அண்ணாமலை செய்வது அநாகரிக அரசியல்!

விளாசும் தவாக வேல்முருகன்
வேல்முருகன்
வேல்முருகன்

தனது முன்னாள் மனைவி காயத்ரி பாஜகவில் சேர்ந்திருக்கும் நிலையில் அதுகுறித்த கவலைகளோ, வருத்தமோ இல்லை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனிடம். பேரறிவாளன் விடுதலை, முள்ளிவாய்க்கால் நினைவுதினம், கட்சியினரின் இல்ல நிகழ்வுகள் என பரபரப்பாக இருந்தவரிடம் காமதேனுவுக்காக பேசினோம்.

உங்கள் மனைவி காயத்ரி..?

என்னுடைய மனைவியாக சில காலம் இருந்தார். கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து சென்றுவிட்டார். அதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அவ்வளவுதான். அதைத்தாண்டி அதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

பேரறிவாளன் விடுதலையை எப்படி பார்க்கிறீர்கள்?

அவரது தொடர் சட்டப் போராட்டத்திற்கும், அவரது தாயின் அயராத உழைப்பிற்கும் கிடைத்திருக்கும் வெற்றி. இதற்காக பாடுபட்ட தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் மூத்த வழக்கறிஞர்கள், அனைத்துக்கட்சித் தலைவர்களுக்கும் நன்றி. ஏழு பேரையும் தூக்குக்கயிற்றில் இருந்து காப்பாற்ற தன்னுயிரை தியாகம்செய்து முதல் வித்தை விதைத்த தோழர் செங்கொடியின் தியாகத்தைப் போற்றுவோம்.

பேரறிவாளன் விடுதலையில் அதிமுகவின் பங்கும் முதன்மையானது இல்லையா..?

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது உட்பட அதிமுக முக்கிய பங்கு வகித்தது என்பது உண்மைதான். ஆனால், தொடர் அழுத்தங்களை கொடுக்கத் தவறிவிட்டது. இந்த விஷயத்தில் திமுக அழுத்தம் கொடுத்தும் நீதிமன்றத்தில் உரியவகையில் வாதாடியும் சாதித்திருக்கிறது. என்றாலும் ஏழு பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதில் திமுகவும், அதிமுகவும் ஒத்த கருத்தைத்தான் கொண்டிருந்தன.

திமுகவின் ஓராண்டு கால ஆட்சி எப்படி இருக்கிறது?

கடுமையான நிதிச்சுமை இருக்கும் சூழ்நிலையிலும் கூட அனைத்துத் துறைகளிலும் கோரிக்கைகளுக்காக போராடிவர்களுக்கும் அரசை நாடியவர்களுக்கும் அள்ளிக் கொடுக்கமுடியாவிட்டாலும் கிள்ளியாவது கொடுத்திருக்கிறார் தமிழக முதல்வர். தமிழ்நாடு முழுவதும் ஓடி ஓடிச் சென்று உழைக்கக் கூடியவராக இருக்கிறார் என்பதை கண்கூடாக பார்க்கிறோம். அதேசமயம் கடந்த ஆட்சியில் தங்களையும் வளப்படுத்திக் கொண்டு, அந்த துறைகளின் அமைச்சர்களையும் வளப்படுத்திய சில ஜெகதலப் பிரதாபன்கள் இன்னும் முக்கிய பொறுப்புக்களில் இருக்கிறார்கள். அவர்கள் முதல்வரின் முழுமையான செயல்பாடுகளுக்கு இடையூறாக இருக்கிறார்கள். அதுகுறித்து இந்த அரசு பரிசீலித்து அவர்களை கவனமுடன் அப்புறப்படுத்த வேண்டும்.

தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?

