தமிழக எம்.பி-க்களின் செயல்பாடு எப்படி? ‘பிரைம் பாயின்ட்’ சீனிவாசன் பேட்டி

தமிழக எம்.பி-க்களின் செயல்பாடு எப்படி?  ‘பிரைம் பாயின்ட்’ சீனிவாசன் பேட்டி

மக்களவைத் தேர்தலில் வாக்களித்து, நாடாளுமன்றத்திற்கு தம் தொகுதிவாசிகளால் அனுப்பி வைக்கப்படும் எம்.பிக்கள் என்ன செய்கிறார்கள்?. இவர்களது நடவடிக்கைகளை டெல்லியின் பிஆர்எஸ் இந்தியாவைப் போல், ஆராய்ந்து கடந்த 2009 முதல் வெளியிட்டு வரும் சமூக ஆய்வு நிறுவனம் பிரைம் பாயிண்ட் பவுண்டேஷன்ஸ். இதன் நிறுவனரான ‘பிரைம் பாயிண்ட்’ சீனிவாசன் இருதினங்களுக்கு முன் வெளியிட்ட தரவுகள் குறித்து, ‘காமதேனு’ இணையத்தின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள் பின்வருமாறு:

நாடாளுமன்ற எம்.பிக்கள் நடவடிக்கையை நீங்கள் வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

14வது லோக்சபா முடிவில், அதன் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து தனது உரையின் போது கவலை தெரிவித்தார். அப்போது, இது ஊடகங்களில் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியது. அரசியல் மோசமானது என மக்கள் நினைத்தனர். சிறப்பாகச் செயல்படும் எம்.பிக்களின் திறனை வெளி உலகிற்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்று டாக்டர்.அப்துல் கலாமும் பரிந்துரைத்தார். கலாமின் ஆலோசனையின் பேரில், அவசர அவசரமாக நாடாளுமன்றத் தகவல்களைத் தேட ஆரம்பித்தேன். பின்னர், பிஆர்எஸ் இந்தியாவிலிருந்து தரவுகளைப் பெற்றேன். தரவுகளின் அடிப்படையில்தான் நாங்கள் சிறந்த செயல்பாடுகள் கொண்ட எம்.பிக்களை கவுரவிக்க ஆரம்பித்தோம். 2010 முதல், விழா எடுத்து ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நாடாளுமன்ற எம்.பிக்களை தேர்வு செய்து ‘சன்சத் ரத்னா’ எனும் பெயரில் விருதும் அளித்து கவுரவிக்கிறோம்.

எதன் அடிப்படையில் எம்.பிக்களுக்கு புள்ளிகள் கிடைக்கின்றன?

நாடாளுமன்றத்தில், உறுப்பினர்கள் விவாதங்களில் பங்கேற்கலாம். அவர்கள் தயார் செய்து பேசினால், அது 'சுய முயற்சிவிவாதங்கள்' (Initiated debates) என்று அழைக்கப்படுகிறது. அவர்கள் மற்றவர்களின் கருத்துக்களை ஆமோதிப்பதாக இருந்தால், அது விவாதங்களுக்கான முன்மொழிவுகள்(Associated debates) என அழைக்கப்படுகிறது. இதுவன்றி, 'தனிநபர் மசோதாக்களை' (Private Members Bills) அறிமுகப்படுத்தலாம், 'கேள்விகளையும்' (Questions) எழுப்பலாம். இவை அனைத்தின் கூட்டலை புள்ளிகள் என்றழைக்கிறோம்.

புள்ளிகள் பெறுவதற்காகவே தம் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் எம்.பிக்கள் உண்டா?

மக்களவை, மாநிலங்களவை என இரண்டிலும், அனைத்து நடவடிக்கைகளிலும் பங்கேற்று தங்கள் செயல்திறனை மேம்படுத்திக் கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் உள்ளனர்.

திமுகவின் முதல்முறை எம்.பிக்களான மக்களவையின் டாக்டர்.டிஎன்வி.செந்தில்குமார், மாநிலங்களவையின் கனிமொழி சோமு ஆகியோர் முதலிடம் பெற்றது எப்படி?

