ஆவேசப்படும் அண்ணாமலைக்கு அடி பலமாக விழுகிறதா?

அண்ணாமலை
அண்ணாமலை

தமிழக  பாஜக தலைவர் அண்ணாமலையின் அதிரடி அரசியல் பாணி  தமிழகத்தில் அந்த கட்சிக்கு புதிதாக ஒரு முகத்தைத் தந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.  அதேசமயம் அனைத்துக்கும் ஆவேசப்படும் அண்ணாமலைக்கு பல விஷயங்களில்  அடியும் பலமாகவே  விழுகிறதோ என்ற எண்ணமும் மக்களிடம் தோன்ற ஆரம்பித்திருக்கிறது.

அதற்கு அண்மை உதாரணமாக ஈரோடு கிழக்குத் தொகுதி  இடைத்தேர்தல் விவகாரம்.  அதிமுகவுக்கு ஏற்பட்டிருக்கும் இக்கட்டான  சூழ்நிலையை வைத்து பாஜகவை அங்கு  போட்டியிட வைத்துவிடலாம் என்று திட்டமிட்டார் அண்ணாமலை. ஓபிஎஸ், ஈபிஎஸ்  இருவரும் இரண்டு அணிகளாக நின்றால் சிக்கல் ஏற்பட்டு  சின்னம் கிடைக்காது, அதனால்  உங்களுடைய பலத்தை நிரூபிக்க முடியாது,  அதன் விளைவாக  திமுக கூட்டணி  எளிதாக வென்று விடும் என்பதாக அதிமுகவுக்கு அவர் மறைமுகமாக  அறிவுறுத்தினார். 

அதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில், தானே வேட்பாளராக நிற்கவும் வாய்ப்பு இருக்கும் என்று சூசகமாகவும்,  பாஜக போட்டியிடும்  என்று நேரடியாகவும்  தெரிவித்தார் அண்ணாமலை. எங்கே சின்னம் போய்விடுமோ என்ற அச்சத்தில் வேட்பாளரை நிறுத்தாமல் தொகுதியை  தங்களுக்கு விட்டுத்தருவார் ஈபிஎஸ்  என்று எதிர்பார்த்தே இவ்வளவையும் செய்தார் அண்ணாமலை. ஆனால்,  அதை  அருமையாக கையாண்டு அண்ணாமலையை வீழ்த்தி விட்டார் ஈபிஎஸ்.

அதிமுக கூட்டணியில் ஏற்கெனவே இங்கு போட்டியிட்ட  தமாகாவுக்கு தான் இடம் ஒதுக்கப்படும் என்று இன்னொருபுறம்  எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுக தலைவர்கள் ஜி.கே.வாசனை  நேரில் சந்தித்து தொகுதியை  தங்களுக்கு விட்டுத்தர வேண்டும் என்று கேட்டக அப்பீலே இல்லாமல் விட்டுக் கொடுத்துவிட்டார் வாசன்.  அதனால் தமாகா  மூலமாக வாய்ப்பைப் பெற்று தாங்களே போட்டியிடலாம் என்ற அண்ணாமலையின்  திட்டம் தவிடு பொடியானது. 

பாஜக போட்டியிடும்,  வேட்பாளர் யார் என்று அறிவிக்கலாம் என்று தைரியமாக கடலூரில் பாஜக  செயற்குழு கூட்டத்தை கூட்டினார் அண்ணாமலை. ஆனால், அதிமுகவின் சாதுர்யமான முடிவால் இடைத்தேர்தல் போட்டி குறித்த எந்த முடிவையும் அறிவிக்காமல் கலைந்தது அந்த செயற்குழு.  இப்படித் தான்  போடும் அனைத்து கணக்குகளிலும் தோற்று பலமாகச் சறுக்கிறார் அண்ணாமலை.

தமிழ்நாட்டில் எது நடந்தாலும் முதல் ஆளாக தனது குரலை அதிலும் தமிழக அரசுக்கு எதிரான தனது எதிர்ப்புக் குரலை அழுத்தமாக பதிய வைக்கிறார் அண்ணாமலை. ஆளுநர் உரை விவகாரம், விமானத்தில் தேஜஸ்வி அவசர கால கதவை திறந்த விவகாரம் என எல்லாவற்றிற்கும் வக்காலத்து வாங்கிக் கொண்டு முன்னால் வருவதாலேயே அண்ணாமலைக்கு அடி பலமாக விழுகிறது.

அப்படித்தான் அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலானது. உடனே அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நான் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றதற்கு முன்பு, மே 2021-ல் வாங்கிய எனது ரஃபேல் கடிகாரத்தின் விவரங்கள், அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள், ஆகஸ்ட் 2011-ல் ஐபிஎஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம்,  எனக்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள், என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே எனது பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன்’ என்று பதிவிட்டார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம். இவை அனைத்து ‘பல்பு’ வாங்கிய அரவக்குறிச்சி தேர்தல் மனுவிலேயே இருக்கிறது. இவர் என்ன வெளியிடுவது? யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும்.

