தமிழக பாஜகவின் மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் வார்த்தைகளில் நெருப்பைத் தெளிப்பவர். திமுக அமைச்சர்களுக்கு எதிராக அண்ணாமலை ஊழல் புகார்களை அடுக்கிக் கொண்டிருக்க, “அதிகம் ஆடாதீர்கள் ஒட்ட நறுக்கி விடுவோம்” என்று அமைச்சர்களை நேரடியாகவே எச்சரித்தார் முருகானந்தம். அமைச்சர்களின் அலுவலக வாசலுக்கே சென்று ஆர்ப்பாட்டம் நடத்தும் இவர், பாஜக பிரமுகர்கள் மீது போலீஸ் கைவைத்தால் அதையும் கண்டிக்கிறார். மொத்தத்தில், திராவிடக் கட்சிகளின் பாணியில் தடாலடி அரசியல் நடத்தும் கருப்பு முருகானந்தத்திடம் காமதேனுவுக்காகப் பேசினோம்.
திமுகவின் ஓராண்டு ஆட்சி எப்படி இருக்கிறது?
மக்களைக் கேட்டாலே சொல்வார்களே... விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என மக்களை பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் பெருவாரியானவர்கள் திமுகவுக்குத் தான் வாக்களித்தார்கள். அவர்களும் தங்களது உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். யாருக்கும் கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை. மக்கள் அனைவரும் வெறுத்துப்போய் இருக்கின்றனர்.
தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி எப்படி இருக்கிறது?
தமிழகத்தில் பாஜக அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. கடந்த தேர்தல்களில் திமுகவின் பொய்யான குற்றச்சாட்டுகளால் தமிழகத்தில் பாஜகவுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. தற்போது பிரதமர் மோடியின் செயல்பாடுகள் மக்களை முழுமையாகச் சென்றடைந் திருக்கின்றன. பாஜகதான் இந்த நாட்டிற்கு தேவை என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருப்பவர்களும் அதிகளவில் பாஜகவில் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
2014 மக்களவைத் தேர்தலில் சிறு கட்சிகளுடன் கூட்டணி வைத்தபோதே பாஜக கூட்டணிக்கு இரண்டு எம்பி-க்கள் கிடைத்தார்கள். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு 4 எம்எல்ஏ-க்கள் கிடைத்திருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலிலும் கணிசமான இடங்களில் வென்றிருப்பதுடன் பாஜகவின் வாக்கு வங்கியும் உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் நாங்கள் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு இதைவிட வெறென்ன சாட்சி வேண்டும்? அதிலும் தலைவர் அண்ணாமலை வந்ததற்குப் பிறகு தமிழக பாஜகவுக்கு தனி மரியாதையே கிடைத்திருக்கிறது.
அப்படியென்றால்... தமிழக பாஜகவை அண்ணாமலைக்கு முன் அண்ணாமலைக்கு பின் என்று பிரிக்கலாமா?
அப்படியென்றில்லை... அவருக்கு முன்னால் தலைவராக இருந்த எல்லோருமே அவரவர் காலத்தில் எவ்வளவு தூரம் கட்சியை வளர்க்க முடியுமோ வளர்த்திருக்கிறார்கள். தற்போது அண்ணாமலை காலத்தில் தமிழக மக்கள் மனநிலையிலும் நல்ல மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் பாஜகவுக்கான மதிப்பும் வளர்ச்சியும் பன்மடங்கு கூடியிருக்கிறது.
பாஜக கூட்டணியை அதிமுக விரும்பாத பட்சத்தில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் பழைய உத்தியை மக்களவைத் தேர்தலிலும் பாஜக கையாளுமா?
அதை தேர்தல் நேரத்தில் உள்ள களநிலவரத்தைப் பொறுத்து எங்கள் தேசிய தலைமைதான் முடிவு செய்யும்.
தமிழக பாஜகவில் குற்றப் பின்னணி கொண்டவர்கள் அதிகம் சேர்க்கப்படுகிறார்களே?
