பொதுக்குழு மேடையில்...
பொதுக்குழு மேடையில்...

காத்திருந்த கனிமொழிக்கு காலம் கைகூடியிருக்கிறதா?

பலரும் எதிர்பார்த்தபடியே திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழி எம்பி. தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கனிமொழிக்கு  வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். திமுக இளைஞரணி செயலாளரான சின்னவர் உதயநிதி ஸ்டாலின் அத்தையை இல்லம் தேடிப்போய் வாழ்த்தி அகமகிழச் செய்திருக்கிறார். கருணாநிதி அபிமானிகளும் கனிமொழி ஆதரவாளர்களும் இந்த நியமனத்தால் அகமகிழ்ந்து போயிருக்கிறார்கள். 

கனிமொழி இந்த இடத்துக்கு வந்திருப்பதன் பின்னணியில் அவரது அயராத உழைப்பும், தனித்துவமிக்க திறமையும் இருக்கிறது. அவரது உழைப்பும் அர்பணிப்பும் அசாத்தியமானது. பத்திரிகையாளர், கவிஞர், எழுத்தாளர், சிறந்த நாடாளுமன்றவாதி என பன்முகம் கொண்ட கனிமொழி, சுமார் 15 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக திறம்பட செயலாற்றி வருகிறார். திமுக மகளிரணி செயலாளரான கனிமொழிக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்த புதிய பொறுப்பானது அவரது அரசியல் பயணத்தின் அடுத்த மைல்கல். 

திமுக தலைவர் கருணாநிதியின் மகளாக அறியப்பட்டாலும் 2006 சட்டப் பேரவை தேர்தல் பிரசாரத்தின் போது கருணாநிதியின் பிரசாரப் பயணத்தின் வழியாகவே கனிமொழி நேரடி அரசியலுக்குள் வந்தார். அதற்கு முன்பு, பத்திரிகையாளராகவும், கவிஞராகவும் மட்டுமே அறியப்பட்டிருந்தார்.  2006 நவம்பர் 27-ல் , ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கனிமொழி நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் அவரது அரசியல் ஆளுமைக்கு சான்றானது.

2007-ல், கருணாநிதி தனது மகளை மாநிலங்களவை உறுப்பினராக நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்தார். 2013-லும் அவருக்கே அந்த இடம் நீட்டிக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் நடந்ததாகச் சொல்லப்படும் 2ஜி அலைக்கற்றை வழக்கில் கனிமொழியும் சேர்க்கப்பட்டது அவரது அரசியல் வாழ்க்கையில் கரும்புள்ளியாக விழுந்தது. அதனால் திமுகவும் சரிவைக் கண்டது.

அலைக்கற்றை வழக்கிலிருந்து 2017-ல் விடுதலையான பிறகு பழியைத் துடைக்க இன்னும் வேகமாக செயல்பட ஆரம்பித்தார் கனிமொழி. நாடார் சமூகத்தினர் அளித்த ஆதரவைப் பிடித்துக் கொண்டு தென் மாவட்ட அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.  2019- மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் களமிறங்கிய கனிமொழி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

எதிர் துருவத்தில் இருந்தாலும் பாஜக தலைவர்களுடன் அரசியலுக்கு அப்பாற்பட்டு நட்பு பாராட்டி வருகிறார் கனிமொழி. அந்த அனுகுமுறையும் அரசியல் நாகரிகமும் தான் இப்போது அவரை  ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழுவின் தலைவராக அமர்த்தி இருக்கிறது. இதற்கு முன்பே 2018-ல், சிறந்த நாடாளுமன்ற பெண் உறுப்பினருக்கான விருதையும் கனிமொழி கைக்கொண்டார். மாநில உரிமைகள், இந்தி திணிப்பு உள்ளிட்ட கொள்கை போராட்டங்களில் கனிமொழியின் குரல் வெகுவாகக் கவனிக்கப் படுகிறது. இவரது நாடாளுமன்ற செயல்பாடுகளைப் பார்த்து வடக்கில் இருக்கும் பாஜக உறுப்பினர்களே வியக்கிறார்கள்.   