கடுமையான நிதி பற்றாக்குறை இருந்தபோதிலும் ஆட்சிக்கு வந்ததுமே, பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 ஆயிரம் ரூபாயை யாரும் கேட்காமலே கொடுத்தவர் முதல்வர். பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணம், கூட்டுறவில் ஐந்து சவரன் வரையிலான நகைக் கடன்கள் ரத்து, மகளிர் குழுக்களின் கடன்கள் ரத்து உள்ளிட்ட பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

குடும்பத் தலைவிகளுக்கான மாதாந்திர உரிமைத்தொகையும் விரைவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் அரசின் நிதி நிலைமையையும் நினைத்துப் பார்க்கவேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் எல்லாவற்றையும் துடைத்து வைத்துவிட்டுப் போயிருந்தார்கள். 5.5 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருந்தது தமிழகம். திமுக ஆட்சிக்கு வந்து நிர்வாகம் செய்வதற்கு கிட்டத்தட்ட 90 ஆயிரம் கோடி கடன் வாங்கியிருக்கிறார்கள். அரசு நிர்வாகத்தை நடத்த வேண்டுமென்றால் அதற்காக எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கும் என்பதையும் பார்க்க வேண்டும்.

அரசாங்கம் என்பது மக்களும் சேர்ந்ததுதானே? மக்கள் இந்தநேரத்தில் நிதிநிலைமையை உணர்ந்துகொள்ள வேண்டும். ஜிஎஸ்டி பங்குத்தொகை 26 ஆயிரம் கோடி வரவில்லை, பேரிடர் நிவாரண நிதியாக கேட்ட ஐயாயிரம் கோடியையும் தரவில்லை. பிறகு எப்படி நிலைமையை சமாளிக்க முடியும்? நிலைமை சரியானதும் நிச்சயம் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று நம்பலாம்.

பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமில்லை என அரசு தெரிவித்துவிட்டதால் அரசு ஊழியர்கள் கோபத்தில் இருக்கிறார்களே?

19 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த கலைஞர், அரசு ஊழியர்களின் அத்தனை கோரிக்கைகளை நிறைவேற்றி வைத்திருக்கிறார். அவர் எப்போதும் அவர்களின் கோரிக்கைகளை மறுத்ததில்லை. அதேபோலத்தான் அவரின் மகனான தமிழக முதல்வரும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றுவார். நிதி நிலைமை சரியானதும் அரசு ஊழியர்கள் கேட்டுப் பெறலாம். அரசாங்கமும் அவர்கள் கேட்காமலே அதனைத்தர முன்வர வேண்டும்.

தமிழக அரசின் அறிவிப்புகளில் தடுமாற்றமும் முன்னுக்குப் பின் முரணும் இருப்பதை உணர்கிறீர்களா?

எல்லா தடுமாற்றங்களுக்குப் பின்னாலும், அமைச்சர்களின் அறிவிப்புகள் திரும்பப்பெறப்படுவதன் பின்னாலும் இருப்பது நிதிச்சுமைதான். அமைச்சர்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக அறிவித்து விடுகிறார்கள் ஆனால், துறை செயலாளர்கள் போன்றவர்கள் நிதிநிலையை சுட்டிக்காட்டி முட்டுக்கட்டை போட்டுவிடுகிறார்கள். அதனால் இந்த தடுமாற்றம் ஏற்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், இந்த அரசு எல்லோருக்குமான அரசாக இருக்கிறது. அதிகபட்ச ஜனநாயகத் தன்மையுடன் நடந்து கொள்கிறது. அதனால் அனைத்து தரப்பினரின் குரலுக்கும் செவி சாய்க்கிறது. அதன் விளைவாகவும் அரசின் அறிவித்த அறிவிப்புகளில் மாற்றங்கள் செய்யப்படுகிறது.

திருவாரூரில் திராவிட இயக்கங்களுக்கு இணையான கூட்டத்தை பாஜக கூட்டியிருக்கிறதே, தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

தமிழகத்தில் தங்களின் அடிப்படை கட்டமைப்பை கட்டமைக்கிறார்கள். மிக விரைவில் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்ற உறுதியோடும், கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்ற உத்வேகத்தோடும் செயல்படுகிறார்கள். பல்லாயிரக்கணக்கில் கோடிகளை வைத்திருக்கும் பாஜக தமிழ்நாட்டில் கட்சியை வளர்ப்பதற்காக வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் ஒரு தொகை அள்ளி விடப்படுகிறது. விலை கொடுத்து ஆட்களைத் திரட்டுகிறார்கள். அதனால் கூட்டம் கூடுகிறது. கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய கிரிமினல்களைக் கொண்டு வந்த கட்சியில் இணைக்கிறார்கள். ஒரு பெரிய ஜாதியில் இருக்கும் முக்கிய பிரபலங்களை இழுத்து வந்து கட்சியில் இணைக்கிறார்கள்.

