உ.பி தேர்தல்: முன்னாள் ஐபிஎஸ் வெற்றி, அமலாக்கத் துறை முன்னாள் அதிகாரி முன்னிலை!


உ.பி தேர்தல்: முன்னாள் ஐபிஎஸ் வெற்றி, அமலாக்கத் துறை முன்னாள் அதிகாரி முன்னிலை!
அசீம் அருணின் ட்விட்டர் பதிவிலிருந்து...

அரசுப் பணியை உதறிவிட்டு அரசியல் பாதையில் அடியெடுத்துவைத்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அசீம் அருண், அமலாக்கத் துறை முன்னாள் அதிகாரி ராஜேஷ்வர் சிங் இருவரும் மகிழ்ச்சியின் உச்சியில் உள்ளனர். தேர்தலுக்கு முன்னதாக பாஜகவில் இணைந்ததன் மூலம் பரபரப்பாகப் பேசப்பட்டவர்கள் இருவரும். இந்தத் தேர்தலில் அசீம் அருண் வெற்றிபெற்றுவிட்டார். ராஜேஷ்வர் சிங் முன்னிலை வகிக்கிறார்.

யோகிக்கு நன்றி

1994 பேட்சைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான அசீம் குமார் அருண், 2021 முதல் கான்பூர் நகர காவல் துறை ஆணையராகப் பணியாற்றிவந்தவர். 5 மாநிலத் தேர்தல் தேதிகள் ஜனவரி 8-ம் தேதி அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில், காவல் துறை பணியிலிருந்து விருப்ப ஓய்வு கோரியிருப்பதாகவும், நாட்டுக்கும் சமூகத்துக்கும் வேறு வகையில் சேவையாற்ற விரும்புவதாகவும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார் அசீம் குமார் அருண். பாஜகவில் தன்னை இணைத்தமைக்காக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் அவர் நன்றி தெரிவித்திருந்தார்.

அசீம் குமார் அருணின் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட படம்
அசீம் குமார் அருணின் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட படம்

கன்னோஜ் மாவட்டத்தைச் சேர்ந்தவரான அசீம் குமார் அருணின் தந்தை ஸ்ரீராம் அருண், டிஜிபியாகப் பதவிவகித்தவர். எனவே, கன்னோஜ் மாவட்டத்தின் ஏதேனும் ஒரு தொகுதியில் அசீம் குமார் வருண் போட்டியிடுவார் என அப்போதே எதிர்பார்ப்பு எழுந்தது. கன்னோஜ் தொகுதியிலேயே போட்டியிட அவருக்கு பாஜக வாய்ப்பளித்தது. தனது அரசியல் பிரவேசத்தை வெற்றிகரமாகவே ஆரம்பித்திருக்கிறார் அசீம் அருண். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் அனில் தொஹாரேயை அவர் தோற்கடித்தார். 1,20,876 வாக்குகள் அவருக்குக் கிடைத்தன.

உத்தரப் பிரதேசக் காவல் துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் படையின் தலைவராகவும், அவசரகால உதவி எண்ணான 112-ஐ நிர்வகிக்கும் குழுவின் தலைவராகவும் பணியாற்றிய அசீம் குமார் அருண், ஊடகத் துறையிலும் பணியாற்றியவர். 2002-03-ல் கிழக்கு ஐரோப்பிய நாடான கொசோவாவில் காவல் துறை பயிற்சி எடுத்துக்கொண்ட அவர், மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அவருக்கான சிறப்புப் பாதுகாப்புப் படையிலும் அங்கம் வகித்தவர் ஆவார். தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நிருபராக ஓராண்டு பணிபுரிந்த அனுபவம் அவருக்கு உண்டு.

ராஜேஷ்வர் சிங்
ராஜேஷ்வர் சிங்

தன்பாத் ஐஐடி-யில் பிடெக் முடித்த ராஜேஷ்வர் சிங், 1996-ல் உத்தர பிரதேசத்தின் மாகாண காவல் சேவைகள் (பிபிஎஸ்) அதிகாரியாகப் பணியைத் தொடங்கினார். பின்னர் மனித உரிமை மற்றும் சமூக நீதியில் முனைவர் பட்டம் பெற்ற அவர், 2007-ல் அயல் பணியாக அமலாக்கத் துறையில் பணியில் சேர்ந்தார்.

அதேபோல், லக்னோவின் சரோஜினி நகர் தொகுதியில் போட்டியிட்ட ராஜேஷ்வர் சிங், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி வேட்பாளர், (மாலை 4 மணி நிலவரப்படி) அபிஷேக் மிஸ்ராவைவிட 34,767 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார்.

தேர்தல் காலத்தில் அரசு அதிகாரிகள் பாஜகவில் சேர்ந்தது குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், இருவரும் தத்தமது அரசியல் பயணத்தை வெற்றிகரமாகவே தொடங்கியிருக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in