எம்.பி ஆகிறாரா மதுரை ஆதீனம்?- பாஜக போடும் புது திட்டம்

எம்.பி ஆகிறாரா மதுரை ஆதீனம்?- பாஜக போடும் புது திட்டம்

திமுகவையும், தமிழக அரசையும் கடுமையாக விமர்சித்து வரும் மதுரை ஆதீனம் சுந்தரமூர்த்தி தம்பிரானை எம்பியாக்க பாஜக திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்று மதுரை ஆதீனம் மடம். இந்த ஆதீனத்தின் 292-வது பீடாதிபதியாக இருந்த அருணகிரிநாதர் கடந்தாண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரானாக இருந்த சுந்தரமூர்த்தி தம்பிரான், ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என்ற பெயரில் 293-வது ஆதீனமாக நியமிக்கப்பட்டார். இவரது செயல்பாடு அண்மை காலமாக பேசும் பொருளாகி வருகிறது.

அண்மையில் தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்துக்கு தமிழக அரசு திடீரென தடை விதித்தது. சட்டம், ஒழுங்கு பிரச்சினை காரணமாக தடை விதிக்கப்பட்டதாக தமிழக அரசு விளக்கம் அளித்தது. மனிதனை மனிதன் சுமப்பது சரியல்ல. பட்டினப் பிரவேசத்துக்கு தடை விதித்தது சரிதான் என திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அதே நேரத்தில் பாஜக, அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், திமுக ரவுடிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள பாதுகாப்பு கேட்டு பிரதமர் மோடியையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திப்பேன் என்றும் உயிரே போனாலும் கவலைப்படாமல், தருமை ஆதீனத்தை நானே பல்லக்கில் சுமப்பேன் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அண்மையில் மதுரையில் நடந்த விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட துறவிகள் மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், "அறநிலையத்துறை கொள்ளையர்களின் கூடாரமாக உள்ளது" என்று சர்ச்சையை ஏற்படுத்தினார். இதற்கு பதில் அளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ``மதுரை ஆதீனம் அரசியல்வாதிபோல் பேசிக்கொண்டிருப்பதை அறநிலையத்துறை அனுமதிக்காது’ என்று எச்சரித்தார்.

இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்விளைவை ஏற்படுத்தினார். "மதுரை ஆதீனத்தை மிரட்டினால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும்" என்றார். இப்படி தமிழக அரசையும், அறநிலையத்துறையையும் கடுமையாக மதுரை ஆதீனம் விமர்சித்து வருவரும், அதற்கு பாஜக ஆதரவு தெரிவித்து வருவரும் தொடர்கதையாக இருக்கிறது. இதற்கான காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது.

மதுரை ஆதீனத்துக்கு நியமன எம்பி அல்லது பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்ய பாஜக திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சமீப காலமாக மதுரை ஆதீனத்தை பாஜக நிர்வாகிகளும், இந்து அமைப்பினரும் அடிக்கடி சந்தித்து பேசிவருகின்றனர். இந்த பரபரப்பு தகவல் குறித்து ஆதீனம் தரப்பு மறுப்போ, விளக்கமோ அளிக்கவில்லை. இது குறித்து மதுரை ஆதீனம் தரப்பு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in