2024-ல் சட்டப்பேரவைத் தேர்தல்: பலிக்குமா பழனிசாமியின் ஆரூடம்?

2024-ல் சட்டப்பேரவைத் தேர்தல்:
பலிக்குமா பழனிசாமியின் ஆரூடம்?

“தமிழகத்தில் 2024-ல் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத் தேர்தல் வரவும் வாய்ப்புள்ளது. ஆயிரம் பேர் அமரும் வகையில் நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்பட்டு வருவதால் எம்பி-க்கள் எண்ணிக்கை உயரலாம். எம்பி-க்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம்” என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது, அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் சொல்வது போல இன்னும் 2 ஆண்டுகளில் மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தல் நடப்பது சாத்தியமா?

ஒரே நாடு ஒரே தேர்தல்

எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர் சந்திப்பில் மட்டும் இந்தக் கருத்தைச் சொல்லவில்லை. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களிலும் கட்சியினர் மத்தியில் இதையே பேசிவருகிறார். சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகான சில நாட்களிலேயே, தன்னைச் சந்திக்க வந்த கட்சி நிர்வாகிகளிடம் இதே கருத்தை அவர் சொன்னதாக, அப்போதே தகவல்கள் வெளிவந்தன. இப்போது அதை வெளிப்படையாகப் பேச ஆரம்பித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதன் மூலம் அவர் வெளிப்படுத்தியிருப்பது, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற பாஜகவின் திட்டம் தொடர்பான தனது எண்ணத்தைத்தான்!

2014-ல் பிரதமராகப் பதவியேற்றது முதலே, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற எண்ணத்தைப் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி வருகிறார் மோடி. ஒரே நேரத்தில் மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தினால், கோடிக்கணக்கான பணம் மிச்சமாகும் என்று தொடர்ந்து பாஜக பேசி வருகிறது. ‘மக்களவை, சட்டமன்றம், உள்ளாட்சித் தேர்தல்களுக்கென தனித்தனியாக வாக்காளர் பட்டியல் தயாரிப்பது வீண்வேலை. இவை அனைத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு பொதுவான வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்தலாம்” என்று கடந்த ஆண்டுகூட, பிரதமர் மோடி பேசியது தேசிய அளவில் விவாதமானது.

கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, 2018-ல் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ விவாதம் சூடுபிடித்தது. அப்போது அதிமுக தெரிவித்த கருத்துதான் ஹைலைட். “இந்தத் திட்டம் வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான். தமிழகத்தின் சட்டப்பேரவை பதவிக்காலம் 2021 வரை இருக்கிறது. எனவே, அதை இப்போதைய நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்க்க வேண்டாம். ஆனால், 2024-ல் ஒன்றாகச் சேர்த்து தேர்தல் நடத்தினால் ஏற்றுக்கொள்கிறோம்” என்று அன்று அமைச்சராக இருந்த ஜெயக்குமார் பேட்டி அளித்தார். இந்தத் திட்டத்தால் தங்கள் ஆட்சிக்கு சிக்கல் வரக் கூடாது என்று நினைத்த அதிமுகதான், இன்று திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை மாதங்களே கடந்துள்ள நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலைப் பற்றி பேசுகிறது. சரி, இதற்கு வாய்ப்புகள் உள்ளனவா?

சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா?

தற்போது எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பதில் 2 விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று, 2024-ல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல், இன்னொன்று ஆயிரம் எம்பி-க்கள் எண்ணிக்கை. இந்த இரண்டுமே வெவ்வேறு விஷயங்கள். தமிழக சட்டப்பேரவைக்கு 2024-ல் தேர்தல் வர வேண்டுமென்றால், அதற்கு முதலில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டம் இந்தியாவில் செயல்பாட்டுக்கு வர வேண்டும். அத்திட்டத்துக்கு தேசிய கட்சிகள், மாநிலக் கட்சிகள், சிறு கட்சிகள் வரை ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும். இத்திட்டத்தை எல்லோரும் மனம் திறந்து ஆதரிக்க வேண்டும். மிக முக்கியமாக, இதற்கு அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். 2024-ல் இத்திட்டம் வருகிறது என்றால், இனி வரும் மாநில சட்டப்பேரவைகளின் தேர்தலை ரத்து செய்து, அந்தந்த மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும்.

இத்திட்டத்தைப் பற்றி ஆரவாரமாகப் பேசும் பாஜகவே, இன்னும் 5 மாதங்களில் வர உள்ள உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகிவிட்டது. அதேபோல ஓராண்டில் வர உள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் முதல்வரை மாற்றி தயாராகிவிட்டது. 2024-ல் எல்லா மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் என்றால், இப்போது இந்த மாநிலங்களுக்குத் தேர்தல் நடத்த வேண்டிய அவசியமே இல்லை. எனவே, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற விவாதம் வழக்கம்போல 2024 மக்களவைத் தேர்தலையும் கடந்து சென்றுவிடும் வாய்ப்புகளே உள்ளன.

