பிப்.28-ம் தேதியோடு விருப்ப ஓய்வில் செல்கிறார் இறையன்பு: அடுத்த தலைமைச்செயலாளர் யார்?

தலைமைச்செயலாளர் 
இறையன்பு
தலைமைச்செயலாளர் இறையன்புபிப்.28-ம் தேதியோடு விருப்ப ஓய்வில் செல்கிறார் இறையன்பு: அடுத்த தலைமைச்செயலாளர் யார்?

தமிழக அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு இம்மாதம் 28-ம் தேதி முதல் விருப்ப ஓய்வில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் 2021 மே 7-ம் தேதி பதவியேற்றார். அப்போது தமிழக தலைமைச் செயலராக இருந்த ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டார். அவருக்கு பதில், அண்ணா மேலாண்மை நிலைய இயக்குநர் ஜெனரலாக இருந்த வெ.இறையன்பு நியமிக்கப்பட்டார்.

தமிழ்நாடு தலைமைச் செயலரான வெ.இறையன்பு, கடந்த 1963 ஜூலை 16-ம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள காட்டூர் என்ற கிராமத்தில் பிறந்தார். விவசாய பட்டப் படிப்பில் பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்ற இறையன்பு, 1987-ம் ஆண்டு குடிமைப்பணிகள் தேர்வில் அகில இந்திய அளவில் 15-வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்றார்.

கல்வி மீது ஈர்ப்பு கொண்ட வெ.இறையன்பு, எம்பிஏ, எம்.ஏ.ஆங்கில இலக்கியம், எம்எஸ்சி உளவியல், எம்.ஏ. தொழிலாளர் மேலாண்மை ஆகிய 3 முதுகலைபட்டங்களும், ஆங்கில இலக்கியம்,உளவியல், நிர்வாகத்தில் 3 பிஎச்.டிபட்டங்களும் பெற்றவர். அனைத்துதரப்பினரிடமும் நெருங்கிப் பழகும் குணம் கொண்ட இறையன்பு, சிறந்த பேச்சாளர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றியுள்ளார்.

சிவில் சர்வீஸ் தேர்வு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும், அதற்கு தயார் செய்வது குறித்து ஆலோசனைகள் வழங்குவதிலும் மிகுந்த ஆர்வம்கொண்டவர். அவர் சிறந்த எழுத்தாளரும்கூட. ‘ஐஏஎஸ் தேர்வும் அணுகுமுறையும்’, ‘இலக்கியத்தில் மேலாண்மை’, ‘படிப்பது சுகமே’, ‘ஓடும் நதியின் ஓசை’, ‘அன்புள்ள மாணவனே’, ‘வாழ்க்கையே ஒரு வழிபாடு’, ‘சுயமரியாதை’, ‘அவ்வுலகம்’, ‘மூளைக்குள் சுற்றுலா’ உட்பட 100-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இந்த நிலையில் இம்மாதம் 28-ம் தேதியோடு இறையன்பு விருப்ப ஓய்வில் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அடுத்த தலைமைச்செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ், ஷிவ்தாஸ் மீனா , கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, விக்ரம் கபூர், கார்த்திகேயன், ஹன்ஸ்ராஜ் வர்மா, எஸ்.கே.பிரபாகர் பெயர்கள் அதிகமாக அடிபடுகின்றன. இப்போதைக்கு ஷிவ்தாஸ் மீனாவுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இறையன்புவை தகவல் உரிமை ஆணைய தலைவராக நியமிக்க அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in