`அண்ணாமலையை அச்சுறுத்த நினைத்தால் ஒட்டுமொத்தமாக திமுக அழிக்கப்படும்'‍- சர்ச்சையில் கருப்பு முருகானந்தம்
கருப்பு முருகானந்தம்

`அண்ணாமலையை அச்சுறுத்த நினைத்தால் ஒட்டுமொத்தமாக திமுக அழிக்கப்படும்'‍- சர்ச்சையில் கருப்பு முருகானந்தம்

"பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமைலையை அச்சுறுத்த நினைத்தால் தி.மு.க. ஒட்டுமொத்தமாக அழிக்கப்படும்" என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கூறியிருக்கிறார்.

தஞ்சை தெற்கு மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா தஞ்சையில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். "எந்த ஒரு அரசியல் கட்சியும் கோரிக்கை வைக்காத நிலையிலும், மக்கள் போராட்டம் நடத்தாத நிலையிலும், ஏழை, எளிய மக்களை பாதிக்காத வகையில், 2-வது முறையாக பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. கரோனா தொற்றின் போது உலகத்தில் அனைத்து நாடுகளும் பொருளாதாரத்தில் மிக பெரிய பின்னடைவை சந்தித்த போதும், இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக மாறி வருகிறது.

ஆனால், தமிழகத்தில் பொறுப்பேற்று ஓராண்டான நிலையில் தி.மு.க அரசு தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் தருவதாக சொன்னார்கள், நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறினார்கள். ஆனால் செய்யவில்லை. மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், அவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் சினிமா துறையை கைப்பற்றுவது, அரசு ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்வதற்கு, அரசு வேலை வாய்ப்பு வழங்குவதற்கு என லஞ்சம் வாங்கிக்கொண்டு வருகின்றனர். கடந்த ஆட்சியில் இல்லாத அளவிற்கு ஊழல் தலைவிரித்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது என அமைச்சர் கூறி விட்டார். ஆனால், தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக கூறினார்கள். அதனால்தான் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை 72 மணி நேரம் கெடு கொடுத்தார். பிரதமர் மோடி தமிழகம் வருவதால், அந்தக் கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அண்ணாமலை கூறியபடி நிச்சயம் கோட்டையை முற்றுகையிட்டு மிக பெரிய புரட்சியை ஏற்படுத்துவோம். அமைச்சர் ஒருவர் அண்ணாமலை நடமாட முடியாது என பேசியுள்ளார். இதற்கு மாநில தலைவர் அண்ணாமலை தி.மு.க.வில் இருப்பவர்கள் எல்லாம் ரவுடிகள்தான் என கூறியுள்ளார். அப்படிப்பட்ட ரவுடிகளை வைத்துள்ளதால்தான் அப்படி பேசுகிறார்கள்.

அண்ணாமலையை கொலை செய்து விடும் அளவிற்கு வார்த்தையை சுப.வீரபாண்டியன் பேசியுள்ளார். எங்கள் மாநில தலைவரை மிரட்டி, அச்சுறுத்தலாம் என நினைத்தால் தி.மு.க. ஓட்டுமொத்தமாக அழிக்கப்படும். எங்கள் மாநில தலைவரை மிரட்டிய அமைச்சர் பன்னீர்செல்வத்தின் சட்டமன்ற அலுவலகத்தின் முன்பு, அப்பகுதியில் உள்ள மக்கள் பிரச்சினை, அப்பகுதியில் நடந்துள்ள ஊழல்களை வைத்து மிக பெரிய போராட்டம் நடத்தப்படும்.

அவரிடம் ஆள் பலம் இருக்கிறது என்பதால் எங்களை நடமாட முடியாமல் செய்து விடலாம் என்று நினைக்கிறார். ஆனால் நாங்கள் அவரது சொந்த ஊரில் போராட்டம் நடத்துவோம், நடமாடுவோம், முடிந்தால் எங்களை அமைச்சர் பன்னீர்செல்வம் தடுத்து பார்க்கட்டும். மாநில தலைவர் மீது கை வைத்தால், தமிழகத்தில் அடுத்த என்ன நடக்கும் என சொல்ல விரும்பவில்லை. செய்து காட்டுவோம்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in