இனியும் தேவையா ஆறுமுகசாமி ஆணையம்?

மக்கள் பணம் 50 கோடிக்கு மேல் வீண் செலவு!
ஆறுமுகசாமி
ஆறுமுகசாமி

ஆடு திருடனுக்குத் தண்டனை வாங்கிக்கொடுக்க பஞ்சாயத்தைக்கூட்டிய கோபாலை, கடைசியில், “ஆடு திருடுபோனது மாதிரி கனவு கண்டேன்” என்று சொல்லவைத்து பஞ்சாயத்தைக் கலைத்த சூனாபானா காமெடிக்கு சிரிக்காதவர்கள் இருக்கமுடியாது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓபிஎஸ் கோரிப்பெற்ற ஆறுமுகசாமி ஆணையத்தில், அவரே ஆஜராகி கொடுத்த வாக்குமூலம் அந்த கோபால் கதாபாத்திரத்தை மீண்டும் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

சுற்றி நிற்கும் சசிகலா உறவுகள்...
சுற்றி நிற்கும் சசிகலா உறவுகள்...

ஜெயலலிதா மரண சர்ச்சை

எண்ணெய் தீர்ந்து அணையும் விளக்குக்கும், சூறைக்காற்றில் அணையும் விளக்குக்கும் வித்தியாசமுண்டு. ஜெயலலிதாவின் மரணம் எந்தவகை என்பதில் இருவேறு கருத்துகள் இருந்தது. 2016 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு மாவட்டத்துக்கு ஓரிடம் என்றுகூட செல்லாமல் வெறும் நான்கே நான்கு இடங்களில் மட்டும் பிரச்சாரம் செய்தார் ஜெயலலிதா. வாக்களிக்க வந்தபோதுகூட, மிகவும் சிரமப்பட்டு மெல்லமெல்ல அடியெடுத்து வைத்ததை உலகே பார்த்தது.

வெற்றிபெற்று அமைச்சரவை பதவியேற்பில்கூட உட்கார முடியாத உடல்வாதையால் கஷ்டப்பட்டார் ஜெயலலிதா. அதனால்தான் அமைச்சர்கள் தனித்தனியாக உறுதிமொழி கூறிப் பதவியேற்காமல், 28 அமைச்சர்களும் இரு பிரிவாக கோரஸாகப் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள். கடைசியாக கலந்துகொண்ட மெட்ரோ ரயில் தொடக்க விழா மேடைக்கு அவர் எப்படி வந்தார், அந்த நிகழ்வில் எவ்வளவு சோர்வுடன் இருந்தார் என்பதையும் நாடு அறியும். 2016 செப்டம்பர் 22-ம் தேதி இரவில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, 70 நாட்களுக்கு மேல் சிகிச்சையில் இருந்து, டிசம்பர் 5-ம் தேதி காலமானார்.

ஆனால், மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டதிலிருந்தே ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தகவல்கள் முழுமையாக வெளிவராமல் மறைக்கப்பட்டன. அரைகுறை தகவல்களே அதிகாரபூர்வ தகவல்களாக பத்திரிகைகளுக்குக் கொடுக்கப்பட்டன. சுயநினைவின்றி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவை, காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனையே அறிக்கை வாயிலாகச் சொன்னது. இந்த அறிக்கை விளையாட்டு ஒரு வார காலம் நீடித்த நிலையில், திமுக தலைவர் மு.கருணாநிதி, “முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அவரது உடல்நிலை குறித்து தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும்” என்று செப்டம்பர் 30-ல் அறிக்கை வெளியிட்டார்.

இதன் விளைவாக அடுத்த வாரமே (அக்டோபர் 5), அமைச்சரவையை இனி ஓ.பன்னீர்செல்வமே வழிநடத்துவார் என்று ஆளுநர் அறிவித்தார். ஜெயலலிதா சிகிச்சைபெற்ற எழுபது நாட்களில் யாரும் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. ரத்த உறவான ஜெ.தீபாவையும் அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா சிகிச்சை பெறுவது மாதிரியான புகைப்படமோ, வீடியோவோ கூட வெளியிடப்படவில்லை. இத்தனைக்கும் பிறகும்கூட ‘அம்மா இட்லி சாப்பிட்டார்’ என்பது மாதிரியான தகவல்களையே அதிமுக நிர்வாகிகள் சொல்லிக்கொண்டிருந்ததை மக்கள் ரசிக்கவில்லை.