மாற்றுக் கட்சி பிரபலங்கள், அவர்களின் வாரிசுகள், குடும்பத்தார் என சிக்கியவர்களை எல்லாம் இழுத்துக் கொள்கிறதே தமிழக பாஜக?

இது ஆரோக்கியமான போக்கு அல்ல. ஆக்கபூர்வமான அரசியலுக்கான வழிகாட்டலும் இல்லை. தமிழகத்தை பொறுத்தவரை திராவிட மாடல் என்பதை முதல்வர் வேகமாக எடுத்துச் செல்கிறார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்பதற்காக களப்பணியில் தீவிரமாக இருப்பவர்கள் குடும்பத்திலிருந்து யாரையாவது பிடித்து இழுத்துக்கொண்டு போய் நிறுத்தி, பார்த்தீர்களா... அவர்கள் குடும்பத்தில் இருந்தே கொண்டு வந்து விட்டோம் என்று காட்சிப்படுத்தும் வேலைகளை அவர்கள் பார்க்கிறார்கள்.

உங்கள் முன்னாள் மனைவி, திருச்சி சிவாவின் மகன் ஆகியோரை பாஜகவில் இணைத்ததைச் சொல்கிறீர்களா?

ஆமாம். அதில் என்ன பெருமை இருக்கிறது? திருச்சி சிவா பாஜகவுக்கு போயிருந்தால் அதை அவர்களின் வெற்றியாக எடுத்துக்கொள்ளலாம். வேல்முருகன் போயிருந்தால் அவர்களுக்கு அதை பெரிய விஷயமாக இருந்திருக்கும். ஆனால், யார் என்றே தெரியாத திருச்சி சிவாவின் மகனையும், வேல்முருகனின் முன்னாள் மனைவியையும் கட்சியில் இணைப்பதில் என்ன பெருமை இருக்கிறது என்று தெரியவில்லை.

வேல்முருகன் மனைவி மகளிர் அணி தலைவியாகவோ, ஒரு மக்கள் பிரதிநிதியாகவோ, அல்லது மக்கள் செல்வாக்கு உள்ளவராகவோ இருந்து அவரை அழைத்துச் சென்றிருந்தால் பரவாயில்லை. அவர் ஒரு குடும்பத்தலைவி. அவரை அழைத்து கட்சியில் சேர்த்து, ஒவ்வொரு முக்கிய தலைவர்களாக புகைப்படம் எடுத்துக் கொண்டு அதனை பொதுவெளியில் பகிர்ந்து கொள்வது என்ன மாதிரியான அரசியல் என்று தெரியவில்லை. அநாகரிகமான, அரசியல் பண்பாடற்ற, மோசமான ஒரு செயல்பாடாகத்தான் இதை பார்க்கிறேன்.

பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள்?

அரசியல் முதிர்ச்சியின்மை காரணமாக பலவிதமாகப் பேசிக் கொண்டிருக்கிறார். தலைவர்கள் நடமாட முடியாது, ஒண்டிக்கு ஒண்டி வரீங்களா? என்றெல்லாம் ஒரு போலீஸ் அதிகாரி மாதிரியே பேசிக்கொண்டிருக்கிறாரே தவிர, ஒரு கட்சியின் தலைவராக அவர் பேசவில்லை. இதையெல்லாம் அரசியல் தெரியாதவர்கள் வேண்டுமானால் ரசிக்கலாம். ஆனால், தமிழக அரசியலை உற்றுக் கவனிப்பவர்கள் தமிழக அரசியலின் வரலாறு தெரிந்தவர்கள் ரசிக்க மாட்டார்கள்.