2021 குளிர்கால அமர்வின் போது தர்மபுரி தொகுதி எம்.பி டாக்டர் செந்தில் குமார் அகில இந்திய அளவில் 25 வது ரேங்கில் இருந்தார். அவர் இப்போது 2022 குளிர்கால அமர்வில் அகில இந்திய அளவில் 17வது ரேங்கிற்கு முன்னேறியுள்ளார். இது 17வது லோக்சபாவின் 2019-ன் முதல் அமர்வில் இருந்து அவரது ஒட்டுமொத்த செயல்திறனை அடிப்படையாகக் கொண்டது. மாநிலங்களவையில் கடந்த 2022 -ம் வருடத்தில் முதல்முறை எம்.பியான கனிமொழி என்.வி.என் சோமு முதலிடம் பெற்றுள்ளார். திமுகவை சேர்ந்த இவர், தேசிய அளவில் 10 -வது இடத்தை பெற்றுள்ளார். திமுகவில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரான என்.வி.என்சோமுவின் மகளான இவர் நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் அமைதியாக பணியாற்றுகிறார்.

விவாதங்களுக்கான முன்மொழிதலை உங்கள் அமைப்பு கணக்கில் கொள்ளாதது ஏன்?

ஒரு எம்.பி, சுயமாக முயன்று பேசும் விவாதங்களை இதர எம்.பிக்கள் தங்களை இணைத்து கொள்கிறார்கள். இதுபோன்ற விவாதங்களுக்கான முன்மொழிதல் என்பது எந்தவிதமான சுயஉழைப்பையும் உள்ளடக்குவதில்லை. எனவே, எங்கள் பகுப்பாய்விற்கு, நாங்கள் சுயமுயற்சி விவாதங்களை மட்டுமே எடுத்துக்கொள்கிறோம்.

செந்தில்குமார் எம்.பி.,
செந்தில்குமார் எம்.பி.,

குறைவான புள்ளிகள் பெற்ற எம்.பிக்களின் நடவடிக்கை குறைத்து மதிப்பிடுவது சரியா?

மக்கள் திறம்பட பங்கேற்பதற்காகவும், தொகுதி, மாநிலம் மற்றும் தேசத்தின் பிரச்சினைகளை வெளிக்கொணரவும் ஒரு எம்.பியை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கின்றனர். கேள்வி என்பது அரசாங்கத்தை செயல்படத் தூண்டுவதற்கும், குறிப்பிட்ட விவகாரம் மீதான தகவலைப் பெறுவதற்கும் ஒரு கருவியாகும். ஒவ்வொரு உறுப்பினரும் சமுதாயத்தின் நலனுக்காக இந்த வசதிகளை சரியாகப் பயன்படுத்த வேண்டும். குறைவானப் புள்ளிகள் பெற்றாலும் பல எம்.பிக்களின் உரைகள் மிகவும் முக்கிய அம்சங்களை கொண்டு பலன் அளிப்பது உண்டு. எனவே, குறைந்த புள்ளிகள் பெறும் எம்.பிக்கள் அனைவரையும் நாம் சில அம்சங்களில் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.

இதுபோல் எம்.பிக்களுக்கு கிடைக்கும் புள்ளிகளின் பாதிப்பு அவர்கள் மறுமுறை போட்டியிடும் போது இருக்குமா?

துரதிர்ஷ்டவசமாக, எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவர்களது நாடாளுமன்ற நடவடிக்கைகள் மீது யாரும் கவலைப்படுவதில்லை. துரதிர்ஷ்டவசமாக ஊடகங்களும் அவர்களின் செயல்பாட்டில் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால்தான் செயல்படாத மக்கள் பிரதிநிதிகள் மறுமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மீண்டும் போட்டியிடுபவர்களின் கடந்தகால நடவடிக்கைகளை வாக்காளர்கள் கணக்கில் கொள்ளாமல் வாக்களிப்பது வருத்தமான விஷயம்.

கனிமொழி சோமு
கனிமொழி சோமு

நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் தம் நடவடிக்கைகளை முழுவீச்சில் அமலாக்க செய்ய வேண்டியது என்ன?