பல லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா? இதுதான் நீங்கள் அளந்துவிடும் மேட் இன் இந்தியாவா? தேர்தலுக்குப் பிறகு வாங்கியதாகச் சொல்லிவிட்டால் ‘வேட்பு மனுவில் ஏன் கணக்குக் காட்டவில்லை’ என்ற கேள்வியைத் தவிர்த்துவிடலாம் என ‘புத்திசாலித்தனமாக’ மே 2021-ல் வாங்கியதாகச் சொல்லும் அந்த ஐந்து லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா?’ என்று எதிர்கேள்வி எழுப்பினார். 

அதோடு  திமுக அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் வெளியிடும் விவகாரத்தை மறந்து போனார் அண்ணாமலை. எதிர்முகாமான திமுக மட்டுமல்லாது அதன்  கூட்டணி கட்சிகளிடமும் இப்படித்தான் பலமாக சேதாரம் ஆகிறார் அண்ணாமலை. அது மட்டுமல்லாது தனது கூட்டணியான அதிமுகவிடமும் தொடர்ந்து அடி  வாங்குகிறார் அண்ணாமலை.  

திருத்தணி நகர அதிமுக சார்பில் கடந்த சில  நாட்களுக்கு முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அதிமுக எம்பி-யான ஹரி, "எந்தக்  காலத்திலும் பாஜகவால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது. அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு 4 சட்டமன்ற தொகுதிகளை வென்ற பாஜக  தன்னை எதிர்க்கட்சியாக நினைத்துக் கொண்டுள்ளது.  

எடப்பாடி பழனிசாமி போட்ட பிச்சையால்  4 தொகுதிகளில்  பாஜக வெற்றிபெற்றது. நாளிதழ்கள், மீடியாக்களில் தன் பெயர் வர வேண்டும் என்பதற்காகவே பாஜக தலைவர் அண்ணாமலை எதை எதையோ பேசி வருகிறார்"  என்று பேசினார். திமுகவோடு கூட்டணி வைக்கப் போகிறது பாஜக என்று முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்  பொத்தாம் பொதுவாகப் போட்டு உடைத்தார். இதற்கெல்லாம் பாஜக தலைவரிடம் பதில் இல்லை. 


சூர்யா சிவா விவகாரத்தில்  அண்ணாமலைக்கு  எதிராக கருத்து தெரிவித்தார் அக்கட்சியை சேர்ந்த  காயத்ரி  ரகுராம். அதனால் அவரை ஆறு மாதம் இடைநீக்கம் செய்தார் அண்ணாமலை.  அதன் பிறகு இன்றைய தினம் வரை  காயத்ரி ரகுராம் அடுக்கடுக்காக எடுத்து வைத்த வாதங்களை சமாளிக்க முடியாமல் அவருக்கு பதில் சொல்வதையே தவிர்த்து விட்டு வேறு பக்கம் போய்விட்டார் அண்ணாமலை.

தனது மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தன்னுடன் நேருக்கு நேராக விவாதிக்கத் தயாரா என்று கேட்டார் காயத்ரி ரகுராம்.  அதற்கும் அண்ணாமலையால் பதில் அளிக்க இயலவில்லை. இப்போது அடுத்த பதிலடியாக ஈரோடு கிழக்கு தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டால் தமிழ்நாட்டின் மகளாக, தான் போட்டியிடப் போவதாக கெத்து காட்டியிருக்கிறார் காயத்ரி ரகுராம். இதற்கு அண்ணாமலை இதுவரை எந்தப் பதிலும் சொல்லவில்லை. 

பாஜகவினர் பலரும் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகளில்  சிக்குவதை  திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மேடை போட்டுப் பேசியும்,  சமூக ஊடகங்களில் திரும்பத் திரும்ப வைரலாக்கியும் வருகிறார்கள். பேருக்குக்கூட அவர்கள் மீது  நடவடிக்கை எடுக்க முடியாமல் அவற்றிலிருந்து பின்வாங்கியும் அது பற்றி பேசாமலும்  தவிர்த்து வருகிறார் அண்ணாமலை.

அதேசமயம், செய்தியாளர்கள் கூட்டத்தில் ஆதாரத்தோடு கேள்வி கேட்டால் அண்ணாமலைக்குக் கோபம் வந்து விடுகிறது.  அந்த கோபத்தின் விளைவாக  கேள்வி கேட்டவரிடம்  திரும்பி தனி மனித தாக்குதலில் இறங்கிவிடுகிறார். உண்மையும் ஆதாரமும் இருக்கும் பட்சத்தில் அதை எடுத்து வைத்து பேச அண்ணாமலைக்கு அங்கெல்லாம் பொறுமை போதவில்லை.

