நாராயணசாமியை நீக்கி விட்டார்களா?

நாராயணசாமியை நீக்கி விட்டார்களா?

நேற்று தொடங்கி இன்றுவரை சமூக ஊடகங்களில் பரபரப்பாக பரவி வரும் செய்தி, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது தான். அதன் உண்மை நிலையை அறியாமல் பத்திரிகையாளர்கள் இருக்கும் வலைதள பக்கங்களில் கூட அதை வேகமாக பரப்பி வருகிறார்கள்

அத்தகவல் உண்மைதானா? என்ன நடக்கிறது புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் இந்த விசாரணையைத் தொடங்கினேன்.

புதுவை மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றப்படலாம் என்பது மட்டும்தான் இந்த தகவலின் பின்னணியில் இருக்கின்ற உண்மை. புதுவை மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ஏ.வி சுப்ரமணியன் தற்போது பதவி வகித்து வருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட போதும் வெறும் இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மற்ற மாநிலங்களிலெல்லாம் காங்கிரஸ் தோல்வி முகத்தில் இருந்த போதும்கூட புதுச்சேரியில் எப்போதும் காங்கிரஸ் நல்ல செல்வாக்கு பெற்றிருக்கும். அப்படி புதுச்சேரியில் மிக வலுவான ஒரு கட்டமைப்பில் இருந்து வந்த காங்கிரஸ் கட்சி நாராயணசாமி ஆட்சிக்காலத்தில் கழுதை தேய்ந்து கட்டெறும்பாக ஆகிப்போனது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நமச்சிவாயம் உள்ளிட்டவர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு மாறி தங்களின் சொந்த செல்வாக்கை பயன்படுத்தி பாரதிய ஜனதா கட்சியை புதுச்சேரியில் வளர்த்து வருகிறார்கள். புதுச்சேரி மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் அக்கட்சிக்கு தற்போது கிளைகள் இருக்கும் அளவிற்கு அங்கு நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி மிக வேகமாக தேய்ந்து வருகிறது. இருந்த முன்னணி தலைவர்கள் அத்தனை பேரும் பிற கட்சிகளுக்கு போய்விட்ட நிலையில் தற்போது மிகச் சிலரே காங்கிரஸ் கட்சியில் எஞ்சியிருக்கின்றனர். அதனால் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தலைமை இருக்கிறது. அதற்கு யாரை தலைவராக நியமிக்கலாம் என்ற ஆலோசனையும் டெல்லி தலைமையில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஷாஜகான், கந்தசாமி ஆகியோர் டெல்லி சென்று புதியவர் ஒருவரைத்தான் புதுச்சேரி மாநில தலைவராக நியமிக்க வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கின்றனர். அவர்கள் தனி அணியாக செயல்படுவதைக் கண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அனந்தராமன் தற்போது அவர்களுடன் இணைந்து இருக்கிறார்.

புதுச்சேரியை பொருத்தவரை வன்னியர்கள் அதிகளவில் இருப்பதால் அவர்களை முன்னிலைப் படுத்தியே அங்கு கட்சிகள் இயங்கும். அப்படித்தான் காங்கிரஸ் கட்சியில் ரங்கசாமி முன்னிலைப் படுத்தப் பட்டார். அதற்குப் பிறகு நமச்சிவாயம் முன்னிலைப் படுத்தப் பட்டார். அந்த வகையில் தன்னை முன்னிலைப் படுத்தும் வகையில் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்க வேண்டும் என இந்த இரண்டு எம்எல்ஏக்களை வைத்து கட்சித் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார் அனந்தராமன்.

இவர்களைத் தவிர மூத்தவரான நாராயணசாமியும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பில் இருந்தாலும் மாநில காங்கிரஸ் தலைமைப் பதவியும் தனக்கு வேண்டும் என்று விரும்புகிறார். தற்போது தலைவராக இருக்கும் ஏ. வி . சுப்பிரமணியமும் தன்னையே தலைவராக தொடரச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். தலைவர் பதவிக்கு இப்படி பல முனை போட்டி நடந்து வருவதால் அதன் விளைவாகவே நாராயணசாமி நீக்கப்பட்டார் என்ற செய்தி பரப்பப்பட்டு இருக்கிறது.

நாராயணசாமியை நீக்கி விட்டார்கள் என்ற தகவலை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலரே வேண்டுமென்றே பரப்புகிறார்கள். இந்த செய்திகளை பார்த்து வெறுத்துப் போய் நாராயணசாமி தானாகவே ஒதுங்கி விடுவார் என்று அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் நாராயணசாமி ஒன்றும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சந்திரமோகன் இது குறித்து ஒரு மறுப்பு அறிக்கை வெளியிட்டிருந்தார். பாரதிய ஜனதா கட்சிக்காரர்கள் தான் இப்படி திட்டமிட்டு பொய் செய்தியை பரப்புகிறார்கள் என்று அவர் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். கட்சிக்காரர்களை காட்டிக் கொடுக்க விருப்பமில்லாமல் அவர் இப்படி சொன்னாலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தான் இப்படி செய்தியை பரப்புகிறார்கள் என்கிறார்கள்.

இதுகுறித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமியிடமே பேசினேன். "இதற்கெல்லாம் நான் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க முடியுமா? மஞ்சள் பத்திரிகை நடத்துபவர்கள் இப்படி எதையாவது கிளப்பி விடுகிறார்கள். அதைப் போய் பெரிது படுத்த முடியுமா? என் அனுபவத்தில் இது போன்ற ஏராளமானவற்றை பார்த்திருக்கிறேன். இதற்கு மறுப்போ, விளக்கமோ சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் எதை வேண்டுமானாலும் வதந்தி பரப்பட்டும், எழுதிக் கொள்ளட்டும்" என்று சொன்னார்.

Related Stories

No stories found.