நாடாளுமன்றத்தால் தங்களுக்கு வழங்கப்படும் பேப்பர்களை எம்.பிக்கள் தினமும் கவனமாகப் படிக்க வேண்டும். அவையில் கலந்து கொள்வதற்கு முன், அவர்கள் அன்றைய அஜண்டாவில் கலந்து கொள்ள தயாராக வேண்டும். ஒரு சில எம்.பிக்களை தவிர, பலர் வீட்டுப்பாடத்தை மேற்கொள்வதில்லை. தமிழக எம்.பிக்களில் பலர் தங்களை நாடாளுமன்றத்தின் அன்றைய நடவடிக்கைக்கு ஏற்ப தயார் செய்து கொள்வதில்லை. நாடாளுமன்ற நேரத்தை தமிழக அரசியல் பேச பயன்படுத்துவது, சமுதாயத்திற்கு உதவாது. அவர்கள் தங்களுடன் சரியான தகவல்களை எடுத்துச் செல்வதில்லை. நாடாளுமன்றத்தில் தவறான தகவல்களைத் தருகிறார்கள். இது உறுப்பினர்கள் மற்றும் மாநிலத்தின் நம்பகத்தன்மையை குறைக்கும்

நாடாளுமன்றத்திற்கு குறைவான நாட்கள் வருகை புரியும் எம்.பிக்களால் பொதுமக்களின் இழப்பு என்ன?

அந்த எம்.பிக்கள் தங்கள் கடமையை சரிவர செய்வதில்லை என அர்த்தமாகும். இதன்முலம் அவர்கள், தங்கள் தொகுதிவாசிகள் மற்றும் பொதுமக்கள் பிரச்சினைகளை எடுத்துக்கூறும் வாய்ப்பை இழக்கிறார்கள்.

நாடாளுமன்ற அவைகளில் தம் நடவடிக்கைகளுக்கு உதவியாக ஆய்வுக்குழுக்களை அமர்த்தும் எம்.பிக்கள் குறித்து கூற முடியுமா?

சில எம்.பி.க்கள், நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் பல்வேறு மசோதாக்கள் மற்றும் பிற விஷயங்களில் ஆராய்ச்சி செய்ய உதவியாளர்களை நியமிக்கின்றனர். இந்த குழு அந்த எம்.பிக்கு தேவையான விவரங்களைச் சேகரிக்கிறது. கடந்த 2014 முதல் தொடர்ந்து தேசிய அளவில் முதலிடம் வகிக்கும் மக்களவை எம்.பியாக சுப்ரியா சுலே இருந்து வருகிறார். தேசியவாத காங்கிரஸின் எம்.பியான சுப்ரியாவிற்கு ஆய்வு செய்து ஆலோசனை வழங்க ஒரு குழு உள்ளது. இதுபோல், இதர எம்.பிக்களும் தங்கள் உரைகளில் ஆய்வுக்குழுக்களை பயன்படுத்துவது உதவியாக உள்ளது. ஆனால், சில வட மாநிலங்களின் எம்.பிக்கள் மட்டுமே இதுபோல் செயல்படுகின்றனர். சில சந்தர்ப்பங்களில், அந்த தொகுதியில் உள்ள மூத்த அரசியல்வாதிகளும், அறிஞர்களும் தன்னார்வமாக ஆய்வு செய்து தம் எம்.பிக்களுக்கு உதவுகிறார்கள்.

நாடாளுமன்ற இரு அவைகளின் தமிழக எம்.பிக்கள் அனைவருக்கும் தம் நடவடிக்கைகள் மீது தெளிவானப் புரிதல் உள்ளதா?

தமிழகத்தில் உள்ள ஒரு சில எம்.பிக்களை தவிர, பல எம்.பிக்களுக்கு நாடாளுமன்ற செயல்பாடுகள் மீதான புரிதல் இல்லை. அவர்கள், தங்கள் தொகுதி அல்லது மாநில பிரச்சினைகளை பேசாமல் நாடாளுமன்றத்தின் அரிய நேரத்தை மாநில அரசியல் பேசுவதற்கு பயன்படுத்துகிறார்கள். இதுபோன்றவர்கள் பாராளுமன்ற நடவடிக்கைளுக்கு தங்களை தயார்படுத்தியும் கொள்வதில்லை. அவர்கள் அரசியல் கூட்டங்கள் போன்று பேசி, தவறான தகவல்களையும் தரவையும் சபையில் வழங்குகிறார்கள். இவர்கள் நாடாளுமன்றம் சார்பில் நடத்தப்படும் பயிலரங்கங்கள் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வதில்லை. இதுபோன்ற எம்.பிக்களுக்கு அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகள் வழிகாட்டுதல் பயிலரங்கம் நடத்துவது அவசியம்.

