ஆதார் இருக்கும்போது மக்கள் ஐடி ஏனப்பா?

திமுக அரசின் அறிவிப்பும்... பாஜக தரப்பின் எதிர்ப்பும்!
ஆதார் இருக்கும்போது மக்கள் ஐடி ஏனப்பா?

தமிழக அரசு வழங்கும் மக்கள் நலத் திட்டங்களை விரைவாகவும், துல்லியமாகவும் அளிப்பதற்காக ‘மக்கள் ஐடி’ எனப்படும், தமிழக மக்களுக்கான அடையாள எண்ணை உருவாக்கும் மென்பொருள் தயாரிப்புக்கான டெண்டர் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஆதார் எண் இருக்கும்போது, தமிழக அரசின் இந்த அடையாள எண் குழப்பங்களையும், முறைகேடுகளையும் உருவாக்கும் என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

தற்போது பரபரப்பாக பேசப்படும் ‘மக்கள் ஐடி’ அறிவிப்பு, இன்றோ நேற்றோ வெளியானது அல்ல. 2013-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்திலேயே ஆளுநர் உரையில் இது இடம்பெற்றது. அப்போது சட்டப்பேரவையிலும் இது குறித்துப் பேசப்பட்டது. அதற்கான அரசாணையும் 2013-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஐடி-க்காக மாநில குடும்ப தரவுத் தளம் (எஸ்ஆர்டிஎச்) உருவாக்கப்பட்டு, அதில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிலிருந்து விவரங்களைப் பெற்று, பயோ மெட்ரிக் தரவுகளைப் பயன்படுத்தி அனைத்து துறைகளின் சேவையும் வழங்கப்படும் என அப்போது அறிவிக்கப்பட்டது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் மின் ஆளுமை முகமையால் செய்யப்பட்டு, அந்த பணிகள் 6 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. அதன்பின்னர் 2019-ம் ஆண்டு 110 விதியின் கீழ் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, குடிமக்கள் தங்கள் பிரத்யேக எண்ணைப் பெற மின் ஆளுமை முகமையில் வசதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பின்னரும் இந்த திட்டத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. இந்த சூழலில்தான் தற்போது ‘மக்கள் ஐடி’யை பெறுவதற்கான அடிப்படை மென்பொருள் தயாரிப்புக்கான ஒப்பந்தப் பணியை மின் ஆளுமை முகமை தொடங்கியுள்ளது.

மக்கள் ஐடி என்பது என்ன? அதன் பணிகள் என்ன?

மின் ஆளுமை முகமை மூலமாக உருவாக்கப்படும் மாநில குடும்ப தரவுத் தளம் மூலமாக, தமிழகத்தில் வசிக்கும் மக்களுக்கு 10 முதல் 12 இலக்கத்திலான ‘மக்கள் ஐடி’ எனப்படும் பிரத்யேக எண் அளிக்கப்படும். தமிழகத்தில் வசிக்கும் மக்களின் வயது, பாலினம், சமூக அடிப்படையில் கணக்கிட்டு இந்த எண் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

இந்த திட்டம் குறித்து ஏற்கெனவே வெளியான அறிவிப்புகளின்படி, பொதுவிநியோகத்திட்டம், முதியோர் உதவித்தொகை, 100 நாள் வேலைத்திட்டம், பசுமை வீடு, மருத்துவக் காப்பீடு, பல்வேறு நலவாரிய உதவித்தொகைகள், பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான உதவித்தொகை மற்றும் திட்டங்கள், சமூக நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள் இந்த திட்டம் மூலம் ஒருங்கிணைக்கப்படும். மேலும், பிறப்பு முதல் இறப்பு வரை அரசால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் விண்ணப்பம் ஏதும் இல்லாமல் தாமாகவே முன்வந்து செயல்படுத்தும் வகையில் இத்திட்டம் இருக்கும் என கூறப்பட்டிருந்தது.

தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள டெண்டரில் குறிப்பிட்டுள்ள தகவல்களின்படி, ‘மாநிலத்தில் உள்ள குடும்பங்களின் தகவல் தொகுப்பை உருவாக்குவதன் மூலமாக, திட்டமிடுதல், செயல்படுத்துதல் போன்றவை மேம்படும் என அரசு கருதுகிறது. இதன்படி தமிழகத்தில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்துவமிக்க அடையாள எண் உருவாக்கப்படும். ஒருவருக்கே இரு எண்கள் ஒதுக்கப்படுவதை தவிர்க்க ஆதார் மற்றும் குடும்ப அட்டை எண் போன்றவற்றின் தகவல்கள் ஒருங்கிணைக்கப்படும். ஏற்கெனவே மக்கள் நலத் திட்டங்களை பெறுவோரின் தகவல்களும், தற்போதைய தரவுத்தொகுப்பில் உள்ள தகவல்களும் ஒப்பிடப்பட்டு ‘மக்கள் ஐடி’ ஒதுக்கீடு செய்யப்படும்’ எனக் கூறப்பட்டுள்ளது.

மக்கள் ஐடி குழப்பத்தை உருவாக்கும்!

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “ஆதார் எண் போல் தமிழகத்தில் வசிக்கும் அனைவருக்கும் ‘மக்கள் ஐடி’ என்ற முயற்சி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, கடும் விளைவுகளை உருவாக்கும். மேம்போக்காக பார்க்கும் போது, மக்கள் நலத்திட்டங்களை ஒரு எண் மூலம் வழங்குவதற்கான ஏற்பாடாக கூறப்பட்டாலும், இந்த சிந்தனையின் பின்னணியில் பெரும் உள்நோக்கம் உள்ளதாகவே கருதுகிறேன்.