இந்த மாதிரியான போக்கெல்லாம் தற்போதைக்கு அவருக்கு பலன் கொடுப்பது போல தெரியுமே தவிர, ஒரு நிலையான, அரசியல் தலைமையை கொடுக்காது. நல்ல அரசியல் தலைவர்கள் வரிசையில் அவரை கொண்டு போய்ச் சேர்க்காது. நாளைய வரலாறு அவரை ஒரு செயல் திறன் மிக்க தலைவராக காட்டாது. பண்பாடு மிக்க ஒரு அரசியல் தமிழகத்தில் இருந்தது, இருக்கிறது. அதையெல்லாம் அண்ணாமலை தெரிந்துகொள்ள வேண்டும். அதன்படி நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அவர் தற்போது நடந்து கொள்ளும் முறை ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கு அழகல்ல.

காயத்ரி பாஜகவில் இணைந்தபோது...
காயத்ரி பாஜகவில் இணைந்தபோது...

அண்மைக் காலமாக பாஜகவுடன் திமுக இணக்கமாகச் செல்வது போல் ஒரு தோற்றம் தெரிகிறதே?

ஆட்சி நிர்வாகத்தில் இருக்கும் திமுக தங்களுடைய கொள்கைகளுக்காக, மாநில உரிமைகளுக்காக விட்டுக்கொடுக்காமல் போராடுகிறது. அதேசமயம், மாநிலத்திலன் தேவைகளுக்காக, நன்மைகளுக்காக மத்திய அரசுடன் இணைந்து நடைபோடுவதில் தவறில்லை. ஒரு நல்ல நிர்வாகத்துக்கு அதுதான் இலக்கணம். இதைத் தவறு என்று சொல்லமாட்டேன். நீட் தேர்வு விலக்கு, எழுவர் விடுதலை, துணைவேந்தர் நியமனம் உள்ளிட்டவற்றிற்காக மத்திய அரசை தீரத்துடன் எதிர்த்துப் போராடி வருகிறது திமுக. ஆளுநரின் செயல்பாடுகளை உரிமையோடு கண்டிக்கிறது. அசுர பலத்தோடு இருக்கிற ஒரு மத்திய அரசை எந்த நேரத்தில் எதிர்க்கவேண்டும், எந்த இடத்தில் இணக்கமாக நடந்துகொள்ள வேண்டும் என்கிற கலைஞரின் ராஜதந்திரத்தோடு தமிழக முதல்வர் நடந்து கொள்கிறார்.

திமுகவிடம் பாமகவும் நெருங்கி வருவது போல தெரிகிறதே... அப்படி வந்தால் வேல்முருகன் நிலை?

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்பதுதான் வேதவாக்கு. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அந்த நேரத்தில் அரசியல் சூழ்நிலையையும், தமிழ்நாட்டின் நலனையும் கருத்தில் கொண்டு எங்கள் கட்சியின் நிர்வாக அமைப்பு கூடி முடிவு எடுக்கும். பாமகவால் பல வழக்குகளை சந்தித்தவர்கள் நாங்கள், அவர்களோடு இணைந்து பயணிக்க முடியுமா என்பதையெல்லாம் கட்சிதான் முடிவு செய்யும்.

கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் திமுகவிடம் அடிபணிந்து போய்விட்டதாகச் சொல்லப்படுவதை ஏற்கிறீர்களா?

யார் சொல்வது? அதிமுகவை விட நாங்கள் தான் ஒவ்வொரு விஷயத்திலும் சுட்டிக்காட்டுகிறோம். மக்கள் பிரச்சினைகளுக்காக என்னைப் போன்றவர்கள்தான் சட்டமன்றத்தில் அதிக கவன ஈர்ப்புத் தீர்மானங்களை கொண்டுவந்திருக்கிறோம். மக்களுக்கான நீதி கிடைக்கவும், மக்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதிலும் திமுக கூட்டணிக் கட்சிகள், பிரதான எதிர்க் கட்சியான அதிமுகவை விட அதிக வேகமாக செயல்படுகின்றன. இதை திமுகவே சுட்டிக்காட்டி வருத்தப்பட்டிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in