தடம்புரண்டு நிற்கிறதா தமிழ்நாடு செய்தித்துறை?

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

“ஊடகங்கள் சுட்டிக்காட்டும் குறைகளை சில நேரங்களில் அன்று மதியத்துக்குள்ளாகவே உரிய நடவடிக்கை எடுத்து சரி செய்துவிடுகிறோம். ஆனால், குறைகளைச் சுட்டிக்காட்டும் ஊடகங்கள் அதை அரசு சரிசெய்துவிட்ட விஷயத்தை ஏனோ அத்தனை முக்கியத்துவம் கொடுத்து செய்தியாக வெளியிடுவதில்லை. மாலை வரைக்கும், அதே செய்தியையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்” - ‘உங்களில் ஒருவன் பதில்கள்’ வீடியோ பேட்டியில் முதல்வர் ஸ்டாலின் வருத்தப்பட்டு பகிர்ந்துகொண்ட விஷயம் இது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

பெரும்பாலான ஊடகங்கள் மக்களின் குறைகளைச் சுட்டிக்காட்டுவதோடு மட்டுமில்லாமல் அந்தக் குறைகள் தீர்த்துவைக்கப்பட்டால் அதுகுறித்தும் தவறாமல் செய்திகளை வெளியிடுகின்றன. ஒருசில ஊடகங்கள் இந்தக் கடமையைச் செய்யத் தவறுவதைத்தான் முதல்வர் மென்மையாகச் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

மக்களின் குறைகளைச் சுட்டிக்காட்டுவதோடு மட்டுமல்லாது அரசின் திட்டங்களை, அறிவிப்புகளை அடித்தட்டு மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதும் ஊடகங்கள் தான். இந்த உண்மை அரசுக்கும் அரசியல் தளத்தில் இயங்குபவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

அதிகாரிகளுக்கும் இது தெரியும் என்றாலும் சில பல நேரங்களில் தங்களின் சுயலாபத்துக்காக சில அதிகாரிகள் இதை மறந்துவிடுகிறார்கள். குறிப்பாக, செய்தித்துறையில் இருப்பவர்கள்.

ஜெயசீலன் - மோகன்
ஜெயசீலன் - மோகன்முன்னாள் மற்றும் இன்னாள் செய்தித்துறை இயக்குநர்கள்...

ஊடகங்களுக்கும் செய்தித்துறைக்கும் உள்ள பந்தம் செய்திகள் மாத்திரமல்ல... அரசு விளம்பரம் என்ற பின்னலும் அதற்குள்ளே இருக்கிறது. அதனால் தான் அதை செய்தி - விளம்பரத்துறை என்று சொல்கிறோம்.

பொதுவாக செய்தித்துறை அதிகாரிகளுக்கு பத்திரிகைகளின் தன்மை குறித்து தெளிவாகவே தெரிந்திருக்கும். ஆனால், அதை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். அதேசமயம், தங்களுக்கு ஒத்துவராத பட்சத்தில் ஒரு பத்திரிகையை எதாவது காரணம் சொல்லி கட்டம்கட்டவும் அவர்கள் தயங்கமாட்டார்கள்.

தமிழ்நாடு செய்தித்துறையில் அண்மைக் காலமாக இத்தகைய போக்கு அதிகரித்து வருவதாக அனுபவ ரீதியாக உணர்ந்தவர்கள் சொல்கிறார்கள். இதனால் அதிகாரிகளுக்கு எந்த நஷ்டமும் இல்லை. அரசுக்குத்தான் அவப்பெயர். சம்பந்தப்பட்ட ஒரு ஊடகத்தை செய்தித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு ஓரங்கட்டும் போது அரசுக்கு எதிரான விமர்சனங்களை அந்த ஊடகம் மிகக் கடுமையாக எடுத்துவைக்கிறது. அத்தகைய போக்கும் நடப்பும் அண்மைக்காலமாக அதிகம் நடக்கிறது.

செய்தித்துறையின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுக்கு பிடித்தமான, தாங்கள் நினைப்பதை சாதித்துக் கொடுக்கும் பத்திரிகைகளுடன் அதீத நெருக்கம் காட்டுகிறார்கள். இதன் பின்னணியைக் கேட்டால்  “எல்லாம் 25 பர்சன்ட் சமாச்சாரம் தான்” என்று கூசாமல் சொல்கிறார்கள் துறையின் அடிமட்டத்தில் இருப்பவர்கள்.

