ஆதீன மடங்கள் எல்லாம் ஆர்எஸ்எஸ் பிடியில் சிக்கிவிட்டனவா?

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில்
சேகர்பாபு
சேகர்பாபு

கைத்தறி, விளையாட்டு ஆகிய துறைகளைப் போல இந்து அறநிலையத்துறையும் சாதாரண துறையாகத்தான் இதற்கு முந்தைய ஆட்சிகளில் இருந்து வந்தது. ஆனால், இம்முறை இந்து அறநிலையத்துறை என்பது அன்றாடம் செய்திகளில் அடிபடக்கூடிய துறையாக, தமிழகத்திலேயே முக்கியமான துறைபோல பரபரப்பாக பேசப்படுகிறது. அதற்குக் காரணம், அந்தத் துறையின் அமைச்சராக இருக்கும் சேகர்பாபு!

தினமும் துறை சார்ந்த பணிகளில் ஏதாவது ஒரு அறிவிப்பு, ஏதாவது ஒரு ஆய்வு, அல்லது ஆலோசனைக்கூட்டம், அல்லது கோயில்களுக்குச் சென்று வருவது என்று எப்போதும் பரபரப்பாக இருக்கிறார் சேகர் பாபு. ஆனாலும் மதுரை ஆதீனம் உள்ளிட்டவர் களும் பாஜக உள்ளிட்ட கட்சிகளும் சேகர் பாபுவுக்கு எதிராக கடுமையான விமர்சனம் வைத்திருக்கும் நிலையில் அவரிடம் பேசினோம். இனி அவரது பேட்டி...

சிதம்பரம் கோயில் விவகாரத்தில் என்ன தான் நடக்கிறது?

அது மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில். அதில் ஆய்வு செய்ய இந்து அறநிலையத்துறைக்கு உரிமை உண்டு. புகார்களின் அடிப்படையில் விசாரிக்கச் சென்ற அறநிலையத் துறையினரிடம் அதற்குரிய நியாயமான பதிலைக் கூற வேண்டியது தீட்சிதர்களின் கடமை. நான் நேரில் சென்றபோதும் அதைத்தான் அவர்களிடம் வலியுறுத்தி வந்தேன். ஆனால் அவர்கள் அதனைப் பின்பற்றவில்லை. இரண்டு நாளும் கோயிலுக்குச் சென்று நடந்த ஆய்வு விவரங்களை அதிகாரிகள் துறை ஆணையருக்கு அறிக்கையாக அளிப்பார்கள். அதன் அடிப்படையில் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசென்று அடுத்தகட்ட நடவடிக்கைகளை சட்டப்படி மேற்கொள்வோம்.

கோயிலை மீண்டும் அரசின் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்று சில அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளனவே?

அது அரசாங்கத்தின் எண்ணமில்லை. அது பொதுக்கோயில் என்பதால் அதன்மீது வரும் புகார்கள் குறித்து விசாரித்து ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.

அறநிலையத்துறையின் கடந்த ஓராண்டு சாதனையாக நீங்கள் எதைச் சொல்வீர்கள்?

நிறையச் சொல்லலாம். குறிப்பாக, பழமையான பெரிய கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று முடிந்து 10, 15 ஆண்டுகளுக்கும் மேலாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தன. அப்படி இருந்த 180 கோயில்களுக்கு இந்த ஓராண்டில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருக்கிறது. பல கோயில்களில் திருப்பணிகள் பாதியில் நின்றிருந்தபோதிலும் அவற்றை யெல்லாம் முடித்து அவற்றிற்கு கும்பாபிஷேகம் செய்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

கிராமப்புறங்களில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கோயில்களில் திருப்பணி செய்வதற்காக இதுவரை அரசின் சார்பில் ஒரு லட்ச ரூபாய்தான் வழங்கப்பட்டு வந்தது. இதுகுறித்த ஆய்வுக்கூட்டத்தின்போது பேசிய முதல்வர் இந்த ஒரு லட்சம் எவ்வாறு போதும் என்று கேட்டு உடனடியாக அதை இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஆண்டுக்கு 1000 கோயில்கள் என்று இருந்ததை 1,280 கோயில்களாகவும் உயர்த்தி இருக்கிறார்.