எந்தக் கட்சியில்தான் குற்றப் பின்னணி கொண்டவர்கள் இல்லை... கிரிமினல்கள் இல்லை என்று சொல்லுங்கள் பார்க்கலாம். நல்லவர்களாகவே இருந்தாலும் ஆளும்கட்சியாக இருப்பவர்கள் ஏதாவது வழக்கைப் போட்டுவிடுகிறார்கள். ஐபிஎஸ் படித்துவிட்டு நேர்மையாக பணியாற்றிய அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டுவந்து தமிழக பாஜக தலைவர் பொறுப்பை ஏற்றிருக்கிறார். இதுபோல தலைமை வேறு எந்த கட்சியில் இருக்கிறது என்று சொல்லுங்கள். பிரதமர் மோடிஜி பலமுறை குஜராத் முதல்வராக இருந்திருக்கிறார். பாரதத்தின் பிரதமராக இரண்டாவது முறையாக இருக்கிறார். அவர் மீது ஏதாவது குற்றச்சாட்டுகளைச் சொல்ல முடியுமா?
மோடியை விடுங்கள்... அமித்ஷா மகன் போன்றவர்கள் மீது அப்படியான குற்றச்சாட்டுகள் இருக்கிறதே?
மகனை விடுங்கள்... அமித் ஷாவைப் பாருங்கள். அவர் ஒரு நல்ல நிர்வாகி; ராஜதந்திரி. அவரது மகன் மீது கிரிமினல் குற்றச்சாட்டு இருப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், கட்சியை வழிநடத்தும் தலைமை எப்படி இருக்கிறது என்பதைத்தான் பார்க்கவேண்டும். வேறு எந்தக் கட்சியிலும் இப்படிப்பட்ட தலைமை இல்லை என்பதை உறுதியாகச் சொல்வேன்.
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜகவின் தலையீடு இருப்பதாக சொல்லப்படுகிறதே..?
அதில் ஏன் பாஜக தலையிடப் போகிறது? இப்போதைக்கு அது எங்களுடைய கூட்டணி கட்சி அவ்வளவுதான். அந்தக் கட்சி வலுவாக இருந்தால் அது அந்தக் கட்சிக்கும் நல்லது; எங்கள் கட்சிக்கும் நல்லது என்றுதான் நாங்கள் கருதுகிறோம். மற்றபடி அவர்களின் உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடவில்லை; தலையிடவும் போவதில்லை.
மத்திய அரசு பல மாநிலங்களில் மாற்றுக் கட்சிகளின் ஆட்சியை அகற்றிவிட்டு குறுக்குவழியில் ஆட்சியைக் கைப்பற்றுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறதே..?
மகாராஷ்டிராவில் நடந்ததைக் கேட்கிறீர்கள். அதில் பாஜகவுடைய பங்கு என்ன இருக்கிறது? அவர்கள் ஆட்சி செய்தார்கள். அதிருப்தியில் அவர்களுக்குள் பிரிந்து தனியே வருகிறார்கள். எங்களிடம் ஆதரவு கேட்டார்கள்; தந்திருக்கிறோம். அவ்வளவுதான்.
திமுக எம்எல்ஏ-க்களை இழுத்து தமிழ்நாட்டிலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று ஒருமுறை சொன்னீர்களே... அது சாத்தியமா?
பாஜகவிலிருந்து ஆட்களை இழுத்தால் பதிலுக்கு நாங்களும் திமுகவிலிருந்து இழுப்போம் என்று சொன்னேன். ஆனால், நாங்களே இழுக்கவில்லையென்றாலும் மகாராஷ்டிராவில் நடந்ததுபோல் தமிழ்நாட்டிலும் நடக்க வாய்ப்பிருக்கிறது. திமுகவின் குடும்ப ஆட்சி நடக்கிறது. ஐம்பது வருடங்களாக உழைத்தவர்கள் எல்லாம் கட்சியில் இருந்து ஓரம் கட்டப்படுகிறார்கள். அவர்கள் போய் ஸ்டாலின் குடும்பத்தின ரிடம் நிற்க வேண்டியிருக்கிறது. இந்த செயல்பாடுகளால் வெறுத்துப்போனவர்கள் எங்களை நோக்கி வந்தால் மகராஷ்டிராவில் நடந்தது இங்கும் நடக்கும்.
திமுக ஆட்சியில் முதல்வரின் மருமகன் தலையீடு இருப்பதாக சொல்லப்படுகிறதே..?
எனக்குத் தெரிந்து தமிழகத்தை முதல்வர் ஸ்டாலின் ஆட்சி செய்யவில்லை. அவரது மருமகன் சபரீசன், மகன் உதயநிதி, மனைவி துர்கா ஆகியோர்தான் ஆட்சியை நடத்துவதாக யாரைக் கேட்டாலும் சொல்கிறார்கள். அதனால் தான் முதல்வர் எடுக்கும் சில முடிவுகள்கூட அவர்களிடம் போய் மாறிவிடுவதாகவும் சொல்கிறார்கள்.
