் ஓ.பன்னீர் செல்வம் படம் இல்லை. இதை மையமாக வைத்து ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்து மனோஜ் பாண்டியன் மாறுகிறாரா? என தொகுதிக்குள் கொளுத்திப் போட்டனர்.
இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் வைரல் ஆகிவரும் நிலையில் மனோஜ் பாண்டியன் ஆதரவாளர்களிடம் பேசினோம். “யாரோ வேண்டுமென்றே இப்படி புரளியைக் கிளப்பிவிட்டுவிட்டனர். மனோஜ் பாண்டியன் ஓ.பி.எஸ் பக்கம் நின்றதால் எடப்பாடி பழனிசாமியைப் பிடிக்காதவர்கள் ஈ.பி.எஸ் படத்தை மட்டும் கிழித்தனர். மீண்டும் ஓ.பி.எஸ் படம் மட்டும் வைத்தால் ஈ.பி.எஸ்சை பிடித்தவர்கள் அந்த வழியாகச் செல்லும்போது இதே வேலையைச் செய்யும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் தன் அலுவலகத்திற்குள் மோதல் போக்கு இருக்கக் கூடாது என்பதால்தான் அண்ணா, அம்மா, எம்.ஜி.ஆர் படம் மட்டும் போட்டிருக்கிறார். எந்த அணியில் இருந்தாலும், இந்த மூவருடைய புகைப்படத்தையும் உயிராகவே அதிமுக தொண்டன் நேசிப்பான். இது மனோஜ் பாண்டியனின் மாஸ்டர் மூவ்!
ஆலங்குளம், வாசுதேவநல்லூர் என ஒவ்வொரு பகுதியாகப் பயணித்து கட்சியை வலுப்படுத்தி வருகிறார் மனோஜ் பாண்டியன். நேற்றுகூட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியனை கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளார். மனோஜ் பாண்டியன் தர்மயுத்தத்தின் போதே பின்னால் நின்றவர். இப்போதும் நிற்பார். எப்போதும் நிற்பார். ஓ.பி.எஸ்ஸின் பின்னாலேயே!” என்கின்றனர்.
ஆனாலும் பேனர் விசயத்தில் மனோஜ் பாண்டியனின் மாஸ்டர் மூவ் அஸ்திரம் இரட்டை இலை தொண்டர்களை ஏகத்திற்கும் குழப்பிவிட்டது!