ஒற்றைப்பண்பாட்டை கட்டமைக்கும் கருவியா இந்தி?

ஒற்றைப்பண்பாட்டை 
கட்டமைக்கும் கருவியா இந்தி?

டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவின் 37-வது கூட்டத்திற்கு தலைமை வகித்து மத்திய உள்ளதுறை அமைச்சர் அமித் ஷா நேற்று பேசினார். அப்போது அவர் பேசுகையில், “ அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும்” என்று பேசினார். “அவரின் இந்தப் பேச்சு நேரடியாக தமிழ்நாட்டிற்கான தரப்பட்ட பதில்” என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

பிரின்ஸ் கஜேந்திரபாபு.
பிரின்ஸ் கஜேந்திரபாபு.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ மக்களவையில் மதுரை எம்.பி வெங்கடேசன் ஆங்கிலத்தில் கேள்விகள் எழுப்பினால், அதற்கு இந்தியில் பதில் தரப்பட்டது. இப்பிரச்சினை விவாதமாக்கப்பட்டவுடன் அவருக்குப் பதில்கள் ஆங்கிலத்தில் தரப்படுகிறது. இதன் தொடர்ச்சி தான் மத்திய அமைச்சர் அமித் ஷா, இந்தி குறித்து தற்போது பேசியுள்ள பேச்சு ” என்றார்.

அலுவல் மொழி குறித்து மத்திய அமைச்சர் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது என்று அவரிடம் கேட்டதற்கு, “ 'இந்திய மொழிகளைக் கற்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், ஆங்கிலத்தில் பேசுவதற்குப் பதில், இந்தியில் பேசுங்கள்' என்று அமித் ஷா டெக்னிக்கலாக பேசுகிறார். இந்தியாவில் பிஹார், உத்தரபிரதேசம் போன்ற இந்திபேசும் மக்கள், அனைத்து உயர்கல்வியிலும் துளி ஆங்கிலம் இல்லாமல் படித்து விட்டார்களா? அங்கு பொறியியல், மருத்துவம், சட்டம் சார்ந்த பாடநூல்கள் அனைத்தும் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு விட்டதா?

இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள மக்கள், இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்ய துளி கூட ஆங்கிலம் தேவையில்லை என்று அமித் ஷா முதலில் சொல்லட்டும். அதற்கு முன்பாக, அவரது மெயில் முகவரியை இந்திக்கு மாற்றட்டும். மொழியை மொழியாக பார்க்காமல், மொழியை வாழ்வியலாகப் பார்க்காமல், மொழியை ஒற்றைப் பண்பாட்டு தேசியத்தை கட்டமைக்கும் கருவியாக அமித் ஷா பார்க்கிறார். பிஹாரி, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட பல பல வட இந்திய மொழிகள் இந்தியால் விழுங்கப்பட்டதால் அந்த மாநில மக்கள் கொதித்து போய் உள்ளனர். அது தெரியாமல் அமித் ஷா பேசிக் கொண்டிருக்கிறார்” என்று பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in