டெண்டர் அணியா... தொண்டர் அணியா..?

அதிமுக களேபரங்கள் குறித்து மனம் திறக்கும் மருது அழகுராஜ்!
மருது அழகுராஜ்
மருது அழகுராஜ்

அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான 'நமது அம்மா'வின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மருது அழகுராஜ் திடீரென விலகியுள்ளது அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பொறுப்பு விலகலுக்கான காரணத்தை ட்விட்டரில் நறுக்கென நாலு வரி கவிதை போல் சொல்லிவிட்டு மதுரைக்கு வந்திருந்த மருது அழகுராஜிடம் காமதேனு மின்னிதழுக்காகப் பேசினோம்.

'நமது அம்மா' நாளிதழின் நிறுவனர் பொறுப்பிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டதால் தான் நீங்களும் விலகினீர்களா?

அம்மாவுக்காக (ஜெயலலிதா) உரை தயாரிப்பு, பத்திரிகைக்காக என 11 வருடம் அதிமுகவுக்காக உழைத்துள்ளேன். முதலில், அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடாக இருந்த 'நமது எம்ஜிஆர்' பத்திரிகையில் மோடியை விமர்சித்து கவிதை எழுதினேன் என்று டி.டி.வி.தினகரன் என்னை அங்கிருந்து நீக்கினார். அதனால் எழுத்துப் பணியே வேண்டாம் என்று ஒதுங்கியிருந்தேன். பிறகு ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே இணைந்து ஒரு பத்திரிகை தொடங்குவதாகச் சொல்லி என்னை அழைத்தார்கள். அதை ஏற்று ' நமது அம்மா' நாளிதழின் ஆசிரியராக ஊதியம் பெறாத ஊழியனாக வேலை செய்தேன். இரட்டைத் தலைமைக்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் நான்கரை வருடங்களாக எழுதி வந்தேன்.

இப்போது ஆளுக்கொரு திசையில் இருக்கிறார்கள். அவர்களுக்குள் பிளவுகள் உருவாகிவிட்டது. இந்த நிலையில் நான் என்ன எழுத முடியும்? அதிமுக என்ற தீராநதிக்கு இவர்கள் இவரும் நதி காக்கும் கரைகளாக இருக்க வேண்டும் என்று எழுதினேன். இப்போது அது இல்லை என்ற நிலையில், எனக்கு விடை கொடுங்கள் என்று கசியும் கண்ணீரோடு வெளியே வந்து விட்டேன்.

'நான்கு மாதங்களாகவே அவர்கள் நோக்கங்களை நிறைவேற்றத் தொடங்கிவிட்டார்கள்' என்று விலகலுக்குக் காரணம் கூறியிருந்தீர்களே... அப்படி என்ன நடந்தது?

'நமது அம்மா' நாளிதழில் வெகுகாலமாகவே ஈபிஎஸ்சை முன்னிலைப்படுத்தி ஓபிஎஸ்சை இரண்டாம் இடத்தில் வைத்து எழுத வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால், அதிமுகவின் ஒங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்பது 1, 1-ஏ தானே? அப்படியென்றால் 1 ஏ-வுக்கு முன்னால் இருப்பது 1 தானே? அவர்களே அந்த புரோட்டகாலை கொடுத்துவிட்டு அதை மாற்றச் சொன்னார்கள். விளம்பரங்களில் மாற்றம் செய்யச் சொல்லி குளறுபடிகள் உருவானது. அவற்றை என்னால் நேர் செய்ய முடியவில்லை.

ஏனெனில், 'நமது அம்மா' நாளிதழ் வேலுமணியின் உறவினருடையது. எனவே, அங்கே நான் மட்டும் தனித்தீவாக இருந்து நியாயம் கேட்க முடியாது. இருப்பினும் என்னால் இயன்ற அளவு சமாளித்தேன். ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால், ஒற்றைத் தலைமை என்ற போட்டி ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியாக இருக்கும் போதே ஒற்றைத்தலைமை உருவெடுத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆட்சிக்கு வருகிற வரை இந்த இரட்டைத் தலைமை நீடித்திருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் எதிர்கட்சியாக இருக்கிற நேரத்தில், கட்சிக்குள் பிளவு ஏற்படுத்துவது அதிமுவுக்குப் பின்னடைவையே ஏற்படுத்தும்.

என் போன்றோரது நம்பிக்கை, சுயநலத்தால் தகர்ந்துவிட்டது என்று நீங்கள் கூறியது யாரை?

அதிமுகவின் இந்த ஒற்றுமைக்குலைவுக்கு யாரெல்லாம் காரணமோ அவர்கள் எல்லாம் சுயநலவாதிகள் தான். என்னைப் பொறுத்தவரை அதிமுகவின் நட்சத்திர அந்தஸ்து என்பது எம்ஜிஆர், ஜெயலலிதா இல்லாத காலத்தில் கூட்டுத்தலைமை தான். அது தான் வெற்றி பெறும்.

அதிமுகவில் நடக்கும் குழப்பங்கள் இரண்டாமிடத்தை பிடிக்க நினைக்கும் பாஜகவும் சாதகமாகிவிடாதா?

