அடுத்த அதிரடி...குற்றவியல் சட்டங்களை மாற்ற கூடியது நாடாளுமன்றக்குழு... மக்களவையில் மசோதாக்கள் அறிமுகம்!

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

மத்திய அரசின் அடுத்த அதிரடியாக இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் சாட்சியச் சட்டம் ஆகியவற்றை மாற்றுவதற்கான மசோதாக்களை ஆய்வு செய்வதற்கான நாடாளுமன்றக் குழு இன்று(ஆக.24) டெல்லியில் கூடியுள்ளது.

பாஜக தலைமையிலான ஆட்சி மத்தியில் அமர்ந்தது முதலே, சுதந்திர இந்தியா மீது மிச்சமிருக்கும் காலனியாதிக்க அடையாளங்களை மாற்றுவதை முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளது. புதிய சின்னங்கள், கட்டிடங்கள் மற்றும் தலங்களை உருவாக்குவது, பழைய பெயர்களை நீக்கி புதிய பெயரில் அழைப்பது, பழைய சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வது மற்றும் புதிய சட்டங்களை உருவாக்குவது என அந்த மாற்றங்கள் ஏகமாக நீள்கின்றன.

சட்டம்
சட்டம்

இந்த வரிசையில் ஐபிசி எனப்படும் இந்திய தண்டனைச் சட்டம், சிஆர்பிசி எனப்படும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் உட்பட 3 சட்டங்களை மாற்றுவதற்காக புதிய சட்ட மசோக்களை கொண்டு வருகிறது. பிரிட்டிஷ் இந்தியா ஆட்சிக் காலத்தில் முறையே 1860, 1898 மற்றும் 1872 ஆகிய ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட இந்த 3 சட்டங்களையும் மத்திய அரசு இவ்வாறு மாற்ற முடிவு செய்துள்ளது.

சுமார் 160 ஆண்டுகள் வரை பழமையான இந்த சட்டங்களுக்கு பதிலாக பரிசீலிக்கப்படும், புதிய சட்ட மசோதாக்களை ஆய்வு செய்வதற்கான நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று டெல்லியில் கூடி விவாதித்தது. இந்த கூட்டம் இன்று தொடங்கி 3 நாட்களுக்கு நடைபெற இருக்கிறது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்ய மசோதா என்ற பெயர்களில் உருவாகி இருக்கும் 3 மசோதாக்கள் குறித்தும் நாடாளுமன்ற குழுவினரிடம் உள்துறை செயலர் அஜய் பல்லா விளக்கமளிக்கிறார்.

முன்னதாக இந்த மசோதாக்களை மக்களவையில் அறிமுகப்படுத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காலனித்துவ மரபு வழியிலான தற்போதைய சட்டங்களை மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். குடிமக்களின் சமகாலத் தேவைகள் மற்றும் விருப்பங்களை பூர்த்தி செய்யும் புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்த மூன்று மசோதாக்களும் முக்கியம் என விளக்கினார். விரைவான நீதியை வழங்கவும், இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பை தற்காலத்துக்கு ஏற்ப மாற்றவும் புதிய சட்டங்கள் உதவும் எனவும் அவர் உறுதி கூறினார்.

புதிய சட்ட மசோதாக்கள் குறித்து மக்களவையில் அறிமுகப்படுத்தும் உள்துறை அமைச்சர் அமித் ஷா
புதிய சட்ட மசோதாக்கள் குறித்து மக்களவையில் அறிமுகப்படுத்தும் உள்துறை அமைச்சர் அமித் ஷா

நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரில் புதுப்பிக்கப்பட்ட மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் மும்முரமாக உள்ளது. அதற்கேற்ப, நிலைக்குழு தனது அறிக்கையை மூன்று மாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆனால், இந்த சட்ட மசோதாக்களுக்கு மத்திய அரசு காட்டும் வேகத்தை எதிர்க்கட்சிகள் சந்தேகத்துடனே அணுகுகின்றன. மசோதாவின் கூறுகளில் வெளிப்படைத்தன்மை, பன்முகத்தன்மை உள்ளிட்டவை இல்லாதது குறித்தும் அவை தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வருகின்றன.

தேசத்துரோக குற்றம் ரத்து, கும்பல் கொலைகளுக்கு மரணதண்டனை, சிறுமி பாலியல் பலாத்கார குற்றத்துக்கு மரண தண்டனை உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை புதிய சட்டங்கள் உள்ளடக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in