அரசின் விளம்பரங்களை தருவதற்கும் அதன் மூலம் தங்களையும் வளப்படுத்திக்கொள்வதற்கும் செய்தித் துறையில் இருக்கும் சிலர் தனி சிண்டிகேட் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த சிண்டிகேட்டில் இருப்பவர்களுக்குத்தான் தாராளமாக விளம்பரங்கள் ஒதுக்கப்படும்.

அதற்கான சம்பிரதாயத்தை, சிண்டிகேட்டில் இருப்பவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு செவ்வனே செய்துவிடுவார்கள். இப்படிச் சேவை செய்யும் நபர்களுக்குத்தான் செய்திதுறை அலுவலகத்தில் செம மரியாதையும் இருக்கும்.

இதில் இன்னொரு வகையும் உண்டு. பத்திரிகை நிறுவனங்களில் பணியில் இருப்பவர்கள் தங்களது குடும்பத்தினர் பெயரில் பல இடங்களில் விளம்பர ஏஜென்ஸிகள் நடத்துகிறார்கள். இது அந்த பத்திரிகை நிறுவனத்துக்குத் தெரியாது.

இப்படியான ஏஜென்ஸிகளை நடத்துகிறவர்கள் செய்தித்துறை அதிகாரிகளுக்கு எதையும் செய்யத் தயாராய் இருக்கிறார்கள். அதனால் இந்த நபர்களை கைக்குள் வைத்துக்கொண்டு அரசு விளம்பரங்களை இவர்களுக்கு தாராளமாக ஒதுக்குகிறார்கள்.

தங்களால் நேரடியாக விளம்பர ஏஜென்ஸி நடத்தி வருமானம் பார்க்க முடியாது என்பதால் பத்திரிகை நிறுவனத்தைச் சார்ந்தவர்களை பகடையாக்கி முக்கிய அரசுப் பொறுப்பில் உள்ளவர்களிடம் விளம்பரங்களைப் பெற்று அதன் மூலம் கிடைக்கும் விளம்பரக் கமிஷனை தாங்கள் நடத்தும் நிழலான விளம்பர ஏஜென்ஸிகளுக்கு ஒதுக்கிக்கொள்கிறார்கள்.

ஒரு சில இடங்களில் அரசுப் பொறுப்பில் உள்ளவர்களுடன் அனுக்கத்தில் இருப்பவர்களும் இப்படியான வேலைகள் மூலம் தங்களை வளப்படுத்திக் கொள்கிறார்கள். இதுபோன்ற வேலைகளிலேயே அதிக கவனம் செலுத்துவதால் செய்தித்துறை பொறுப்பில் செய்ய வேண்டிய காரியங்களை செய்யத் தவறிவிடுகிறார்கள் சிலர். இதனாலும் அரசுக்கு  பின்னடைவு தான்.

இத்தகைய அதிகாரிகள் அரசுக்கும் பத்திரிகைகள் தொடர்பான தவறான தகவல்களை அளித்து, அரசுக்கும் அந்த பத்திரிகைகளுக்குமான நல்லுறவை தந்திரமாகக் கெடுத்துவிடுகிறார்கள்.

செய்தித்துறைக்குள் நடக்கும் இந்த தகிடு தத்தங்கள் அனைத்தும் உரிய நபர்களால் அண்மையில் முதல்வரின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. இதனையடுத்து செய்தித் துறையை செம்மைப்படுத்தும் வேலைகளை முதல்வர் முடுக்கிவிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

செய்தித்துறை மற்றும் அதன் அதிகாரிகளை மையப்படுத்தி சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையும் மேல்மட்ட அளவில் தொடங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள். விளம்பரங்களை யாருக்குக் கொடுக்கலாம் என்பதை அதிகாரிகள் மட்டத்தில் முடிவெடுப்பதை தவிர்த்து முதல்வர் - அமைச்சர்கள் மட்டத்தில் முடிவு செய்தாலே முறைகேட்டுக்கு இடமில்லாமல் போய்விடும் என்கிறார்கள் செய்தித் துறையின் நேர்மையான அதிகாரிகள்.

தமிழ்நாடு செய்தித்துறை இயக்குநராக இருந்த வீ.ப.ஜெயசீலன் விருதுநகர் ஆட்சியராக மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக, விழுப்புரம் ஆட்சியர் மோகன் செய்தித்துறை இயக்குநராக பணியமர்த்தப்பட்டுள்ளார். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இயக்குநர், புரையோடிக் கிடக்கும் செய்தித்துறையின் அவலங்களைக் களைந்து, துறையின் புனிதம் காப்பார் என்று நம்புவோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in