மேயர் தான் இவரு... ஆக்டிங் எல்லாம் அவரு?

கூட்டணி குஸ்தியில் கும்பகோணம் மாநகராட்சி!
கும்பகோணம் மாநகராட்சி
கும்பகோணம் மாநகராட்சி

கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயரான காங்கிரஸ் கட்சியின் சரவணன், தன்னை மேயராக்கிய திமுகவினருடன் மோதல் போக்கை கையாண்டு வருவதால் அவரை, “செய்நன்றி மறந்தவர்” என்று விமர்சிக்கிறது தஞ்சை திமுக. அதேசமயம், “மேயரைச் சுதந்திரமாகச் செயல்படவிடாமல் மேலாதிக்கம் செலுத்தப் பார்க்கிறார்கள் திமுகவினர்” என்று மேயர் தரப்பில் சொல்கிறார்கள். இதனால் கும்பகோணம் மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

மேயரும் துணை மேயரும்...
மேயரும் துணை மேயரும்...

சாதாரண ஆட்டோ ஓட்டுநரான சரவணன் மேயராக பொறுப்பேற்றது பெரிய கதை. கடந்த பிப் மாதம் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் கும்பகோணம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில், திமுக கூட்டணி 42 வார்டுகளை கைப்பற்றி தனிபெரும்பான்மையைப் பெற்றது. அதிமுக 3 வார்டுகளையும், சுயேச்சைகள் 3 வார்டுகளையும் கைப்பற்றினர்.

அதனால் திமுகவின் மாநகர செயலாளரான சு.ப. தமிழழகன் தான் மேயர் என்று திமுகவினர் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்தனர். இந்தநிலையில், கும்பகோணம் மாநகராட்சி மேயர் பொறுப்பை காங்கிரசுக்கு தாரை வார்த்தது திமுக தலைமை. இத்தனைக்கும் இங்கே காங்கிரஸ் தரப்பில் இரண்டு கவுன்சிலர்கள் மட்டுமே வென்றிருந்தார்கள். இவர்களில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் லோகநாதனுக்கு வேண்டியவரான ஆட்டோ ஓட்டுநர் சரவணன் மேயரானார். தலைமை சொன்னதால் காங்கிரசுக்கு மேயர் பதவியை விட்டுக்கொடுத்த தமிழழகன் துணை மேயரானார். இதனால் கோபமடைந்த திமுகவினரையும் அவர் சமாதானப்படுத்தினார்.

இந்த நிலையில்தான், மேயர் சரவணன் நன்றி மறந்து செயல்படுவதாகவும், திமுகவினருடன் மோதல்போக்கை கடைபிடிப்பதாகவும் திமுகவினர் குற்றம்சாட்டுகிறார்கள். அதற்கு உதாரணமாக சில சம்பவங்களை அடுக்குகிறார்கள். துணை மேயருக்கு கார் மற்றும் டபேதார் வழங்கலாம் என நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டிருக்கிறார். அதனடிப்படையில் கரூர் உள்ளிட்ட மாநகராட்சிகளில் துணை மேயருக்கு அந்த வசதிகள் வழங்கப்பட்டுவிட்டன. அதன்படி இங்கேயும் துணை மேயருக்கு கார் வழங்க வேண்டும் என்றபோது அதற்கு நிதியில்லை, இப்போது செய்ய முடியாது என மேயர் சரவணன் நிறுத்தி வைத்துவிட்டாராம்.

துணை மேயருக்கு மாநகராட்சியில் தனி அறை இல்லாததால் அவரை சந்திக்க வருகிறவர்களை வரவேற்புக் கூடத்திலேயே வைத்து சந்தித்தார் துணைமேயர். முக்கிய பிரமுகர்கள் வந்தால் ஆணையாளர் அறைக்கு அழைத்துச்சென்று பேசுவார். அதனால் துணை மேயருக்கு அறை ஒதுக்கி, அதற்கென்று கொஞ்சம் செலவு செய்து அறையை தயார் செய்தார்கள். அதற்கு, “யாரைக் கேட்டு செலவு செய்தீர்கள்... எதற்காக செலவு செய்தீர்கள்?” என்று கேட்டு அதிகாரிகளை அலற வைத்தாராம் சரவணன்.

பதவியேற்புக்கு ஆட்டோவில் வந்த சரவணன்...
பதவியேற்புக்கு ஆட்டோவில் வந்த சரவணன்...

இதுபற்றி நம்மிடம் பேசிய திமுக கவுன்சிலர்கள், ’’மாமன்ற கூட்டம் நடக்கும்போதெல்லாம் எந்த அனுபவமும் இல்லாததால் மேயரால் பதிலளிக்க முடிவதில்லை. உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, ‘எனக்குத் தெரியாது’ என்று கூசாமல் பதில் சொல்வார். துணை மேயரான சு.ப.தமிழழகன் தான் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார். அப்படி இருக்கையில் துணை மேயருக்கு உரிய அறை, கார், என எதையும் மேயர் அனுமதிக்க மறுப்பது என்ன நியாயமோ தெரியவில்லை. அதுமட்டுமில்லாமல் அவர் தற்போதெல்லாம் எங்களைச் சீண்டும் வகையிலேயே நடந்துகொள்கிறார்.

