அடையாள அரசியலுக்குள் அமிழ்கிறதா திமுக?

அடையாள அரசியலுக்குள் அமிழ்கிறதா திமுக?

மத்தியில் ஆளும் பாஜகவை என்ன சொல்லி விமர்சித்ததோ, அதே அடையாள அரசியலுக்குள் இன்று திமுக அமிழ்ந்துகொண்டிருப்பதாக விமர்சனங்கள் வந்து விழுகின்றன. திமுக முன்னோடிகளான அண்ணா, கருணாநிதியைக் காட்டிலும் இன்றைய திமுக தலைவர் ஸ்டாலின் சித்தாந்தத்தைத் தூக்கிப்பிடிக்கிறார் என்று புகழ்கிறார்கள் திராவிட இயக்கத்தினர். முன்னவர்கள் வெறும் சித்தாந்தத்தை மட்டும் உயர்த்திப் பிடிக்கவில்லை, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் சமூக நலத்திட்டங்களிலும் அவர்களுக்கு உண்மையான அக்கறை இருந்தது. இன்றைய முதல்வருக்கு அதில் உண்மையிலேயே அக்கறை இருக்கிறதா... அல்லது அடையாள அரசியலில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறாரா?

எது அடையாள அரசியல்?

ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பல அடையாளங்கள் இருக்கின்றன. தேசத்தால் நான் இந்தியன், துணை தேசியத்தால் நான் தமிழன், மதத்தால் இந்து, வர்க்கத்தால் தொழிலாளி, சாதியால் பட்டியலினம், பாலினத்தால் நான் பெண் என்று எத்தனையோ அடையாளங்கள். இதில் ஏதாவது ஒரு அடையாளத்தை முன்னிறுத்தி ஆட்களைத் திரட்டுவதையும், அந்த பொது அடையாளத்துக்காக அரசியல் செய்வதையும் தான் அடையாள அரசியல் என்கிறோம்.

இந்தியாவில் அடையாள அரசியலில் வெற்றிகரமான முன்மாதிரியாக பாஜகவை சொல்லலாம். தொலை நோக்குத் திட்டங்களையோ, மக்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்துகிற மாற்றங்களையோ பற்றி சிந்திக்காமல் சதாகாலமும் நாம் இந்து, அவர்கள் நம் எதிரிகள் என்ற அடையாள அரசியலை மட்டுமே பேசி வெற்றி மீது வெற்றியைக் குவிக்கிற கட்சி பாஜக என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.

அதிமுக தனது 10 ஆண்டு கால ஆட்சி முடியப் போகிற தருணத்தில், மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காக ஏதேதோ செய்தது. அனைத்து சாதித் தலைவர்களுக்கும் மணி மண்டபம், கல்லூரி மாணவர்களுக்கு ஆல் பாஸ், வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு, தைப்பூசத்துக்கு விடுமுறை என்று பலபல அறிவிப்புகள். ஆனால், உத்தர பிரதேச தேர்லையொட்டி இப்படியெல்லாம் மெனக்கிடவில்லை பாஜக. மோடி காசிக்குப் போனார், ராமானுஜரின் பிரம்மாண்ட சிலை திறப்பு விழாவுக்குப் போனார், காவி உடை தரித்தது, நெற்றியில் திருமண் அணிந்து சில போஸ்களைக் கொடுத்தார். முடிந்தது கதை. பிரம்மாண்ட வெற்றி.

வைத்தியன் பைத்தியமான கதை...

ஒரு சித்தாந்தத்தை இன்னொரு சித்தாந்தம் அழிக்கத் துடித்தாலும்கூட, உண்மையில் அது எதிர் சித்தாந்தத்தை ஊட்டி வளர்க்கிறது என்பதே கள எதார்த்தம். இந்து, இந்தியா, இந்துத்துவா என்ற அடையாள அரசியலைச் செய்கிறது பாஜக என்று அதற்கு நேர் எதிரான தனது சித்தாந்தத்தைத் தூக்கிப்பிடித்தது திமுக. மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி உரிமை, பன்மைத்துவம் என்று தொடர்ந்து பேசியது. கூட்டணிக் கட்சிகள் திமுகவை மெச்சின. தலையில் வைத்துக்கொண்டாடின. தேர்தல் காலத்தில் திமுகதான், பாஜக அலையில் இருந்து தமிழ்நாட்டைக் காக்கும் ரட்சகன் என்று பிரச்சாரம் செய்தன. அதேபோல தமிழ்நாட்டில் திமுக வென்றும் காட்டியது.

