வைத்திலிங்கத்தை வளைக்கப் பார்க்கிறதா திமுக?

வெளிவராத பின்னணி தகவல்கள்
வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

வழக்கமாக அதிமுகவில் உட்கட்சி உரசல் ஏற்படும்போதெல்லாம் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்தான் உச்சாணி ஏறுவார். ஆனால் இம்முறை துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் முறுக்கிக் கொண்டு வெளியேறியிருக்கிறார்.

அதிமுக உட்கட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி மாலை நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளர்கள் குறித்து பேசி முடிவு செய்யவும்,சில மாவட்டச் செயலாளர்களை மாற்றம் செய்வது குறித்தும் ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, மாவட்டச் செயலாளர்கள் பலர் தங்கள் ஆதரவாளர்களையே நிர்வாகிகளாக நியமித்திருப்பதாக குறைபட்டுக்கொண்ட ஓபிஎஸ், அப்படி நியமிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக இருப்பதாகச் சொல்லி அந்த நியமனத்துக்கான ஒப்புதல் கடிதத்தில் கையெழுத்திட மறுத்ததாகக் கூறுகிறார்கள்.

அத்துடன், உள்கட்சித் தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் பலருக்கும் தேர்தலில் போட்டியிட முடியாதநிலை இருப்பது குறித்த பேச்சு கிளம்பியிருக்கிறது. அதோடு கட்சிக்குள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதிக்கம் அதிகமாக இருப்பது பற்றியும், சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று தேனி மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியது தொடர்பாகவும் பேச்சுகள் எழுந்துள்ளன. இதற்கு எடப்பாடி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தனது கருத்தை தெரிவித்த துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், “எடப்பாடி பழனிசாமி மற்றவர்கள் பேச்சையும் கேட்டுச் செயல்படவேண்டும்” என்றாராம். அதற்கு சி.வி.சண்முகம் உள்ளிட்ட பலரும் எழுந்து வைத்திலிங்கத்தை கடுமையான வார்த்தைகளில் பேசியிருக்கிறார்கள். வைத்திலிங்கம் கருத்துக்கு ஆதரவாக மத்திய மண்டலத்தைச் சேர்ந்த திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் நின்றிருக்கிறார்கள். ஏற்கெனவே ஒருமுறை இப்படி சி.வி.சண்முகம் உள்ளிட்டவர்கள் தனக்கு எதிராக நடந்துகொண்டதால் அதிருப்தியில் இருந்த வைத்திலிங்கம், “தொடர்ந்து என்மீது வன்மத்துடன் நடந்து கொள்கிறார்கள். துணை ஒருங்கிணைப்பாளரான எனக்கு எந்த விதத்திலும் கட்சியில் மரியாதை இல்லை” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறியதாகச் சொல்கிறார்கள்.

ஆவேசத்துடன் வெளியேறிய வைத்திலிங்கத்தை பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட பிற நிர்வாகிகள் சமாதானப்படுத்தினர். ஆனாலும் அவர் நிற்காமல் புறப்பட்டுப்போய் விட்டார். அவர் தங்கியிருக்கும் ஹோட்டல் வரைக்கும் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்டவர்கள் தேடிச்சென்றும் அவரை சமாதானப்படுத்த முடியவில்லை. பிறகு, ஓபிஎஸ் அலைபேசியில் பேசியபிறகே ஒருமணி நேரம் கழித்து மீண்டும் கூட்டத்திற்கு வந்தார் வைத்திலிங்கம்.

கட்சியில் எடப்பாடியின் கை தன்னிச்சையாக ஓங்குவதை ஓபிஎஸ் போலவே வைத்திலிங்கமும் விரும்பவில்லை. தன்னை துணை ஒருங்கிணைப்பாளராகவும், அமைப்புச் செயலாளராகவும் வைத்திருந்தாலும் அனைத்து முடிவுகளையும் எடப்பாடி பழனிசாமி எடுப்பதை வைத்திலிங்கம் ரசிக்கவில்லை. கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் போன்றவர்களுக்கு இருக்கும் மரியாதைகூட சீனியரான தனக்கு இல்லை என்பதும் அவரது ஆதங்கம். அன்றைய கூட்டத்திலும் அதற்கேற்ப சி.வி.சண்முகம் போன்றவர்களைத் தனக்கெதிராக பேசவிட்டு வேடிக்கைப் பார்த்ததை சகிக்க முடியாமல் தான் அவர் வெளியேறிவிட்டார் என்கிறார்கள்.

அதேசமயம் வைத்திலிங்கத்தை சசிகலா ஆதரவாளர் என சந்தேகிக்கும் எடப்பாடி தரப்பு, அவரை எக்ஸ்ட்ரா லக்கேஜாகவே கருதுகிறது. அதனால் அவருக்கு எதிரான வேலைகளை முடுக்கிவிட்டு அவரை ஓரேயடியாக ஓரங்கட்டும் வேலைகளைப் படிப்படியாகச் செய்கிறார்கள். வைத்திலிங்கத்தை ஓரங்கட்டிவிட்டு அந்த இடத்தில் டெல்டாவில் தனக்கு விசுவாசமாக இருக்கும் முன்னாள் அமைச்சரும், திருவாரூர் மாவட்ட செயலாளருமான ஆர்.காமராஜை அமர்த்த நினைக்கிறார் எடப்பாடி. இதற்கேற்பவே காமராஜுக்கு இப்போது எடப்பாடி தரப்பில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

எடப்பாடி தரப்பின் வியூகத்தைப் புரிந்து கொண்ட டெல்டா அதிமுக தலைகள் சிலர், இப்போது காமராஜை சுற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். அண்மையில் நடைபெற்ற காமராஜ் பிறந்த நாள் விழாவில் தஞ்சை அதிமுகவினர் பெருமளவில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை அதிமுக சீனியர் ஒருவர், “காலத்துக்கேற்ப வைத்திலிங்கம் தன்னை மாற்றிக்கொள்ள வில்லை. தனக்கென ஒரு சிறு ஆதரவு வட்டத்தை மட்டும் வைத்துக் கொண்டு அவர்கள் தான் கட்சி என நினைக்கிறார். தன்னை மேல்மட்ட அரசியல்வாதியாக நினைத்துக் கொள்கிறார். கீழ்மட்ட அளவில் கட்சிக்காரர்கள் யாரையும் அரவணைத்துப் போகாததால் கட்சிக்குள் என்ன நடக்கிறது என்றே அவருக்குத் தெரியவில்லை.

