திராவிட மாடல் அரசியல் தேவையா?

திராவிட மாடல் அரசியல் தேவையா?

தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் தற்போது அதிகமாக உச்சரிக்கப்படும் வார்த்தை எது எனப்போட்டி வைத்தால், ‘திராவிட மாடல்’ என்ற பதில் கிடைக்கும். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் ஆட்சியின் முன் நகர்வுகள் ஒரு மாற்று அரசியலுக்கான பயணத்தைத் துவக்கியுள்ளது.

திமுக கூட்டணி கட்சியினரின் கோரிக்கைகளை செவிமடுப்பது, அவர்களுக்குரிய இடங்களைப் பகிர்ந்தளிப்பது, கொடுக்கப்பட்ட இடங்கள் பறிக்கப்பட்டதை எதிர்த்து தனது கட்சியினர் மீதே நடவடிக்கை அம்புகளைப் பாய்ச்சுவது, எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களை நாகரிகத்துடன் எதிர்கொள்வது என முதிர்ந்த அரசியல் தலைவருக்கான பண்புகளுடன் செயல்படும் ஸ்டாலினின் நடவடிக்கைகளுக்குப் பின்னால் இருக்கும் கனவு பெரியது. அந்த கனவென்பது திராவிட மாடல் ஆட்சி. கடந்த ஆண்டில் இருந்து ஸ்டாலினின் உரையாடல், அறிக்கை, ட்விட்டர் என எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருக்கும் சொல் ‘திராவிட மாடல்’.

கடந்த ஆண்டு ஜூலை 9-ம் தேதி பொருளாதார ஆலோசனை கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் ரகுராம் ராஜன், எஸ்தர் தஃப்லோ, அரவிந்த் சுப்பிரமணியன், டாக்டர் எஸ். நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். எஸ்.நாராயணன் எழுதிய நூல் குறித்து மேற்கோள் காட்டிய ஸ்டாலின், " எல்லா சமூகங்களுக்குமான வளர்ச்சி, எல்லா மாவட்டங்களையும் சமூகத்தின் எல்லா பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, இது தான் திராவிட மாடல்" என்று அவர் குறிப்பிட்டது தான், தமிழகத்தை அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்த விரும்பும் அரசியலாகும்.

சென்னையில் நடைபெற்ற தனது சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில், “திராவிட மாடல் கோட்பாட்டை இந்தியா முழுமைக்கும் விதைப்பதை பணியாக மேற்கொள்வேன்’ என்று ஸ்டாலின் உறுதிபட பேசினார். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்ற போதும், “ஒன்பது மாத கால திராவிட மாடல் ஆட்சிக்கு, தமிழக மக்கள் அளித்துள்ள நற்சான்றிதழ்” என ஸ்டாலின் பெருமை பொங்க பேசினார். இதே கருத்தை ட்விட்டரிலும் அவர் பதிவு செய்தார்.

சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவன பேராசிரியர்களான ஏ.கலையரசன், எம்.விஜயபாஸ்கர் ஆகியோர் எழுதிய ‘தி திராவிடர் மாடல்’ என்ற ஆங்கிலப் புத்தகம் வெளியானது. பொருளாதார ரீதியாக பின் தங்கிய மாநிலங்களில் உள்ள அடித்தட்டு மக்களின் நிலையையும், சமூக நீதியின் அடிப்படையில் தமிழகத்தில் திராவிட ஆட்சிகளில் அடித்தட்டு மக்கள் அடைந்த வளர்ச்சியையும் இந்த புத்தகம் பேசியுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சி தான் திராவிட மாடல் என்றும் குறிப்பிட்டுள்ளது. சமூகநீதிக்கு எதிராக செயல்படுகிறார் என்று நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலுவால் குற்றச்சாட்டப்பட்ட தமிழக ஆளுநர் ரவிக்கு, திராவிட மாடல் புத்தகத்தையே அன்றைய தினம் ஸ்டாலின் பரிசாக வழங்கினார்.