ஜெயலலிதா மரணமடைந்தபோது, முதல்வர் (பொறுப்பு) ஓ.பன்னீர்செல்வமே சென்னையில் இல்லை என்பது அவர் இந்த மரணத்தை எதிர்பார்க்கவில்லை என்பதையே காட்டியது. ஜெலலிதாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டபோது, அவரால் விலக்கிவைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட சொந்தங்களே உடலைச் சுற்றி நின்றதை அதிமுகவினரே அதிர்ச்சியோடு பார்த்தார்கள். இவை எல்லாம் ஜெயலலிதாவின் மரணத்தில் சாமானியருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தின. ஜெயலலிதா இறந்து ஒரு மாதம்கூட ஆகாத நிலையில், அச்சு அசலாக ஜெயலலிதா போலவே கெட்-அப் போட்டு, பொதுச்செயலாளராக சசிகலா மக்கள் முன் தோன்றியதும், முதல்வர் நாற்காலி நோக்கி அவர் காய்நகர்த்தியதும் அந்தச் சந்தேகத்திற்கு மேலும் எண்ணெய் ஊற்றின.

ஆறுமுகசாமி ஆணையம்

முதல்வர் பதவியில் இருந்து விலகும்படி கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் பெறப்பட்ட விரக்தியில், ஜெயலலிதா நினைவிடத்தில் தர்மயுத்தம் நடத்தினார் ஓபிஎஸ். சசிகலா குடும்பத்தினர் பற்றி 10 சதவீதம்தான் சொல்லியிருக்கிறேன் என்றார். அவருக்கு ஆதரவாக அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பொன்னையன், பி.எச்.பாண்டியன் போன்றோர் சசிகலா தரப்பு ஜெயலலிதாவை கட்டையால் அடித்து, ஆஸ்பத்தியில் சேர்த்ததாகச் சொன்னார்கள். டிராஃபிக் ராமசாமியோ, ஜெயலலிதா உடலைத் தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் சென்றார்.

இடையிலேயே சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பால் சசிகலா சிறை செல்ல, முதல்வரானார் ஈபிஎஸ். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையே தனித்தனி அணியாக எதிர்கொண்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் மத்திய அரசின் உதவியால் ஓரணி ஆனார்கள். கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவி, ஆட்சியில் துணை முதல்வர் பதவி என்பதற்காக அந்த இணைப்புக்குச் சம்மதித்தாலும், அம்மாவின் மரணம் குறித்த உண்மையை கண்டறிய விசாரணை கமிஷன் அமைப்பதாக ஈபிஸ் உறுதியளித்ததாலேயே இந்த இணைப்பு நடத்தப்பட்டதாகச் சொன்னார் ஓபிஎஸ்.

அவரது வேண்டுகோளின்படியே ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டது.

கிடப்பில் போட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ்

3 மாதங்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல்செய்யப்படும் என்று அறிவித்து, சசிகலா, அவரது உறவினர்கள், ஓபிஎஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் அத்தனை பேருக்கும் சம்மன் அனுப்பியது ஆணையம். ஆனால், ஒவ்வொரு மூன்று மாதத்துக்கு ஒருமுறையும் ஆணையத்தின் ஆயுள் நீட்டிக்கப்பட்டதே ஒழிய, விசாரணை வேகமெடுக்கவே இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, ஆணையம் அமைக்கச் சொல்லி தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ், 8 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்தார். இதனால், 2017-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தால் இன்னமும் முழுமையாக விசாரணையை முடிக்க முடியவில்லை.

இதற்கிடையே, ஜெயலலிதா மரணத்தில் உண்மையான காரணத்தை கண்டுபிடித்துச் சொல்வோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து, அதிமுக அனுதாபிகளின் வாக்குகளையும் பெற்று ஆட்சிக்கு வந்தது திமுக. இந்த ஆட்சியிலும் 2 முறை நீட்டிக்கப்பட்டது ஆணையத்தின் ஆயுட்காலம். ஆக, மொத்தம் 12 முறை இந்த ஆணையத்தின் ஆயுள் நீட்டிக்கப்பட்டது.

ஓபிஎஸ் மனைவி இறந்த தருணத்தில்...
ஓபிஎஸ் மனைவி இறந்த தருணத்தில்...

ஓபிஎஸ்சின் அந்தர் பல்டி

நீதிமன்றத்தின் கண்டிப்பால், ஆணைய விசாரணை சூடுபிடித்தது. எட்டுமுறை சம்மன் அனுப்பியும் வாய்தா மேல் வாய்தா வாங்கிக்கொண்டிருந்த ஓபிஎஸ் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகிறார் என்கிற செய்தி, பெரிய எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. குறைந்தபட்சம் அமைச்சர்களையும், தலைவர்களையும் கூட ஜெயலலிதாவைப் பார்க்க முடியாமல் தடுத்தது யார்? ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வார்டைச் சுற்றியிருந்த சிசிடிவி கேமராக்கள் அனைத்தையும், ஒன்றுவிடாமல் அகற்றச் சொன்னது யார்? என்பது போன்ற சந்தேகங்களுக்கு விடைகிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், “தெரியாது” என்ற ஒற்றைச் சொல் பதிலால் முக்கால்வாசி கேள்விகளைக் கடந்திருக்கிறார் ஓபிஎஸ்.