இன்னமும் ஐபிஎஸ் அதிகாரி பாவனையில் இருக்கும் அவர் எதிரே இருப்பவர்கள் அனைவரும்  தனக்கு கட்டுப்பட்டவர்கள் என்று நினைக்கிறார். அதனால்தான் அப்படிப் பேசுகிறார்.  ஆனால் இது அரசியல் களம். எதிரே  இருப்பவரிலும் அறிவார்ந்தவர்கள் இருப்பார்கள் என்பதை அவர் இன்னமும் உணரவில்லையோ என்று தான் நினைக்கக்த் தோன்றுகிறது.  அதனால் தான் அண்ணாமலைக்கு அடிமேல் அடி விழுகிறது.

அரசியல் களத்தில் சீமான்  கமல்ஹாசன் உட்பட  எல்லா கட்சித் தலைவர்களிடமும் அடியும் இடியும் வாங்குகிறார் அண்ணாமலை.   “சீமான் என்ன ஞானியா?” என ஒருமுறை  அண்ணாமலை  கேட்டார்.  அதற்கு, “ அறிவது அறிவு. உணர்வது ஞானம். நான் அனைத்தையும் உணர்வேன். என்னிடம் அனைத்திற்கும் பதில் இருக்கிறது. அதனால் கேள்வி கேட்பவர்களுக்கு பதில் அளிக்கிறேன். அண்ணாமலையிடம் பதில் இல்லை. அதனால் அவர் அமைதியாக இருக்கிறார்.

பல புத்தகங்களை எழுதியவர்கள் எல்லாம் அமைதியாக இருக்கின்றனர். ஆனால், 20 ஆயிரம் புத்தகங்களை படித்ததாக கூறும், அண்ணாமலை அவ்வாறு இருக்க மறுக்கிறார். அவர் அவசரப்பட்டு ஐபிஎஸ் வேலையை விட்டுவிட்டார். கட்சியில் அவரை இன்னும் 2 வருடம் வைத்திருப்பார்கள். அதன்பின்பு அவரின் நிலை என்ன என்பது தெரியாது. ஏற்கெனவே தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் இப்போது என்ன ஆனார் என்றே தெரியவில்லை" என்று சீமான் திருப்பித் தாக்கியதற்கு எந்த பதிலும் அண்ணாமலையிடம் இல்லை 

அண்ணாமலை அமெரிக்கா சென்றபோது   அங்கு   நடந்த ஒரு கூட்டத்தில் பேசியபோது கமல்ஹாசனை விமர்சித்தார். அதற்கு கமல்ஹாசன்,  "ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து ஆளைக் கடிக்கும்  அண்ணாமலைக்கு கண்டனம்’’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டு பதிலடி கொடுத்தார். அதோடு மக்கள் நீதி மய்யத்தை விமர்சிப்பதை  தவிர்த்துக் கொண்டார் அண்ணாமலை.  

இப்படி எந்தப் பக்கம் போனாலும் அதற்கு எதிர்வினையாக அடி வாங்கிக் கொண்டு, அதே நேரத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார் அண்ணாமலை. இது குறித்து பாஜக தரப்பில் பேசியதற்கு  "உங்களுக்கு இது அடி வாங்குவது போலத்தான் தோன்றும் ஆனால், இதுதான் அண்ணாமலையின்  ராஜதந்திரம்.  எந்த வகையிலாவது பாஜகவை தமிழ்நாட்டில் பேச வைத்துக்கொண்டே இருக்க வேண்டும், அதன் மூலம் கட்சியை இங்கே  நிலை நிறுத்தி விட வேண்டும் என்று அவர் மெனக்கிடுகிறார். அதில் வெற்றியும் பெற்று வருகிறார். 

இன்றைக்கு தமிழ்நாட்டில் பாஜகவை தவிர்த்துவிட்டு யாராலும் அரசியல் செய்ய முடியாது என்ற நிலையை அவர் உருவாக்கியிருக்கிறார். 2024 மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் பாஜகவை வெற்றி பெறவைப்பது என்ற அவரது முடிவில் நிச்சயம் அனைவரும் இணைந்து பாடுபட்டு வெற்றி காண்போம்.  2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை தமிழ்நாட்டில் ஆட்சியில் அமர்த்துவதிலும் எங்கள் தலைவரின் நோக்கம் நிச்சயம் நிறைவேறும்" என்கிறார்கள்.

இந்த லட்சியக் கனவுகளை ஜெயிக்க அண்ணாமலை இன்னும் எப்படியெல்லாம் அடிவாங்க வேண்டி இருக்குமோ!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in