தன்னை இப்படி எல்லாம் நிரூபித்துவரும் கனிமொழிக்கு கட்சியில் தற்போது வழங்கப்பட்டுள்ள பதவி அத்தனை அதிகாரமிக்க பதவியா என்ற கேள்வியையும் சிலர் எழுப்புகிறார்கள். சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு என்ன அதிகாரம் இருந்ததோ அதேதானே கனிமொழிக்கும் இருக்கப் போகிறது என்பது அவர்களின் வாதம்.

திமுகவின் இப்போதைய அதிகாரப் படிநிலையில், தலைவர், பொதுச்செயலாளர், முதன்மைச்செயலர் பதவிகளுக்கு அடுத்தபடியாக துணைப் பொதுச்செயலாளர் பதவி இருக்கிறது. அதன்படி ‘பேரன்ட் பாடி’ என்று சொல்லப்படும் கட்சியின் பிரதானக் கட்டமைப்பிற்குள் கனிமொழி கொண்டு வரப்பட்டிருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால், மற்ற பதவிகளைப்போல  தனிப்பட்ட அதிகாரம் கொண்ட பதவி இது இல்லை.  ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோரைப் போல் கனிமொழியும் ஒரு துணைப்பொதுச்செயலாளர் அவ்வளவுதான். 

சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களின்போது,  ஒவ்வொரு துணைப் பொதுச்செயலாளரும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கு பொறுப்பாளராக  நியமிக்கப்படுவார்கள். உட்கட்சித் தேர்தலின்போதும் குறிப்பிட்ட பகுதிக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள். அதைத்தவிர துணைப் பொதுச் செயலாளர் என்பது வெறும் அலங்கார பதவிதான். ஆனாலும் கட்சியைப் பொறுத்தவரை அது உயரிய அங்கீகாரம் என்பதால் துணைப் பொதுச்செயலாளர் பதவிவிக்கு எப்போதுமே முன்வரிசை தலைவர்களிடம் போட்டி இருக்கும். அந்தப் போட்டிகளை எல்லாம் சமாளித்து கனிமொழியை அந்தப் பதவியில் அமரவைத்ததன் மூலம் குடும்பத்தையும் சமன் செய்திருக்கிறார் ஸ்டாலின்.  

திமுகவின் அடுத்த வாரிசாக உதயநிதி ஸ்டாலின் முன்னிறுத்தப்படும் நிலையில், அவருக்குப் போட்டியாக இருப்பார் என்று கருதப்படும் கனிமொழிக்கு முக்கிய பொறுப்பை கொடுத்ததன் மூலம் தனது அரசியல் பண்பாட்டை வெளிப்படுத்தியிருக்கும் ஸ்டாலின், அதேசமயம் தனது தந்தைக்கும் நியாயம் செய்திருக்கிறார். அதை உணர்ந்து கொண்டதால்தான் தந்தையின் இடத்தில் அண்ணனைப் பார்ப்பதாக கனிமொழி நெகிழ்ந்திருக்கிறார். 

கருணாநிதிக்குப் பிறகு கட்சியை வழிநடத்த கனிமொழிதான் சரியான நபர் என்று ஒரு சாரர் மத்தியில் ஒரு கருத்து இருந்தது. ஆனாலும் தந்தை காலத்திலேயே கட்சியை தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்ட ஸ்டாலின், தற்போது கட்சியின் தலைவராக தனது பொறுப்பில் செம்மையாகவே செயலாற்றுவதாக தொண்டர்கள் நம்புகிறார்கள். அந்தவகையில் கட்சியில் கனிமொழிக்கு இப்போது அவர் அளித்திருக்கும் முக்கியத்துவம் அரசியலில் கனிமொழியை இன்னும் தகுதிபடைத்தவராக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.  

பொறுமையுடன் காத்திருந்த கனிமொழிக்கு பொன்னான காலம் கைகூடியிருப்பதாக அவரது விசுவாசிகள் கொண்டாடுகிறார்கள். அது உண்மைதானா என்பது போகப் போகத் தெரியும்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in