ஜூன் 3-ம் தேதியன்று தலைவர் கலைஞர் பிறந்தநாளன்று துணை மேயர் உட்பட நாங்கள் அனைவரும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவிட்டோம். அன்றைக்கு மாநகராட்சிக்கு வந்த சரவணன், திடீரென மாநகராட்சி வாயிலில் நாற்காலியில் அமர்ந்து காரணமே இல்லாமல் தர்ணாவில் ஈடுபட்டார். தலைவர் பிறந்த நாளில் அவர் வேண்டுமென்றே இப்படி செய்ததில் எங்களுக்கு மிகப்பெரிய வருத்தம்.

மேயர் சரவணன்
மேயர் சரவணன்

சரவணன், தான் மாநகர மேயர் என்பதை மறந்து செயல்படுகிறார். அண்மையில், காங்கிரஸ் மாவட்ட தலைவர் லோகநாதனுக்கு ஆதரவாக மேயர் காரில் இருவரை ஏற்றிக்கொண்டு போய் பட்டீஸ்வரத்தில் ஒரு பெண்மணியிடம் தகராறு செய்திருக்கிறார். அந்த பெண் பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்திருக்கிறார். யாரோ சரவணனை தவறாக இயக்குகிறார்கள். அதற்கெல்லாம் அவர் பணிந்து போகிறார். அவரை மேயராக்கிய திமுகவை புறக்கணித்துவிட்டு, அவரை தவறாக வழிநடத்துகிறவர்கள் பேச்சைக்கேட்டு செயல்படுகிறார். நாங்கள் நினைத்திருந்தால் தமிழழகனையே மேயராக்கியிருக்கலாம். ஆனால், தலைமையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு சரவணனை மேயராக்கினோம். அந்த நன்றியை அவர் மறந்துவிட்டார்.

மேயரின் பின்னணியை பற்றியெல்லாம் எங்களுக்கு நன்றாகவே தெரியும் என்றாலும் மேயர் என்ற பொறுப்புக்குண்டான மரியாதையை நாங்கள் அளித்து வருகிறோம். ஆனால், அவர்தான் அதற்குரிய வகையில் நடந்துகொள்ள மறுக்கிறார்” என்றார்கள்.

தமிழழகன்
தமிழழகன்

ஆனால் மேயர் தரப்பில் இதையெல்லாம் அப்படியே மறுக்கிறார்கள். “மேயரிடம் எதையும் கேட்காமல் அவர்களே கூட்டத்தை நடத்துவார்கள். அவர்களே துணை மேயர் அறைக்கு செலவு செய்து கொள்வார்கள். இதையெல்லாம் மேயருக்கு தெரியப்படுத்த வேண்டாமா? அப்படியென்றால் மேயர் பொறுப்பில் அவர் எதற்கு இருக்கவேண்டும்? அதனால் தான் அவர் தனக்குரிய அதிகாரத்தை செயல்படுத்த முனைகிறார். அதை திமுகவினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் கடந்த 17-ம் தேதி நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், திமுக உறுப்பினர்கள், மேயரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

இதுவரை இல்லாமல் திடீரென இப்படி கேள்விகள் அவரை நோக்கி எழுந்ததும் அவரால் பதில் சொல்ல முடியவில்லைதான். ஆனாலும் சளைக்காமல், ‘இதுவரை என்னிடம் கையெழுத்து மட்டும்தான் வாங்கினீர்கள்... இப்போதுதான் கேள்விகள் கேட்கிறீர்கள். 2 நாட்களுக்கு பிறகு கூட்டம் நடத்தி இதற்கு பதில் கூறுகிறேன்’ என்று சரவணன் சொன்னார். அப்புறம் தான் அமைதியானார்கள். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, ‘இனிமேல் கூட்டத்தில் வைக்கப்படும் தீர்மானங்கள் குறித்து முன்கூட்டியே தன்னிடம் அனுமதிபெற்று அதன் பிறகே அஜண்டாவை தயாரிக்க வேண்டும்’ என அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார். மேயராக இருப்பவர் மாநகராட்சியின் செயல்பாடுகள் அனைத்தும் தனது கவனத்துக்கு வரவேண்டும் என நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது?” என்று கேள்வி எழுப்புகிறது மேயர் சரவணன் தரப்பு.

இதுகுறித்து துணை மேயர் தமிழழகனிடம் முதலில் பேசினோம். ‘’அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லை” என்று நழுவினார். மேயர் சரவணனோ, ‘’எல்லாம் பேசி முடிச்சாச்சு சார்; இப்ப ஒன்றும் பிரச்சினையில்லை” என்று முடித்துக்கொண்டார்.

சம்பந்தப்பட்ட இருவரும் இப்படிச் சொன்னாலும் இரு தரப்புக்கும் இடையில் நடக்கும் பனிப்போர் மாநகராட்சி அதிகாரிகள் மட்டுமின்றி அரசியல்வாதிகள், பொதுமக்கள் என அனைவருக்குமே தெரிந்திருக்கிறது. டீக்கடையில் உட்கார்ந்து விமர்சனம் செய்கிறார்கள். இதே நிலை நீடித்தால் மேயர் சரவணன் தனது பதவியில் நீடிப்பதே சிக்கலாகிவிடும்.

எனவே, குஸ்தியை நிறுத்திவிட்டு கும்பகோணம் மக்களின் தேவைகளைக் கவனிங்க ஐயாக்களா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in