வெற்றிக்குப் பிறகு திமுக தனது வழக்கமான சமூக நலத்திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை (விதிவிலக்கு பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்). பொங்கல் பரிசுப் பொருட்களின் தரம் கடும் விமர்சனத்துக்கு ஆளானது. அதன் பிறகாவது திமுக சுதாரித்திருக்க வேண்டும். ஆனால், தமிழக பட்ஜெட்டில் மறுபடியும் திமுக சொதப்பியிருக்கிறது. சமூகநீதி, சமூக நலத்திட்டங்கள், தொழில் வளர்ச்சி மூன்றும் இணைந்தது தான் தமிழக மாடல். ஆனால், திமுகவின் பட்ஜெட்டோ சமூக நலத்திட்டங்கள் பற்றி பெரிதாக சிந்தித்ததாக தெரியவில்லை.

ஜெயலலிதா அறிமுகப்படுத்திய தாலிக்கு தங்கம் திட்டத்தை மட்டும் கைவிடவில்லை, கருணாநிதி கொண்டுவந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தையே கைவிட்டுவிட்டது திமுக. உயர் கல்வியில் சேரும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் வரவேற்புக்குரியது என்றாலும், அதற்காக திருமண உதவித் திட்டத்தை ரத்து செய்திருக்க வேண்டியதில்லை. மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி போன்ற பயனற்ற இலவசத் திட்டங்களைத் தொடராதது வரவேற்புக்குரியது என்றாலும், அதோடு விலையில்லா ஆடு, மாடு, கோழி வழங்கும் திட்டத்தையும் சேர்த்து ரத்து செய்திருப்பது அபத்தம். முன்னது இலவசம், பின்னது முதலீடு என்ற புரிதல் இல்லாத நடவடிக்கை அது.

தந்தை பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக ஏற்கெனவே அறிவித்திருக்கிற திமுக அரசு, கடும் நிதி நெருக்கடியில் போடப்பட்ட இந்த பட்ஜெட்டில் பெரியார் சிந்தனைகளை 21 மொழிகளுக்கு கொண்டு செல்வதற்காக ரூ.5 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவித்திருக்கிறது. தமிழகத்தின் பெருமைமிகு அடையாளம் பெரியார், அவரது சிந்தனைகள் உலகமெங்கும் பரவவேண்டிய ஒன்றுதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், சமூக நலத்திட்டங்களைக் கைவிட்டுவிட்டு இதுபோன்ற அறிவிப்புகளில் ஆர்வம் காட்டுவதன் மூலம் திமுகவும் அடையாள அரசியலுக்குள் அமிழ்கிறதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடையாள அரசியல் தேவையற்றதா?

அடையாள அரசியலுக்கு அடிப்படையே கிடையாது என்றோ, அது ஒரு மாய அரசியல் என்றோ சொல்லிவிட முடியாது. ஒருவகையில் பார்த்தால் அடையாள அரசியலின் அடிநாதமாக இருப்பதும் நியாயமான வாதம்தான். உதாரணமாக, சமூகத்தில் ஒடுக்கப்படுகிறவர்கள் பட்டியலின அடையாள அரசியலைப் பேசுவார்கள். தமிழர்களின் பண்பாட்டுக்கும், பெருமைக்கும் வெளியில் இருந்து இடையூறுகள் வருகிறபோது, தமிழின அடையாள அரசியல் பேசப்படுவதும் அப்படியானதே. அது உரிமைகளைக் கோருவதற்கும், ஒடுக்குமுறையில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் பயன்படுத்தப்பட்டால் வரவேற்கலாம். ஒருவகையில் தேர்தலுக்காக அடையாள அரசியலைப் பேசுவதைக்கூட சகித்துக்கொள்ளலாம். ஒரு தரப்பு ஓர் குறிப்பிட்ட அடையாளத்தை முன்னிறுத்தும்போது, பதிலடியாக அதற்கு எதிரான இன்னொரு அடையாளத்தை முன்னிறுத்துவதும் புரிந்துகொள்ளக்கூடியதே. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகும் அடையாள அரசியல்தான் செய்வோம் என்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.

மோடி அரசு மூவாயிரம் கோடி ரூபாயில் படேலுக்கு சிலை அமைத்ததும், அரசு செலவிலேயே அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதும் பாஜக அல்லாதவர்களால் அடையாள அரசியலாகப் பார்க்கப்படுவது போலவே, திமுக அரசின் சில நடவடிக்கைகள் அடையாள அரசியலாகவே பார்க்கப்படுகின்றன. இந்தியாவில் சமீப காலமாக நடந்துவருவது மக்களாட்சி அல்ல, அரசியல் கட்சிகளின் ஆட்சியே என்று எண்ணத் தோன்றுகிறது. குறிப்பாக, ஆளும் கட்சியின் ஆட்சி. மக்களின் குரலும், அழுகையும், வயிற்றெரிச்சலும் பெரும்பாலும் ஆட்சியாளர்களின் காதுகளையே எட்டுவதில்லை. எல்லாவற்றிலும் ஆளுங்கட்சியின் விருப்பமே நிறைவேறுகிறது. ஆளுங்கட்சியின் அத்தனை நடவடிக்கையையும் அப்படியே ஏற்றுக்கொள்பவர்கள்தான் இங்கே நல்ல குடிமகன்களாக, தேச பக்தி உள்ளவர்களாக கருதப்படுகிறார்கள். மற்றோரெல்லாம் தேச துரோகிகள். அப்படித்தான் கிட்டத்தட்ட பாஜகவின் பாதையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது திமுக அரசு. சித்தாந்தத்தைத் தூக்கிப்பிடிப்பதில் தவறில்லை. ஆனால், குடிமக்களைக் காட்டிலும், அவர்களின் நலனைக் காட்டிலும் எந்தச் சித்தாந்தமும் உயர்ந்தது அல்ல என்பதையும் உணரவேண்டும்.