அதேபோல ஒரு கால பூஜை திட்டத்தில் 12,957 கோயில்கள் உள்ளன. அவற்றிற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டிருந்தது. அது போதாது என்பதை ஆய்வு செய்து கண்டறிந்த முதல்வர், அரசு நிதியில் இருந்து மேலும் ஒரு லட்ச ரூபாயை இந்த கோயில்களுக்கு விடுவித்து வைப்பு நிதியாக வைக்க செய்திருக்கிறார். 129.50 கோடி இதற்காக அரசு நிதி வழங்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல், இந்த ஆண்டு மேலும் 2 ஆயிரம் கோயில்களை ஒரு கால பூஜை திட்டத்தில் இணைத்துக்கொள்ள திட்டமிடப் பட்டிருக்கிறது. அதற்கும் 40 கோடி ரூபாயை அரசு நிதியாக முதல்வர் தந்திருக்கிறார்.

இப்படிப்பட்ட பணிகளுக்கு துறை சார்ந்த நிதியை பயன்படுத்துவதுதான் இதுவரை வழக்கத்தில் இருந்தது. இப்போதுதான் முதன்முதலாக அரசு நிதியை அதற்காக ஒதுக்குவது நடந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல், ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய் 1000 வழங்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தியிருக்கிறோம். அர்ச்சகர்களையும் மனம் குளிரவைக்கும் ஆட்சியாக, தெய்வங்களும் மகிழ்ச்சியாக இருக்கும் ஆட்சியாக திமுக அரசு திகந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் தான் அறநிலையத் துறையின் ஓராண்டு கால சாதனையாக நாங்கள் பார்க்கிறோம்.

அப்படியானால் திமுக அரசு ஆன்மிக அரசு என்று எடுத்துக்கொள்ளலாமா?

ஆன்மிக அரசு என்று சொல்வதை விட திராவிட மாடல் அரசு என்று சொல்லலாம்.

நீங்களே ’இது ஒரு ஆன்மிக அரசும் தான்’ என்று முன்பு சொல்லியிருந்தீர்கள். இப்போது அதிலிருந்து பின்வாங்குகிறீர்களே?

பின்வாங்கவில்லை. இது ஆன்மிகவாதிகள் உள்ளிட்ட அனைவருக்குமான அரசு. அதேநேரத்தில் ஆன்மிக அரசு என்று சொல்லும்போது ஒரு சாராருக்கான அரசு என்பது போல ஒரு தோற்றம் வந்து விடும். அதனால் இது அனைவருக்குமான திராவிட மாடல் அரசு என்று சொல்கிறோம்.

கோயில் நிலங்கள் மூலம் அரசுக்கு வரவேண்டிய 2,390 கோடி ரூபாயை வசூலிக்க ஆண்டுக்கு 540 கோடி ரூபாய் இலக்கு வைத்து செயல்படத் தொடங்கியது எந்த அளவில் உள்ளது?

நல்ல பயன் கிடைத்திருக்கிறது. இதுவரை 200 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டிருக்கிறது. பல இடங்களில் வாடகை குறித்த பிரச்சினைகள் நிலவி வருகிறது. கூடுதலாக இருப்பதாக சொல்கிறார்கள். அதனால், வாடகை நிர்ணய குழு ஒன்றை அமைக்க இருக்கிறோம். அதன் மூலம் வாடகை நிர்ணயம் செய்து அவற்றை சரியாக வசூலிக்க திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

கோயில் சொத்து விவரங்களை இணையத்தில் ஏற்றும் பணி எந்த அளவில் இருக்கிறது?

செம்மையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோயில் நிலங்களை இனம் கண்டறிந்து அவற்றை ரேவர் கருவிகள் மூலம் அளவீடு செய்து வரைபடம் தயாரித்து அவற்றையும் இணையத்தில் ஏற்றும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அப்படி இதுவரை 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டு அளவீடு செய்யப்பட்டு இணையத்தில் ஏற்றப்பட்டிருக்கிறது. சமீபத்தில்கூட காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை அளவிடும் பணியை நானே நேரில் சென்று பார்த்து, கற்களை நடும் பணியை மேற்கொண்டு வந்தேன்.

தினந்தோறும் ஏதாவது ஒரு கோயிலுக்குச் சென்று விடுகிறீர்கள். இது என்ன வேண்டுதலா?

தினந்தோறும் கோயிலுக்குச் சென்று வழிபடுவது சிறுவயது முதலே எனக்குள்ள பழக்கம்தான். தற்போது துறை அமைச்சராக இருக்கும் நிலையில் கோயில்களில் நிர்வாகம், வழிபாட்டு முறைகள், வரவு செலவுகள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை எல்லாம் கவனிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அதற்காக கோயில்களுக்குச் செல்ல வேண்டிய இருக்கிறது அதுமட்டுமல்லாமல் சுமார் 450-க்கும் மேற்பட்ட கோயில்கள் ஆயிரம் ஆண்டுகள் கடந்த பழமையான கோயில்கள். அவற்றையெல்லாம் பாதுகாப்பதும் செம்மையாகப் பராமரிப்பதும் நமது கடமை என்று முதல்வர் அறிவித்திருக்கிறார். அதற்காகவும் அத்தகைய கோயில்களுக்குச் சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.