தமிழகத்தில் திராவிட இயக்கம் வலியுறுத்திய சமூக நீதி, சுயமரியாதை, கூட்டாட்சி, மொழி பாதுகாப்பு ஆகியவற்றை தனது கொள்கை அணிகலனாக திமுக கொண்டுள்ளது. மொழி வழி மாநில மக்களின் பன்முக கலாச்சாரத்தை பாஜக ஏற்பதில்லை, எதிர்க்கிறது. இந்த கலாச்சாரத்திற்கு எதிராக ஒற்றை ஆட்சி முறையைக் கொண்டு வர முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்த தத்துவத்திற்கு எதிராக திராவிட மாடல் கருத்தாக்கத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று ஸ்டாலின் தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அடுத்து மத்தியில் அமையும் ஆட்சிக்கு, திராவிட மாடல் ஆட்சி கைகொடுத்து உதவியது என்ற நிலையை உருவாக்க அதற்கான முன் நடவடிக்கைகளிலும் ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார். தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் தேர்தல்களில் திமுக அமோக வெற்றி பெறுவதும், அதை திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த வெற்றியென ஸ்டாலின் கொண்டாடுவதையும் பாஜக ரசிக்கவில்லை. அதனால் திராவிட மாடல் ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்கிறது.

‘ டாஸ்மாக்கை நம்பி ஆட்சி நடத்துவது தான் திராவிட மாடல் வளர்ச்சியா?’, ‘ஹாட் பாக்ஸ், கொலுசு, பணம் இதுதான் திராவிட மாடல் வெற்றியா? ‘ என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஒருபடி மேலே சென்று, “ கருப்பு சட்டைக்காரர்களின் திருமணம் கடந்த உறவே திராவிட மாடல்” என்று விமர்சனம் செய்தார். திராவிட மாடல் ஆட்சியைப் பற்றி பெரிதாக அதிமுக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசுகையில், ”தமிழக மக்களுக்கு எதிரான எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்காமல் உண்மையான திராவிட மாடல் ஆட்சியை அளித்தவர் ஜெயலலிதா தான்” என்று பேசியுள்ளார். திராவிட மாடல் என்றவுடன் பாஜகவிற்கு மட்டுமின்றி ஆம் ஆத்மி கட்சிக்கும் கோபம் வருகிறது. “தமிழகத்தில் திராவிட மாடல் எடுபடாது. இனி டெல்லி மாடல் தான்” என அக்கட்சியின் மாநில தலைவர் வசீகரன் பேசுகிறார்.

தமிழன் பிரசன்னா
தமிழன் பிரசன்னா

திராவிட மாடல் குறித்து முதல்வர் ஸ்டாலின் அதிகம் பேச வேண்டிய அவசியம் எதனால் ஏற்பட்டது என்று திமுக மாநில இணை செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் தமிழன் பிரசன்னாவிடம் கேட்டபோது, “ திராவிடம் என்பது ஒரு நிலப்பகுதியைக் கட்டமைக்கிற பெயர். திராவிடம் என்பது நாகரிகத்தின்பெயர். குஜராத் போட்டோ ஷாப் மாடலை வைத்து அந்த ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், இடஒதுக்கீடு, சமூகநீதி வளர்ச்சியில் ஒரு மாடலைக் கொண்டு வரும் போது அதை அவர்கள் ஏற்க முடியாது என்கிறார்கள். திராவிட மாடல் என்பது இன்றைய தேவை. பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் ஆகியோர் மையப்புள்ளியாக வைப்பது மதச்சார்பின்மை. இந்திய அரசியல் சாசனம் தந்துள்ள மதச்சுதந்திரத்தை, மதச்சார்பின்மையைச் சீர்குலைக்கிற ஆட்சி மத்தியில் நடக்கிறது. அதை அகற்ற வேண்டும் என்றால், அரசியல் சாசனச்சட்டத்தின் அடித்தளமாக திகழ்கின்ற மதச்சார்பின்மையை வலியுறுத்துகிறோம். அதற்கான வடிவம் தான் திராவிட மாடல். இந்த மண்ணுக்குத் தேவை மதச்சார்பின்மை, வேற்றுமையில் ஒற்றுமை. அதற்கு எதிராக ஒரே மதம், ஒரே மொழி என பாஜக மாற்ற முற்படுகிறது. அதனால் தான் சுயாட்சியைப் பாதுகாக்கும் கட்டமைப்பான திராவிட மாடலை தலைவர் ஸ்டாலின் முன் வைக்கிறார்” என்று கூறினார்.

Related Stories

No stories found.