உள்ளாட்சித் தேர்தலில் தஞ்சை மாநகராட்சியில் வைத்திலிங்கத்தின் நெருங்கிய ஆதரவாளர்கள் 5 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதைக்கூட என்ன ஏது என்று கேட்கவில்லை அவர். தேர்தலில் நின்றவர்களுக்கும் பைசா காசு செலவுசெய்யவில்லை. இதெல்லாம் செய்ய முன்வராதவர், தனக்கு எதிராக செயல்பட்டார் என்று சொல்லி தஞ்சையில் பகுதிச் செயலாளர் சரவணன் என்பவரை தேர்தல் சமயத்தில் கட்சியைவிட்டு நீக்க வைக்கிறார். தனக்கு எதிரானவர்கள் மீது துரிதநடவடிக்கை எடுக்கும் வைத்திலிங்கம், ஆதரவாளர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் முடங்கிப் படுத்துக்கொள்கிறார். பிறகு எப்படி அவருக்குப் பின்னால் கட்சிக்காரர்கள் நிற்பார்கள்?” என்றார்.

வைத்திலிங்கத்தின் இத்தகைய செயல்பாடுகளால், ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட அதிமுகவில் அவருக்கு எதிராக ஒரு தனி அணியே உருவாகிக் கொண்டிருக்கிறது. முன்னாள் எம்எல்ஏ-க்கள் தங்கமுத்து, பட்டுக்கோட்டை சேகர், வைத்திலிங்கத்தின் ‘பின்புலம்’ எனச் சொல்லப்பட்ட ஒரத்தநாடு காந்தி, முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவின் மகன் ஐயப்பன் உள்ளிட்டோர் இந்த அணியைக் கட்டமைத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களெல்லாம் இருக்கும் தெம்பில் தான் எடப்பாடி தரப்பு வைத்திலிங்கத்தை துணிச்சலாக எதிர்ப்பதாகச் சொல்கிறார்கள்.

சட்டப்பேரவைத் தேர்தலின்போது, “வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு அறிவிப்பு தென்மாவட்டங்களில் அதிமுகவின் வெற்றியைப் பாதிக்கும்” என்று வெளிப்படையாக கருத்துச் சொன்னவர் வைத்திலிங்கம். சி.வி.சண்முகம் உள்ளிட்ட எடப்பாடி தரப்பின் ஏகோபித்த எதிர்ப்பை வைத்திலிங்கம் சம்பாதிக்க இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள்.

கட்சிக்குள் தனது நிலைமை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என புரிந்துகொண்ட வைத்திலிங்கம், தனது அரசியல் இருப்பைத் தக்கவைக்க வேறுபல வேலைகளிலும் இறங்கி விட்டதாகவும் சொல்கிறார்கள். இதைப் புரிந்துகொண்டு திமுக தரப்பில் அமைச்சர் எ.வ.வேலு தரப்பிலிருந்து வைத்திலிங்கத்துக்கு தூது அனுப்பியதாகவும் ஒரு பேச்சு தஞ்சை பக்கம் தடதடக்கிறது. வைத்திலிங்கத்தின் ரத்த உறவு ஒருவருக்கு நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்கள் தாராளமாகத் தரப்படுவதாகவும் சிலர் கொளுத்திப் போடுகிறார்கள்.

ஓபிஎஸ்சை பின்னுக்குத்தள்ளி தனிப்பெரும் தலைவராக தன்னை தகவமைத்துக் கொண்டு வரும் ஈபிஎஸ்சுக்கு பதிலடி கொடுக்க அதிமுக தரப்பிலிருந்தே ஒருவரை தயார்படுத்த நினைக்கிறதாம் திமுக. அதற்காகவே வைத்தி மீது திமுகவின் கரிசனப் பார்வை விழுவதாகவும் சொல்கிறார்கள்.

இந்த நகர்வுகள் ஒருபுறமிருக்க, வைத்திலிங்கத்தின் சம்பந்தி தவமணி, சசிகலா தஞ்சை வந்திருந்தபோது அவரை நேரில் சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்புக்குப் பிறகு வைத்திலிங்கத்தின் மகன் பிரபு பேசிய சில தகவல்களை வைத்துக்கொண்டு, “வைத்தி தரப்பு சசிகலா வந்தால் பரவாயில்லை என்ற முடிவில் இருக்கிறது” என்று சிலர் அதிமுக தலைமை வரைக்கும் தகவலைத் தட்டிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

ஆக, ஒரு காலத்தில் டெல்டா அதிமுகவில் அசைக்கமுடியாத சக்தியாக இருந்த வைத்திலிங்கத்துக்கு இப்போது அதிமுகவில் உரிய மரியாதை இல்லை என்று தெரிகிறது. அவர் இதைச் சகித்துக் கொண்டு இப்படியே இருந்துவிடுவாரா... அல்லது அழைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு அதிமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பாரா என்பது சீக்கிரமே தெரிந்துவிடும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in