மிகப் பழமையான கோயில்களை நிர்வகிப்பதில் ஏதாவது சிறப்பு கவனம் செலுத்துகிறீர்களா?

நமது முதல்வர் அதில் அதிக அக்கறையோடு இருக்கிறார். இந்த ஆண்டு 100 கோடி ரூபாய் அதற்காக நிதி ஒதுக்கியிருக்கிறார். அதன்மூலம் அந்த கோயில்களில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கிறார்.

நீங்கள் இவ்வளவு சொன்னாலும் திமுக அரசு இந்து விரோத அரசு, திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று முத்திரை குத்துகிறார்களே..?

இது அனைவருக்குமான ஆட்சி. இது ஒரு கடை நிலை மனிதனுக்கும் தேவையானதைச் செய்து கொடுக்கிற ஆட்சி. அதற்கு அவர்கள் என்ன பெயர் வேண்டுமானாலும் சூட்டிக் கொள்ளட்டும்.

ஆதீன மடங்கள் எல்லாம் ஆர்எஸ்எஸ் பிடியில் சிக்கிவிட்டதாகச் சொல்லப்படும் கூற்றை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. பெரும்பாலான ஆதினங்களும் மடங்களும் அரசுடன் இணக்கமாக தான் இருக்கிறார்கள். ஏதோ ஒரு சில ஆதீனங்கள்தான் தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக எதையாவது பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

மதுரை ஆதீனம் அறநிலையத்துறையை விமர்சித்திருப்பதற்கு கடுமையான வார்த்தைகளில் பதில் சொல்லியிருக்கிறீர்களே..?

குறிப்பிட்டு யாரையும் தற்போது சொல்ல விரும்பவில்லை. அவர் எதையாவது சொல்லிக்கொண்டிருக்கட்டும். இனி அதையெல்லாம் கண்டுகொள்ளப்போவதில்லை

கோயில் நகைகளை உருக்கி தங்கமாக மாற்றும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டதா... அதற்கு கடுமையான எதிர்ப்புகள் இருந்ததே?

நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கிறது. இருக்கன்குடி மாரியம்மன் கோயில் நகைகள் உருக்கப்பட்டு தங்கமாக மாற்றப்பட்டிருக்கிறது. அறநிலையத்துறை அதில் நேரடியாக ஈடுபடாமல் அந்தந்த கோயில்களின் பரம்பரை அறங்காவலர்களே அதை செய்யும் வகையில் அந்த திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசு நேரடியாகத் தலையிடும் எண்ணமில்லை.

கோயிலை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்ற முழக்கம் பற்றி..?

கோயிலைக் கொண்டுபோய் யாரிடம் கொடுப்பது? ஒரே கோயிலை நான் வைத்துக் கொள்கிறேன் என்று 30 பேர் வருவார்கள். யாரிடம் கொடுப்பீர்கள். அவர்களிடம் கொடுத்துவிட்டு அவர்களை யார் கண்காணிப்பது? அதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராத பேச்சு.

’கோரிக்கைகளை பதிவிடுங்கள்’ என்று ஒரு திட்டம் தொடங்கினீர்களே... அதற்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?

நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. இதுவரை 8 ஆயிரம் கோரிக்கைகள் அதில் பதிவிடப்பட்டன. அவற்றில் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டியது, சட்டரீதியாக பரிசீலித்து நிறைவேற்றப்பட வேண்டியது என்றெல்லாம் பிரித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

பாஜக முகங்களான இல.கணேசன், வானதி சீனிவாசன் போன்றவர்களெல்லாம் உங்களை பாராட்டினாலும் எச்.ராஜா, அண்ணாமலை போன்றவர்கள் உங்களை கடுமையாக விமர்சிக்கிறார்களே?

அவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எந்தத் திசையில் செல்லவேண்டும் என்று எங்களுக்கு முதல்வர் தெளிவாக உத்தரவிட்டிருக்கிறார். அந்தத் திசையில் போய்க் கொண்டிருக்கிறோம். அதனால் இவர்களைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. மக்களுக்கான நியாயமான பணி எதுவோ, அதைச் செய்து கொண்டிருப்போம். அதற்காக வாழ்த்துகளோ, வசைகளோ எது வந்தாலும் எங்கள் தலையில் ஏற்றிக்கொள்ளப் போவதில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in