செய்ய வேண்டியது என்ன?

இந்தியாவிலேயே, “அம்மா சோறு போடுங்கம்மா” என்று வீடு வீடாக கையேந்துகிற அவல நிலையை ஒழித்த முதல் மாநிலம் தமிழ்நாடு. காரணம், இலவச ரேஷன் அரிசி திட்டம். ஆனால், அடுத்த கட்டமாக அந்த ரேஷன் பொருட்களின் தரத்தை உயர்த்துவதிலும், சரியான அளவில், சுரண்டலற்ற முறையில் விநியோகிப்பதிலும் அக்கறை காட்டியிருக்க வேண்டும் திமுக. இத்தனைக்கும் ரேஷன் பொருட்களை பொட்டலமிட்டு வழங்குவோம் என்று தேர்தல் அறிக்கையிலேயே சொல்லியிருந்தது திமுக. ஆனால், செய்யவில்லை.

பள்ளிக்கல்வியை வெற்றிகரமாக மாநிலம் முழுவதும் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டது தமிழகம். உயர் கல்வி பயில்வோர் சதவீதத்திலும் தமிழகம் முன்வரிசையில் நிற்கிறது. இந்தப் பெருமையையே திரும்பத் திரும்பச் சொல்லிக்காட்டுவது பயனற்றது. கல்வி பயில்வோரின் எண்ணிக்கை அடிப்படையில் இதெல்லாம் உண்மைதான் என்றாலும் தரத்தில் நாம் பெருமைப்பட முடியவில்லை. பள்ளிக்கல்வியின் தரம் மிக மோசமாக இருக்கிறது. கல்லூரிப் படிப்போ மாணவர்களின் வாழ்க்கைக்கு உதவுவதாக இல்லை. டிகிரி முடித்துவிட்டு பெரும்பாலான பட்டதாரிகள் சொமேட்டோவுக்கு வண்டி ஓட்டத்தான் போகிறார்கள். அசோகா, ஜின்டால், அசிம் பிரேம்ஜி போன்ற பல்கலைக்கழங்கங்கள் உயர் கல்வி எனும் ஐடியாவையே மறுவரையறை செய்திருக்கின்றன. இங்கெல்லாம் படித்துவிட்டு வெளியேறும் ஒவ்வொருவரும் ஒரு ஸ்காலராக இருக்க வேண்டும் என்று மெனக்கிடுகிறார்கள். நம்மூரில் இன்னமும் கல்லூரி என்பது ஜாலியாகப் போய்விட்டு ஜாலியாக வெளியே வருவது என்கிற எண்ணமே எஞ்சியிருக்கிறது.

'வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' என்று முழங்கும் திமுக, தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களின் முன்னேற்றத்துக்கு மட்டும் குரல் கொடுப்பதையும் மற்ற மாவட்டங்களைக் கண்டும் காணாமல் இருப்பதையும் விமர்சிக்காமல் இருக்க முடியாது. தேசிய நெடுஞ்சாலை டோல் கேட் அகற்றும் விஷயத்தில்கூட சென்னையைச் சுற்றியுள்ள டோல்கேட்களை பற்றி மட்டுமே பேசுகிறார் அமைச்சர் எ.வ.வேலு. மத்தியில் அதிகாரக் குவிப்புக்கு எதிராக பேசும் திமுக, இங்கே உள்ளாட்சிகளுக்கு அதிகாரம் வழங்காமல் இருப்பதையும் கண்டுகொள்ளாதிருக்க முடியாது.

நம்முடைய முதல்வர் அடிக்கடி, “சொல் அல்ல... செயல்” என்று பேசுகிறார். ஆம், தமிழ்நாட்டிற்கு அவர் செய்ய வேண்டியவை நிறைய இருக்கின்றன. அதை முடித்துவிட்டு அதன்பிறகு அவர் சித்தாந்தம் பற்றி பேசுவதே பொருத்தமாக இருக்கும். மக்கள் மனங்களை வென்று அதன் மீது கட்டப்படும் சித்தாந்தக் கோட்டைக்குத்தான் ஆயுள் அதிகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in