மசோதாக்களின் விவாதங்களில் கலந்துகொள்ள அவர்களது கட்சிகளின் கொறடாக்கள் தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற நிலை இருக்கும் போது, செந்தில்குமார் போன்ற சில எம்.பிக்கள் மட்டும் கூடுதலாகப் புள்ளிகள் பெற்றது எப்படி?

விவாதங்களில் கலந்து கொள்ள கொறடாவின் அனுமதி தேவை என்பது உண்மைதான். ஆர்வமுள்ள உறுப்பினர்கள் விதிகளுக்கு உட்பட்டு அதிக விவாதங்களில் பங்கேற்கின்றனர். டாக்டர் செந்தில் குமார் போல் அதிக விவாதங்களில் பங்கேற்க, அதற்கான நேரம் முடிந்த பின் வாய்ப்பு கேட்டு சபாநாயகரை முன்கூட்டியே அனுகலாம். இதற்கு அவர்கள் கட்சிகளின் கொறடாக்கள் அனுமதி தேவையில்லை எனக் கருதுகிறேன். அனைத்து கட்சிகளுக்கான விவாதங்கள் முடிந்த பின் சில எம்.பிக்களுக்கு சபாநாயகர், தனியாக நேரம் ஒதுக்குவது உண்டு. இந்த முறையிலும், விவாதங்களில் பங்கு கொள்ளாதவர்கள் தங்கள் கருத்துக்களை எழுத்துமூலம் அவையில் சமர்ப்பிக்கலாம். இதுவும் புள்ளிகள் பெறுவதற்கான தகுதி கொண்டவையே.

தனிநபர் மசோதாக்களை தாக்கல் செய்வதில் பெரும்பாலான எம்.பிக்கள் பின்தங்கியிருப்பது ஏன்? இதன் பலன் என்ன?

தனிநபர் மசோதாக்களை அறிமுகப்படுத்த, ஒருவருக்கு சிறப்புத் திறன் தேவை. நிபுணர்களின் ஆலோசனையுடன் மசோதா தயாரிக்கப்பட வேண்டும். அதனால்தான் பல உறுப்பினர்கள் தனிநபர் மசோதாக்களை அறிமுகப்படுத்துவதில்லை. தனிநபர் மசோதாக்கள் வெள்ளிக்கிழமை மாலை அறிமுகப்படுத்தப்படுகின்றன. பல மசோதாக்கள் விவாதத்திற்கு வருவதில்லை. விவாதிக்கும்போது, உறுப்பினர்கள் விரிவாக விவாதிக்கலாம். இந்த மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படும் போது மத்திய அரசு அதை கவனத்தில் கொள்கிறது. சில சந்தர்ப்பங்களில், தனிநபர் மசோதாவை உள்ளடக்கி தாமாகவும் மத்திய அரசு மசோதாவாக அறிமுகப்படுத்துவது உண்டு. எனவே, நாடாளுமன்ற அமைப்பில் தனிநபர் மசோதா என்பது அரசாங்கத்தை தூண்ட, ஒரு முக்கியமான கருவியாகும்.

மத்திய அரசால் ஊதியம் வழங்கப்பட்டும் ஒரே உதவியாளர்களை ஒன்றுக்கும் மேற்பட்ட எம்.பிக்கள் வைத்திருப்பது பற்றி தங்கள் கருத்து என்ன?

இதில் கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை.

பலசமயம் தொடர்ந்து நாடாளுமன்ற அவைகள் முடங்குவதால் இழப்புகள் என்ன?

ஒரு சில சிறிய மாநில பிரச்சினைகளுக்காக, நாடாளுமன்றம் முடக்கப்படும் போது, பல பெரிய தேசிய பிரச்சினைகளை விவாதிப்பதற்கு முடியாமல் போகிறது. நாடாளுமன்றத்தை முடக்குவது, மக்களுக்கு செய்யப்படும் துரோகம் ஆகும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அதிக நாட்கள் அமர்ந்து பல பிரச்சினைகளை பயனுள்ள முறையில் விவாதிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in