அண்ணாமலை இல்லாவிட்டால் தமிழக பாஜக இயங்காதா?

அண்ணாமலை
அண்ணாமலை

தினம் ஒரு அறிக்கை, ஏதேனும் ஓர் இடத்தில் போராட்டம், எங்காவது, எதையாவது கண்டித்து ஆர்ப்பாட்டம் என கடந்த சில மாதங்களாக படு பரபரப்பாக இருந்த தமிழக பாஜக, அதன் தலைவர் அண்ணாமலை ஊரில் இல்லாததால் தற்போது  சர்க்கஸ் முடிந்ததும் காலியாகிக் கிடக்கும் கூடாரம்போல காட்சியளிக்கிறது.

ஃபெல்லோஷிப் படிப்புக்காக கடந்த மாதம் 30-ம் தேதி புறப்பட்டு அமெரிக்காவுக்கு சென்றிருக்கிறார் அண்ணாமலை. அவரது பயணம் தனிப்பட்ட முறையிலானது என்று சொல்லப்பட்டாலும் இதில் பல்வேறு அரசியல் காரணங்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஈழத்தமிழர் அரசியலை கையிலெடுப்பதும் அதில் ஒன்று என்கிறார்கள். அது ஒருபக்கம் இருக்க,  அவர் தமிழகத்தில் இல்லாத இந்த நாட்களில் தமிழக பாஜகவினரின் சத்தமே வெளியில் கேட்காத அளவுக்கு அமைதி காக்கின்றனர். அந்த அமைதியில்தான்  அண்ணாமலை என்ற ஒன் மேன் ஆர்மியின் சாதனை பொதிந்திருக்கிறது. 

கட்சியின் மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டபோது இவரால் மட்டும் தமிழ்நாட்டில்  பெரிதாக என்ன செய்துவிட முடியும் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் தன்னுடைய விடாமுயற்சியாலும், கடுமையான களப்பணியாலும்  அண்ணாமலைதான் தமிழக பாஜக என்ற நிலையை அவர் உருவாக்கி வைத்திருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள். 

தமிழகத்தில் பாஜக என்ற கட்சி வெளியில் தெரியாமல் இருந்த காலத்தில் இல.கணேசன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், தமிழிசை போன்றவர்கள் தங்கள் முயற்சியால் கொஞ்சம் கொஞ்சமாக கட்சியை வளர்த்தெடுத்தனர். ஒருகட்டத்தில்  தமிழிசை சௌந்தரராஜன் தலைவராக்கப்பட்டார்.  தினம் ஒரு பேட்டி அளித்தும், ஏதாவது ஒரு பிரச்சினை குறித்து பேசியும், ‘தாமரை மலர்ந்தே தீரும்’ என்று சொல்லிச் சொல்லியும் பாஜகவை  மக்கள் மத்தியில் பிரபலமாக்கினார். கட்சியின் இருப்பு தமிழகத்தில் தெரியவந்தது. அதற்கான அங்கீகாரமாக  அவருக்கு தெலங்கானா - புதுவை மாநிலங்களின் ஆளுநர் பதவி அளிக்கப்பட்டது. 

எல் முருகன்
எல் முருகன்

அடுத்தாக, பட்டியலினத்தைச் சேர்ந்தவரான எல்.முருகன் தலைவராக்கப்பட்டார்.  அவரும் தினம் ஏதாவது ஒரு பேட்டி அளித்து பாஜக என்ற கட்சி தமிழ்நாட்டில்  இருப்பதை உறுதி செய்தார். அவர் நடத்திய  வேல் யாத்திரையால் குறிப்பிட்ட அளவுக்கான விளம்பரமும் கிடைத்தது. கட்சிக்கும் வளர்ச்சி கிடைத்தது.  அவர் மத்திய அமைச்சராக்கப்பட்ட பிறகு காவல் அதிகாரியாக பணிபுரிந்து பாஜகவுக்காக சேவை செய்யவந்த அண்ணாமலை தலைவர் பதவிக்கு வந்தார். 

கட்சியில் மூத்த உறுப்பினர்கள்  பலர் இருக்கும்பொழுது புதிதாக வந்த ஒருவரை  தலைவராக நியமித்தது கட்சிக்குள்ளேயே பலருக்கும் பிடிக்கவில்லை. அதனால் அவர்கள் யாரும் அவருக்கு ஆரம்பத்தில் ஒத்துழைக்கவில்லை. அதற்காக சோர்ந்து போகாத அண்ணாமலை, தினமும் பத்திரிகையாளர்களை சந்தித்து எதாவது ஒரு விஷயத்தை பரபரப்பாக்கினார்.  அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜகவே  தமிழகத்தில் எதிர்க்கட்சி என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கினார். அமைச்சர்களை கண்டித்து அறிக்கை, அரசைக் கண்டித்து போராட்டம், ஆதீனங்களுக்கு ஆதரவாக களமிறங்கியது, இந்துமத காவலராக பிரகடனம், தீவிர இந்துத்துவா  என செயல்பட்டு தனக்குத் தந்த வேலையை தரமாகவே செய்தார் அண்ணாமலை. அதன் விளைவாக தமிழக பாஜக வளர்ந்திருக்கிறது. 