மத்திய அரசுடன் திமுக இணக்கம் காட்டுவது போல் தெரிகிறதே..?
பிரதமரின் சென்னை வருகையின் போது திமுக உண்மையிலேயே நல்ல முறையில் நடந்துகொண்டது. அதற்கு எங்கள் தலைவரும்கூட பாராட்டு தெரிவித்திருக்கிறார். ஒரு பிரதமராகவும் ஒரு முதல்வராகவும் இருவருமே சரியாகச் செயல்பட்டார்கள். அதில் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை, அதைத்தாண்டி சொல்வதற்கும் ஒன்றுமில்லை. இரண்டு கட்சிகளும் இணக்கமாக இருக்கிறோம் என்பதெல்லாம் இதற்கான அர்த்தம் அல்ல.
விவசாயிகள் அதிகம் இருக்கும் டெல்டாவில் பாஜக குறிப்பிடத் தகுந்த வளர்ச்சியை எட்டவில்லையே?
நாகர்கோவில், கோயம்புத்தூர் போன்ற இடங்களில் ஏற்கெனவே பாஜகவுக்கு நல்ல அடித்தளம் இருந்தது. தற்போது அது இன்னும் வலுப்பெற்று அதிக வளர்ச்சியை அடைந்திருக்கிறது. டெல்டாவில் பாஜகவுக்கான வளர்ச்சி தற்போதுதான் தொடங்கியிருக்கிறது. நல்ல வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. திருவாரூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரண்ட கூட்டமே அதற்குச் சாட்சி.
டெல்டாவைச் சேர்ந்த நீங்கள் அங்கே பாஜகவை வளர்த்தெடுக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
சமீபத்தில் பிரதமர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது நான் டெல்டாவிற்கான மூன்று விஷயங்களை வலியுறுத்தி இருக்கிறேன். இது விவசாயத்தை நம்பி இருக்கிற பகுதி என்பதால் நெல், கரும்பு உள்ளிட்டவற்றிற்கு தகுந்த விலை, சேமிப்புக் கிடங்குகள், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலைகள் உள்ளிட்ட விவசாய மேம்பாட்டுக்கான திட்டங்களை அறிவிக்க வேண்டும். மீனவர்களுக்கான நலத்திட்டங்கள், அவர்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து திட்டம் தீட்டப்பட வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன்.
இங்கே கோயில்கள் நிறைய இருப்பதால் வெளிமாநிலங்களில் இருந்து அதிகம் பேர் வருகிறார்கள். அதனால் டெல்லியில் இருந்து கும்பகோணத்திற்கு ஒரு ரயில் இயக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இப்படி டெல்டா பகுதிக்கு என்ன தேவையோ அதை பிரதமர் மூலமாகச் செய்து கொடுத்து டெல்டாவின் வளர்ச்சிக்குக் காரணமாக இருப்போம். அதன்மூலம் கட்சியையும் வளர்ப்போம்.
அன்பில் மகேஷ் அலுவலகம் முற்றுகை, வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை முற்றுகையிடப் போவதாக எச்சரிக்கை என எதைத் தொட்டாலும் தீவிரத்தன்மையோடு இயங்குகிறீர்களே..?
எங்கெல்லாம் தவறுகள் நடக்கிறதோ, எங்கெல்லாம் ஊழல் குற்றச்சாட்டு வருகிறதோ அதையெதிர்த்துப் போராடுவது பாஜகவின் பாணி. அதுதான் என்னுடைய பாணியும். கரூரில், திருச்சியில், சென்னையில் என எங்கள் போராட்டம் ஊழலுக்கு எதிராகவும், தவறுகளுக்கு எதிராகவும் தவறாமல் நடக்கும்.
2026-ல் தமிழக பாஜகவின் இலக்கு..?
இப்போதைய இலக்கு 2024 மக்களவைத் தேர்தல்தான். அதில் அதிக இடங்களைப் பெற வேண்டும் என்பதுதான் பாஜகவுடைய இலக்கு. அதற்காகத்தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம். அதை வெற்றிகரமாக முடித்த பின்னர்தான் 2026 பற்றி யோசிக்க வேண்டும். தமிழகத்தில் 2026-ல் பாஜகவின் ஆட்சி என்ற இலக்குடன் நாங்கள் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.