எல்லாவற்றுக்கும் மேலாக, யார் மீது சந்தேகப்பட்டு இந்த ஆணையத்தை அமைத்தார்களோ, அவர்களுக்கே நற்சான்று கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் ஓபிஎஸ். “மக்களின் சந்தேகத்தைப் போக்கவே ஆணையம் அமைக்கப்பட்டது. சின்னம்மா மீது எங்களுக்கு எந்தச் சந்தேகமும் கிடையாது. தனிப்பட்ட முறையில் அவர் மீது எனக்கு எப்போதுமே மரியாதை உண்டு” என்று சொல்லி, தான் தொடங்கிய விளையாட்டை தானே முடித்துவைத்திருக்கிறார் ஓபிஎஸ்.

ஈபிஎஸ் முதல்வராக இருந்தபோது, வந்த சம்மனை ஏற்று ஆணையம் முன்பு ஆஜராகி, ஈபிஎஸ் கோபப்பட்டாலும் பரவாயில்லை, துணை முதல்வர் பதவியே போனாலும் பரவாயில்லை என்று இதே பதிலைச் சொல்லியிருந்தால், ஓபிஎஸ்சைப் பாராட்டலாம். ஆட்சி அதிகாரத்துக்காக ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு, அந்த ஆட்சி அதிகாரத்தை அனுபவித்து முடித்த பிறகு, அந்தப் பொய்யை தானே மறுத்திருக்கிறார் ஓபிஎஸ். காரணம், அரசியலுக்காக பொதுக்கூட்ட மேடைகளில் பேசுவது வேறு, ஆணையம் முன்பு ஒரு சாட்சியாகப் போய் நின்று பேசுவது வேறு. அங்கே போய் கட்டையால் அடித்தார்கள், விஷம் கொடுத்துக்கொன்றார்கள் என்று வாயில் வந்ததை எல்லாம் சொல்லிவிட முடியாது.

கோடநாடு பங்களா
கோடநாடு பங்களா

இனியும் தேவையா இந்த ஆணையம்?

ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை கிட்டத்தட்ட 95 சதவீதம் முடிந்துவிட்டது. பெரும்பாலானவர்கள் ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதே என்றே சொல்லியிருக்கிறார்கள். மொத்தமுள்ள 119 சாட்சிகளில் டிமிக்கி கொடுத்துக்கொண்டே இருந்த ஓபிஎஸ்சும் இப்போது விசாரிக்கப்பட்டுவிட்டார். சசிகலாவின் நெருங்கிய ரத்த சொந்தங்களும் விசாரிக்கப்பட்டுவிட்டார்கள். சசிகலா மட்டும்தான் பாக்கி. அவருக்கும்கூட கடந்த 2018-ம் ஆண்டிலேயே சம்மன் அனுப்பிய ஆணையம், சிறையில் இருந்த அவரை எழுத்துபூர்வமாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யச் சொன்னது. அதன்படி சீல் வைக்கப்பட்ட கவரில் அவரது பிரமாணப் பத்திரம் வாக்குமூலமாக அளிக்கப்பட்டுவிட்டது. அதில் அவர் என்ன சொல்லியிருந்தாரோ, அதற்கு ஒத்துப் போகிறபடியான பதில்களை மட்டுமே 2 நாள் விசாரணையில் ஓபிஎஸ் சொன்னதாகத் தெரிகிறது.

ஆக, இதற்கு மேல் இந்த ஆணையத்தை நீட்டிப்பது தேவையில்லாத வேலை. ஆறுமுகசாமி ஆணையத்துக்காக தேவையே இல்லாமல் 50 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்திருக்கிறது தமிழக அரசு. இனிமேலும் இந்த ஆணையத்தை இழுத்துக்கொண்டே போவது, இன்றைய நிதிச் சூழலில் தமிழக அரசுக்கு தேவையில்லாத வேலை. எனவே, இந்த ஆணையம் தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்து விடைபெறக்கூடும். கடவுளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை, இப்போது மக்களுக்கும் தெரிந்துவிட்டது என்று சொன்ன சசிகலா, அதையே பிரச்சாரமாக்கி மீண்டும் அதிமுகவை நெருங்கலாம்.

ஆனால் ஒன்று, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு எனும் தலைக்கு மேல் தொங்கும் கத்தி இன்னும் கீழே விழவில்லை. சசிகலாவின் ஆதரவால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது நடந்த சம்பவம் அது. இதுவரையில் அந்தச் சம்பவத்தைக் கண்டித்து சசிகலா ஒரு வார்த்தைகூட பேசவில்லை என்பதையும் தமிழக மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கடவுளுக்கு மட்டுமே தெரிந்த அந்த உண்மையும், விரைவில் மக்களுக்கும் தெரியவரட்டும் !

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in