அதனால் அவரை ஏற்றுக்கொள்ளாத மூத்தத் தலைவர்களே இப்போது அவருடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். அண்ணாமலையை அழைத்து நிகழ்ச்சி நடத்துகிறார்கள். அவருக்காக காத்திருக்கிறார்கள். அவரது அனுமதியின்றி எதையும் செய்யாமல் இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக பாஜகவின் தமிழக முகமாக அண்ணாமலை மாறி இருக்கிறார். அதனால் தான் அவர் ஊரில் இல்லாத இந்த நேரத்தில் மாலுமி இல்லாத கப்பலாக பாஜக முடங்கிக் கிடக்கிறது.

ராஜராஜ சோழன் இந்துவா என்று கிளம்பியிருக்கும் சர்ச்சையை அண்ணாமலை இருந்திருந்தால் இன்னும் பூதாகரமாக்கி யிருப்பார். வெற்றிமாறனுக்கும், கமல்ஹாசனுக்கும் தனது பாணியில் தடாலடியாக பதிலளித்திருப்பார். பேருந்தில் மூதாட்டி டிக்கெட் கேட்டது, சென்னையில் காவல் மரணம், திருப்பூரில் குழந்தைகள் மரணம் போன்றவை அவரால்  விஸ்வரூபம் எடுத்து தமிழக அரசை பிடறியைப் பிடித்து உலுக்கியிருக்கும். ஆனால், அவரில்லாமல் இந்த விஷயங்கள் நீர்த்துப் போய்கிடக்கின்றன. தமிழகத்தையே உஷ்ணமாக்கிய பெட்ரோல் குண்டுகள் விஷயமும் கூட அப்படியே அமுங்கிப் போய்விட்டது. 

அவர் ஊரில் இல்லாத நேரத்தில் பாஜகவினர் இப்படி எதையெல்லாமோ வைத்து அரசியல் செய்திருக்க முடியும். கமலாலயத்தில் தனி அறை ஒதுக்கப்பட்ட எல்.முருகனே கூட இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தன்னை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்திருக்கலாம். ஆனால்,  செய்யவில்லை. சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் சாதாரணமாகவே அதிகம் பேசக்கூடியவர். அண்ணாமலை இல்லாத இந்த நாட்களில் அவரும் பெரிதாக வாய் திறக்கவில்லை. எப்போதும் சர்ச்சையாகப் பேசி சரவெடி கொளுத்தும் எச்.ராஜா கூட இப்போது வாய் மூடி இருக்கிறார். 

அண்ணாமலைக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் தமிழக அரசைக் கண்டித்தோ எதிர்த்தோ எந்த ஒரு போராட்டத்தையும் நடத்தவில்லை எந்த ஒரு அறிக்கையும் கூட தரவில்லை. இவற்றின் மூலமாக அவர்கள் உணர்த்துவது  தமிழ்நாட்டின் பாஜகவில் ஒற்றை முகமாக அண்ணாமலை முன்னிறுத்தப்படுகிறார் என்பதுதான். அதனால்தான் அவரில்லாத நேரத்தில் கட்சி முடங்கிக் கிடக்கிறது

இப்படிப்பட்ட நிலையை அண்ணாமலையே கட்டமைத்து உருவாக்கியிருக்கிறார் என்கிறார்கள்.  தான் எங்கிருந்தாலும் தாமே தமிழக பாஜக என்பதை கட்டிக் காப்பாற்றுகிறார் அண்ணாமலை. அதனால் தான் அண்ணாமலை அமெரிக்காவில் இருந்தாலும்  அறிக்கை விடுகிறார். பேருந்தில் டிக்கெட் கேட்ட மூதாட்டி மீது வழக்கு பதியப்பட்டதாக பரவிய தகவலுக்கு எதிர்வினையாற்றினார். அங்கிருந்தபடியே ட்விட்டர் ஸ்பேஸ் மூலம் தமிழகத்திற்கு உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.

அக்டோபர் 8-ம் தேதி இரவு மாற்றத்தை நோக்கி தமிழகம் என்ற தலைப்பில் ட்விட்டர் ஸ்பேஸில் பேசினார் அண்ணாமலை இவற்றின் மூலம் தமிழக பாஜகவை மாற்றத்தை நோக்கி அவர் நகர்த்திக் கொண்டிருக்கிறார். தமிழக அரசியலையும், பாஜகவையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தனி மனித ராணுவமாக  உருவெடுத்திருக்கிறார். அதன்மூலம் திராவிடக் கட்சிகளின் பாணியில் செல்வாக்குபெற்ற தனிப்பெரும் தலைவனாக அண்ணாமலை கொஞ்சம் கொஞ்சமாக தன்னை கட்டமைத்துக் கொண்டே வருகிறார்.

தான் இன்றி தமிழக பாஜகவில் ஓர் அணுவும் அசையாது என்ற அண்ணாமலையின் இத்தகைய அரசியல் பயணம் தமிழக பாஜகவுக்கு எந்தளவுக்குக் கைகொடுக்கிறது என்று பார்க்கலாம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in