முதலிடத்தில் திமுக ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டாம் இடத்தில் ஓடுகிறவர் நொண்டியடித்தால், மூன்றாம் இடத்தில் இருப்பவர் முந்துவாரா இல்லையா? அது தான் இனி நடக்கும். சுயநலம் மேலாங்கி விட்டால், அங்கு லாபம் தான் இலக்காக இருக்கும். நியாயம் விளக்காக இருக்காது. சுயநலம் மிகுந்து விட்டால் நியாயங்கள் பின் தங்கிடும். லாப நோக்கம் முன்வந்து விடும். அதில் நியாயம் புலப்படாது. எல்லாவற்றையும் இழந்து நிற்கும் போது அது அவர்களுக்குக் கட்டாயம் தெரிய வரும்.

முன்பு, சசிகலா, டி.டி.வி.தினகரன், இப்போது ஓபிஎஸ் என வரிசையாகக் கட்டம்கட்டப்படுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

கடந்த ஒரு வருடத்தில் அதிமுகவிலிருந்து கிட்டத்தட்ட 5 ஆயிரம் பேர் நீக்கப்பட்டிருப்பார்கள். ஆட்சியில் இருக்கும் போதே கலைராஜன், செந்தில்பாலாஜி போன்றோர் கட்சியை விட்டுப் போனார்கள். இப்போது அதிமுகவில் சேர்ப்பதை விட நீக்குவது தான் அதிகம் நடக்கிறது. இந்நேரம் திமுக ஆட்சிக்கு எதிரான தவறுகளைச் சுட்டிக்காட்டி எல்லா இடங்களிலும் இரட்டை இலை ஜொலித்திருக்க வேண்டாமா? அதை மறந்துவிட்டு சுயநலத்திற்காக புறக்கணிப்பு என்ற இந்த நிலையை எடுக்கிறார்கள். இதை நினைத்து ஒவ்வொரு அதிமுக தொண்டனும் வருத்தப்படுகிறான். அரசியல் என்பது நீண்ட தூர மாரத்தான். முதலில் வேகமெடுத்து ஓடுபவன் எல்லைக்கே வரமாட்டான். ரொம்ப மெதுவாக நிதானம் எடுத்து ஓடுபவர்கள் தான் கடைசி எல்லையை வந்து சேருவார்கள்.

ஓபிஎஸ்சுக்கு எதிராக நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவை ஏற்கிறீர்களா?
யாரோ ஒரு மாவட்டச் செயலாளர் ஒற்றைத் தலைமை என்று சொன்னால் முடிவை மாற்றிவிடுவீர்களா? மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே தொண்டர்களின் மனசாட்சி இல்லை. திமுகவைப் போல செயற்குழு, பொதுக்குழுவில் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் கட்சித் தலைமையைக் கடைக்கோடி தொண்டனும் ஓட்டுப்போட்டு தான் உருவாக்க வேண்டும் என்று கட்சி விதியை மாற்றினார் எம்ஜிஆர். அதையே இப்போது மீறிவிட்டார்கள்.


அரைமணி நேரத்தில் எந்த பொதுக்குழுவாவது நடந்து முடிந்ததைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்தியாவில் எந்த பொதுக்குழுவாவது நேரடி ஒளிபரப்பு செய்து பார்த்திருக்கிறீர்களா? இழக்க விரும்புகிறவர் பதற்றமாக இருப்பார். பெற விரும்கிறவர் தன்மையாக நடப்பார். ஆனால், அதிமுக பொதுக்குழுவில் இது தலைகீழாக நடந்தது. ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டிலைக் கொண்டு வீசினார்கள். அவரை மிக மோசமான வார்த்தைகளில் ஆபாசமாகப் பேசினார்கள். அவர்களை ஈபிஎஸ் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். கட்டுப்படுத்தாத கூட்டத்தை எதற்கு கூட்டினார்? அந்தக் கூட்டம் எங்கிருந்து வந்தது?

செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் யாரும் ஓபிஎஸ்சுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை; எதிர்த்துப் பேசவில்லை. அனைவரும் அமைதியாகத்தான் இருந்தார்கள். ஆனால், கலவரம் செய்வதற்காகவே காலை 6 மணிக்கே ஆட்களை அழைத்து வந்து மண்டபத்தில் நிரப்பினார்கள். ரிஜிஸ்டர் பதிவே நடக்கவில்லை. நடந்து முடிந்த பொதுக்குழுவை நினைத்து வருத்தப்படுகிறேன்; வேதனைப்படுகிறேன்.

அதிமுக தற்போது சாதிக்கொரு பிரிவாக, மண்டல வாரியாக பிரிந்து கிடக்கிறது. மாவட்ட செயலாளர்களைப் பொறுத்தவரை ஈபிஎஸ்சுக்குப் பின்னால் அதிகம் பேர் அணிவகுத்துள்ளனர். ஏனெனில், அவர் நான்கரை ஆண்டுகள் முதலமைச்சராக இருந்துள்ளார். அதனால் இப்போது அதிமுக டெண்டர் அணியா... தொண்டர் அணியா... என பிரிந்து நிற்கிறது. இது தான் உண்மை.

அதிமுக எதிர்காலம் எப்படியிருக்கும்?

இந்தக் கட்சியால் பயனுற்று அமைச்சர்களாக, அதிபர்களாக , ஆஸ்திகளைக் குவித்து பேரும் புகழும் பெற்றவர்கள் இந்தக் கட்சி தான் நம்மை உருவாக்கியது என்றும், இந்த கட்சிக்காக உழைத்த அடுத்த தலைமுறையினரும் காத்திருக்கிறார்கள் என்றும், அவர்களுக்கும் காலம் உருவாக வேண்டும் என்றும் சுயநலம் மறந்து ஒரு நொடியாவது நினைத்துப் பார்த்தால் நிச்சயம் அதிமுகவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in