நாடாளுமன்றத்தில் ஆயிரம் எம்பி-க்கள் எனும் வாதத்துக்கு வருவோம். தலைநகர் டெல்லியில் ‘சென்ட்ரல் விஸ்டா’ என்ற பெயரில் உருவாகிவரும் புதிய நாடாளுமன்றக் கட்டிட வளாகம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்பி-க்கள் அமரும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் 2024 நாடாளுமன்றத் தேர்தல் என்பது, ஆயிரம் எம்பி-க்கள் என்ற அளவில் இருக்கும் என்ற விவாதம் தேசிய கட்சிகள் தொடங்கி மாநிலக் கட்சிகள் வரை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தற்போதைய மக்களவையின் எண்ணிக்கையான 543-ல் 530 பேர் மாநிலங்களிலிருந்து எம்பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். எஞ்சியவர்கள் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். இந்திய அரசமைப்புச் சட்டக்கூறு- 81, ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டுகிறது. அதாவது, ‘ஒரு மாநிலத்தில் ஒதுக்கப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கைக்கும் அந்த மாநிலத்தின் மக்கள்தொகைக்கும் இடையேயான விகிதம் முடிந்த அளவுக்கு எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்’ என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது. இதேபோல அரசமைப்புச் சட்டக்கூறு 81-ன் 3-வது பிரிவு, ‘மக்கள்தொகை அடிப்படையில் எம்பி-க்களுக்கான இருக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும்’ என்கிறது. அதாவது, கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இது இருக்க வேண்டும். இந்த இரண்டுமே 1971 முதலே சாத்தியமாகவில்லை.

ஒத்திவைத்த இந்திரா காந்தி

1971-ல் இந்தியாவின் மக்கள்தொகை 56 கோடி. 2011-ல் 125 கோடி. 2021 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இன்னும் தொடங்காத நிலையில், நாட்டின் மக்கள் தொகை 137 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. 1971-ஐ விட மக்கள் தொகை 2 மடங்குக்கு மேல் அதிகரித்துவிட்ட நிலையில், அதற்கேற்ப எம்பி-க்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படியே மக்களவையில் எண்ணிக்கை மாறியிருக்க வேண்டும். ஆனால், அன்று பிரதமராக இருந்த இந்திரா காந்தி அதைச் செய்யவில்லை.

தொகுதிகள் மறுவரையறை, மக்கள்தொகை எண்ணிக்கைப்படி எம்பி-க்கள் இருக்கையை அதிகரிப்பது போன்றவற்றை 2001 வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை எம்பி-க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவெடுத்தால், தென்னிந்திய மாநிலங்களில் எம்பி-க்கள் எண்ணிக்கை குறைந்து பாதிப்பை ஏற்படுத்தும் என்ற சர்ச்சை எழுந்தது. அதாவது, அன்று குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் தென்னிந்திய மாநிலங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்திக்கொண்டிருந்தன. இதன்மூலம் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைச் செயல்படுத்தி, மக்கள்தொகை எண்ணிக்கையைக் குறைத்த மாநிலங்களுக்கு எம்பி-க்கள் எண்ணிக்கை குறைப்பு, சரியாக செயல்படுத்தாத மாநிலங்களுக்கு எண்ணிக்கை அதிகரிப்பு என்ற விநோதமான காட்சி அரங்கேறும் நிலை ஏற்பட்டது. இது அரசமைப்புச் சட்டக்கூறு 81-க்கு எதிராக இருக்கும் என்பதால், அதை 2001 வரை ஒத்திவைப்பதாக இந்திரா காந்தி அறிவித்தார்.

இதன்படி பார்த்தால், 2001-க்குப் பிறகு எம்பி-க்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்க வேண்டும், தொகுதிகள் எல்லை மறுவரையறை நடந்திருக்க வேண்டும். ஆனால், அப்போதும் மாறவில்லை. அப்போது இருந்த வாஜ்பாய் அரசும் இந்திரா காந்தி சந்தித்த அதே சர்ச்சையைத்தான் சந்திக்க வேண்டியிருந்தது. இதையடுத்து 2003-ல் வாஜ்பாய் அரசு, இந்தத் திருத்தத்தை 2026 வரை ஒத்திவைத்தது. தென்னிந்திய மாநிலங்களின் மக்களவைத் தொகுதி எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் காரணமாகவே வாஜ்பாய் அரசும் அந்த முடிவை எடுத்தது.

எளிதான காரியமல்ல

இனி, இன்றைய மோடி அரசு எம்பி-க்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையைக் கையில் எடுக்க வேண்டுமெனில், முதலில் 2021 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடைபெற வேண்டும். அந்தக் கணக்கெடுப்பில் அரசமைப்புச் சட்டக்கூறு 81-ன் படி மாநிலங்களின் மக்கள்தொகைக்கும் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கைக்குமான விகிதத்தில் பெரிய வித்தியாசம் இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால், தற்போதைய நிலையிலும் தென்னிந்திய மாநிலங்களில் பாதிப்பு ஏற்படும் நிலைதான் உள்ளது. இதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இப்போதே பேசத் தொடங்கிவிட்டன. எனவே, 2024-ல் மக்களவைத் தேர்தலில் எம்பி-க்களின் எண்ணிக்கையை 1,000-ஆக உயர்த்துவது என்பதைச் சாத்தியப்படுத்துவது லேசுப்பட்ட காரியமல்ல.

ஆக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியபடி 2024-ல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல், 1,000 எம்.பி-க்கள் எண்ணிக்கை போன்றவை விவாதமாகவும், உள்ளாட்சித் தேர்தலுக்காகக் கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் உத்தியாகவும் மட்டுமே பார்க்க முடியும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in