கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இலங்கை திரும்புகிறாரா கோத்தபய ராஜபக்ச?

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இலங்கை திரும்புகிறாரா கோத்தபய ராஜபக்ச?

இலங்கையில் நிலவும் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச ஆக.11-ம் தேதி நாடு திரும்புவார் என அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், அவரது குடும்பத்தினரும் தான் காரணம் எனக்கூறி போராட்டம் வெடித்தது.

கடந்த மாதம் நடைபெற்ற இப்போராட்டத்தின் போது அதிபர் மாளிகை மற்றும் அதிபர் அலுவலகத்திற்குள் போராட்டக்காரர்கள் உள்ளே நுழைந்தனர். இதனால் ரகசியப்பாதை வழியாக கோத்தபய ராஜபக்சவும் அவரது மனைவியும் மாலத்தீவு வழியாக சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்றனர். இதன் பின் தனது அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்ச ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சுற்றுலாப் பயணிகள் விசாவில் சிங்கப்பூரில் தங்கியுள்ள கோத்தபய ராஜபக்ச இலங்கை திரும்ப உள்ளதாக செய்திகள் வெளியாகியன. கோத்தபய ராஜபக்ச நாடு திரும்ப இது சரியான நேரம் இல்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "கோத்தபய வருகை அரசியல் பதற்றங்களைத் தூண்டி விடும். அவர் விரைவில் திரும்பி வருவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அவர் நாடு திரும்ப இது சரியான நேரம் இல்லை. ஒரு வேளை அவர் நாடு திரும்பினால் அது, பொருளாதார நெருக்கடிக்கு எதிராக இலங்கையில் எரிந்து கொண்டு இருக்கும் அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும்" என கூறினார்.

இந்நிலையில், இலங்கையின் காட்டு நாயக்க விமான நிலையத்தில் கடுமையாக பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கோத்தபய ராஜபக்ச அழைத்து வரப்பட உள்ளதாக செய்தி தற்போது வெளியாகியுள்ளது. அவரது விசா காலம் ஆக.11-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அவரது மனைவியுடன் அமெரிக்கா செல்வதற்கு விடுத்த கோரி்கையை அந்நாடு நிராகரித்துள்ள நிலையில், 11-ம் தேதி கோத்தபய ராஜபக்ச இலங்கை திரும்ப உள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து அரசு அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in