ஒற்றைத் தலைமையை நோக்கி நகர்கிறதா அதிமுக?

ஒற்றைத் தலைமையை நோக்கி நகர்கிறதா அதிமுக?

அதிமுகவில் இருந்து சசிகலா ஓரங்கட்டப்பட்டு விட்ட நிலையில், அதிமுக தலைமைப் பதவியை நோக்கி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி காயை நகர்த்தத் துவங்கி விட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

அதிமுக இரட்டை தலைமைக்குள் உள்ளூக்குள் புகைந்து கொண்டிருந்த சச்சரவுகள், ஏப்ரல் 6-ம் தேதி வெளிப்படையாகவே வெடித்தது. அன்றைய தினம் அதிமுக உட்கட்சி தொடர்பாக அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், முனுசாமி, வைத்திலிங்கம், செங்கோட்டையன், சி.வி.சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிமுகவில் உட்கட்சித் தேர்தலை ஏற்கனவே நடத்தியது போக மீதமுள்ள 49 மாவட்டங்களில் ஒரே கட்டமாக நடத்துவதா, இரண்டு கட்டமாக நடத்துவதா என்று விவாதிக்கத் தான் இந்த அவரச கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மாவட்டச் செயலாளர்களை மாற்ற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்த பிரச்சினை கட்சி நிர்வாகிகளுக்குள் வாக்குவாதம் முற்றி கைகலப்பு வரை சென்று விட்டது. குறிப்பாக, பன்னீர்செல்வம் ஆதரவாளரான வைத்திலிங்கத்திற்கும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான சி.வி.சண்முகத்திற்கும் நடந்த மோதல் கைகலப்பு வரை சென்றது. இதனால் கூட்டத்தில் இருந்து வைத்திலிங்கம் பாதியிலேயே வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களின் குரலே ஓங்கி ஒலித்தது.

இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அதிமுகவில் உள்ள 72 மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள். இவர்களை மாற்ற வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை இந்த கூட்டத்தில் ஏற்கப்படவில்லை. இதன் காரணமாக மாலை 4 மணிக்கு துவங்கிய கூட்டம் இரவு 10 மணி வரை நடைபெறும் நிலைக்கு பிரச்சினையின் தீவிரம் இருந்தது.

ஜெயலலிதா இருக்கும் வரை இப்படியான கைகலப்புகளை அவர் அதிமுகவில் அனுமதித்ததில்லை. ஏனெனில், அவர் மட்டும் தான் அதிமுகவின் ஒற்றைத்தலைமையாக இருந்தார். ஆனால், தற்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை குதிரையில் அதிமுக சவாரி செய்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், `அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்' என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் ஏப்ரல் 11-ம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

"சசிகலா அப்பீல் செய்தால் அதை எதிர் கொள்வது என்றும், இனி சசிகலாவைப் பற்றி அதிமுகவினர் பேசக்கூடாது" என்றும் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்திப் பேசியுள்ளார்.

ஏற்கனவே சசிகலா ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், கட்சி அமைப்பில் பெரிய அளவில் அதிகாரம் செலுத்தும் இடத்தில் தற்போது இல்லை என்ற நிலையை ஏப்ரல் 6-ம் தேதி கூட்டம் உறுதி செய்துள்ளதால் எடப்பாடி பழனிசாமி இதன் மூலம் தெம்படைந்துள்ளார். அதிமுகவில் மூன்றாம் கட்ட அமைப்பு தேர்தல் ஏப்ரல் 16-ம் தேதி நடக்கிறது. இதன் பின் ஏப்ரல் 19 மற்றும் 21-ம் தேதிகளில் மாவட்ட செயலாளர்கள் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் மூலம் பொதுக்குழு நடத்தி அதன் மூலம் ஒற்றைத்தலைமையை நோக்கி எடப்பாடி பழனிசாமி நகரத் துவங்கியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் என்ன செய்வார்?

Related Stories

No stories found.