அமித்ஷா மகனை அமலாக்கத் துறை விசாரிக்குமா?

காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி காட்டம்
ஜோதிமணி
ஜோதிமணி

ராகுல் காந்தியை அமலாக்கத்துறை விசாரணை செய்த நாட்களில் டெல்லியில் கூடிய காங்கிரஸ் இரண்டாம் கட்ட தலைவர்கள் மத்திய அரசுக்கு கடுமையான நெருக்கடியை உருவாக்கினார்கள். அவர்களில் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணியும் ஒருவர். இரண்டாம் நாளில் பதேபூர் எல்லையில் சிறைவைக்கப்பட்டிருந்த ஜோதிமணியிடம் அலைபேசி வழியாக காமதேனுவுக்காக உரையாடினோம். இனி அவரது பேட்டி...

ராகுல் காந்தி அமலாக்கத்துறையில் ஆஜராவதற்கு உங்களை ஏன் சிறைவைத்தார்கள்?

பயம்தான் காரணம். ராகுல் காந்தியை விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள் என்றதுமே காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து குவிந்து கொண்டே இருக்கிறார்கள். அதைப் பார்த்து பயம் ஏற்பட்டுள்ளது. அதனால் கைது நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள்.

பண மோசடி நடந்திருப்பதாக சொல்லித்தானே அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்திருக்கிறது... அதில் ஆஜராகிவிட்டுப் போகவேண்டியதுதானே? இதற்கு ஏன் நீங்கள் போராட்டம் நடத்துகிறீர்கள்?

பண மோசடி தடுப்புச் சட்டப்படி (பி.எம்.எல்.ஏ. ஆக்ட்) பட்டியலிடப்பட்ட குற்றங்கள் இருந்தால் மட்டுமே ஒருவரை அழைத்து விசாரிக்க முடியும். அடுத்ததாக இந்த பட்டியலிடப்பட்ட குற்றங்கள் இருந்தாலும் அதை உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனிலோ அல்லது ஏதாவது ஒரு போலீஸ் பிரிவோ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அழைத்து விசாரிக்க முடியும். இப்போது நாங்கள் அவற்றைத்தான் கேட்கிறோம்.

பட்டியலிடப்பட்ட குற்றம் என்ன? அது எந்த அமைப்பின் மூலம் வழக்காக பதிவு செய்யப்பட்டிருக்கிறது? அதைச் சொல்ல வேண்டியது தானே? அதைச் சொல்லாமல் விசாரணைக்கு அழைத்திருப்பதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்பதற்காகத்தான் நாங்கள் போராடுகிறோம்.

எந்தக் தவறும் செய்யவில்லை என்றால் எந்த அடிப்படையில் சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடர்ந்தார்? அந்த வழக்கில் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்?

ஒருவர் வழக்கு தொடர்ந்தால் அதில் ஆதாரம் இருக்கிறதோ, இல்லையோ நீதிமன்றத்தில் ஆஜராகித்தான் ஆகவேண்டும். அப்படித்தான் ஆஜரானார்கள். ஆனால், அந்த வழக்கு அதோடு நின்றுவிட்டது. அமலாக்கத்துறைக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. ஒருவர் மீது யார் வேண்டுமானாலும் புகார் கொடுத்தால் அவர்களை அழைத்து விசாரித்துவிடுவார்களா?

நான் மோடி மீது ஒரு புகாரைக் கொடுத்தால் அமலாக்கத்துறை மோடியை அழைத்து விசாரிக்குமா? அமித்ஷா மகனுடைய சொத்து மதிப்பு 16 ஆயிரம் மடங்கு உயர்ந்திருக்கிறது. அதுவும் குறிப்பாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கை காலகட்டத்தில் உயர்ந்திருக்கிறது என்பதை நான் புகார் கொடுத்தால் நாளைக்கு மோடி அரசாங்கம் அவரை அழைத்து விசாரிக்குமா?

அரசியல் ரீதியான ஒரு வழக்கை காங்கிரசும் அரசியல் ரீதியாகத்தான் எதிர்கொள்ளும். எங்கள் தலைவர் சட்டத்தை மதிக்கக் கூடியவர். அதனால் தான் தனது தாய் மருத்துவமனையில் இருக்கும் சூழ்நிலையில்கூட அமலாக்கத்துறை முன் ஆஜாராகியிருக்கிறார். ஆனால், அவரை 10 மணி நேரம் வைத்திருந்து விசாரணை நடத்துகிறார்கள். இதையெல்லாம் நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமா?