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பு மாநில அரசுகளிடம் இருப்பதால், 2014-ம் ஆண்டு வரை மாநில அரசு துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளே பயனாளிகளை அடையாளம் கண்டு அவர்களுக்குச் சேரவேண்டிய உதவித் தொகை, சம்பளம் அல்லது மானியத்தை பணமாக செலுத்தி கொண்டிருந்தன. இதனால் பல்வேறு முறைகேடுகள், மோசடிகள் நடைபெற்று வந்தன.

தற்போதைய பாஜக ஆட்சியில் தான் ஜன்தன், ஆதார், மொபைல் (JAM) இணைப்பு மூலம் மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களில் மக்களுக்கு சென்றடைய வேண்டிய மானியம் மற்றும் உதவிகள் நேரிடையாக பயனாளிகளின் வங்கி கணக்குகளில் முழுமையாக செலுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, போலிகள் அடையாளம் காணப்பட்டு, நீக்கப்பட்டு, இடைத்தரகர்கள் அகற்றப்பட்டு முறைகேடுகள் தடுக்கப்பட்டதன் மூலம் மட்டுமே இதுவரை கடந்த எட்டு ஆண்டுகளில் சேமிக்கப்பட்டுள்ள தொகை ரூபாய் 2.5 லட்சம் கோடி என்பது மகத்தான சாதனை.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களில் நடைபெற்ற பல்வேறு மோசடிகளை ஆதார் அட்டை (JAM) மூலம் கண்டுபிடித்து பல வழக்குகள் பதியப்பட்டுள்ளதோடு, சில திட்டங்களில் மோசடி செய்யப்பட்ட தொகையும் மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாநில அரசு, ஏற்கெனவே அமலில் உள்ள கட்டமைக்கப்பட்டுள்ள நடைமுறையை பின்பற்றாமல் தனியாக ஒரு எண் உருவாக்கப்படும் என்று சொல்வது உள்நோக்கம் கொண்டதாகவே அமையும்.

ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட இடைத்தரகர்கள், தவிர்க்கப்பட்ட போலி பயனாளிகள், பலனடைந்த அதிகாரிகள், ஊழல் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மீண்டும் துளிர்த்தெழுந்து, மாநில அரசின் நலத் திட்டங்களில் மோசடி செய்ய வழிவகை செய்யவே தமிழக அரசு முன்னெடுத்துள்ள இந்த முயற்சி பயன்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை. ஆகவே, உண்மையை உணர்ந்து மக்கள் நலத்திட்டங்களில் ஊழலை தடுக்க வேண்டிய தமிழக அரசு, தேவையற்ற முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். இந்த முயற்சியை உடனடியாக தமிழக அரசு கைவிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்

முறைகேடுகள் பெருகும் என்பது தவறான வாதம்

மக்கள் ஐடி திட்டம் குறித்துப் பேசிய திமுகவின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், “ஆதார் என்பது ஹம்பக். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆதாரை நிறுத்துவோம் என்று 2013-ல் சொன்ன நரேந்திர மோடி, பிரதமரான பிறகு அதனை முழுமூச்சாக கொண்டுவந்தார். நாங்கள் தமிழ்நாட்டுக்கான ‘மக்கள் ஐடி’யை உருவாக்குவதாக சொல்லியுள்ளோம். அதற்கு தமிழர்களுக்காக உழைக்கும் எந்த ஒரு கட்சியாவது எதிர்ப்பு தெரிவித்துள்ளதா? ஆனால் தமிழர்களுக்கு, தமிழ் மொழிக்கு, தமிழ் இனத்துக்கு, தமிழ் பண்பாட்டுக்கு எதிரான பாஜக இதனை எதிர்க்கிறது என்றால் அதனை கண்டிப்பாக நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டும். தமிழர்களின் வாழ்வாதாரத்தைக் கெடுக்கும் பாஜக இதனை எதிர்க்கிறது என்றால் நிச்சயமாக அது நல்ல திட்டமாகவே இருக்கும்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

மக்கள் ஐடி வந்தால் முறைகேடுகள் பெருகும் என்று சொல்வது தவறான வாதம். இப்போது ஒவ்வொருவருக்கும் ஆதார் , பான்,வாக்காளர் அட்டை என பல அடையாள அட்டைகள் உள்ளது. வாக்குச்செலுத்த மத்திய அரசே 10 வகையான ஆவணங்களை அனுமதிக்கிறது. அப்படியிருக்கையில், ஒரு அடையாள அட்டை இருக்கும்போது மற்றொரு அடையாள அட்டை வந்தால் முறைகேடுகள் பெருகும் எனச் சொல்வதை எப்படி ஏற்கமுடியும். மக்கள் ஐடி என்பது ஒரு தரவுத்தளம் என்பது மட்டுமல்ல, மத்திய அரசு செய்யும் பல்வேறு தகிடுதத்தங்களை தடுக்கவும் இது உதவும். மாநில அரசின் திட்டங்களை மக்களுக்கு சரியான முறையில் கொண்டு சேர்க்கவும் இந்த அடையாள எண் உதவும். ஆதாரில் மத்திய அரசால் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. எனவே, ஆதாரில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கவே இந்த மக்கள் ஐடி. இது தமிழர்களுக்கான ஐடி என்றும் சொல்லலாம்” என்றார்.

‘மக்கள் ஐடி’ என்பது மக்கள் நலத்திட்டங்களை இன்னும் துல்லியமாக கொண்டு சேர்க்க உதவும் என்பதே அரசு தரப்பின் விளக்கமாக உள்ளது. பாஜக சொல்வதுபோல இந்த அடையாள எண் குழப்பங்களை உருவாக்குமா என்பது, இந்த திட்டத்தின் செயல்முறையின்போதுதான் தெரியவரும். அப்படியில்லாமல் வேமக்கள் நலனை மேம்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் இருந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சிதான்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in