ராகுல் காந்தி மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது?

ராகுல் காந்தி மட்டுமே ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு எதிரான ஒரு ஒற்றைக் குரலாக தைரியமாக களத்தில் இருக்கிறார். அதனால் அவரைக் கண்டு அவர்களுக்கு பயம். அதனால் அவர் மீது இப்படி நடவடிக்கையை துவங்கியிருக்கிறார்கள். மக்களுக்காக போராடுகிற, மக்களுடன் நிற்கிற ஒரு தலைவனை பணிய வைப்பதற்காக, பயமுறுத்துவதற்காக இப்படிச் செய்கிறார்கள். அது நடக்காது என்பதை போராட்டத்தின் மூலம் புரிய வைத்திருக்கிறோம்.

நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை யங் இந்தியாவுக்கு மாற்றப்பட்டது ஏன் என்ற சுவாமியின் குற்றச்சாட்டுக்குப் பதில்?

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நேருவால் ஆரம்பிக்கப்பட்டது. சொரூபராணியின் நகைகளை அடகு வைத்தும், விற்றும் சுதந்திரத்துக்காக போராடுவதற்காக அந்த பத்திரிகை தொடங்கப்பட்டது. அந்த பத்திரிகைக்கு பயந்துகொண்டு வெள்ளையர் அரசாங்கம் அந்த பத்திரிகையைத் தடை செய்தது. காந்தியே அதை துரதிர்ஷ்டவசமானது என்று சொல்லியிருக்கிறார்.

அதற்குப் பிறகு திரும்ப அந்த பத்திரிகை தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதில் நஷ்டம் அடைகிறது. அதில் வேலை செய்யும் ஊழியர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள் என்பதால் அதை அப்படியே மூடிவிட்டுச் சென்றுவிட காங்கிரஸ் விரும்பவில்லை. அதன் ஊழியர்களைக் காப்பாற்றவும், பத்திரிகையைத் தொடர்ந்து நடத்தவும் காங்கிரஸ் கட்சி தனது பணத்தைக் கொடுக்கிறது. அதிலிருந்து ஊழியர்களுக்கு சம்பள பாக்கி, அவர்களுடைய ஓய்வுகால பண பலன்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டன. இதையெல்லாம் யாருக்கு கணக்குக்காட்ட வேண்டுமோ அவர்களுக்கு முறைப்படி காங்கிரஸ் காட்டியிருக்கிறது.

இது சம்பந்தமாக சுப்பிரமணியன் சுவாமி தேர்தல் ஆணையத்திற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு தேர்தல் ஆணையம், ஒரு அரசியல் கட்சி இப்படி பணம் கொடுக்கக்கூடாது என்று கட்டுப்படுத்த முடியாது என்று அவருக்கு பதில் அளித்து இருக்கிறது. அப்படி இருக்கும்போது இதில் என்ன குற்றம் இருக்கிறது? உங்கள் கட்சியில் இருந்தா காசு எடுத்துக் கொடுத்தார்கள்? இல்லை உங்கள் அரசாங்கம் போல அம்பானிக்கும் அதானிக்கும் பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் விற்று அந்தக் காசை எடுத்துக் கொடுத்தார்களா?

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் 5 ஆயிரம் சுதந்திர போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தார்கள். அவர்களையெல்லாம் நீக்கிவிட்டு ஒரு குடும்பம் அந்த பத்திரிகையை கைப்பற்றிவிட்டது என்பதுதானே பிரதான குற்றச்சாட்டு?

ஐயாயிரம் பேர் இருந்தாலும் அதில் ஜவஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல் உட்பட ஐந்து பேர் தான் பிரதானமாக இருந்தார்கள். அப்படியிருந்தாலும் முதலீடு செய்தவர் யார், நேரு தானே? அதுவும் சொரூபராணியினுடைய நகைகளை அடகு வைத்துத்தானே முதலீடு செய்தார். அது எல்லோருக்கும் தெரியுமே. மொத்தத்தில அது நேரு வீட்டுச் சொத்து.

அதனால்தான் அதை சோனியாவும், ராகுலும் 76 சதவீத பங்குகளை வைத்திருக்கும் யங் இந்தியாவுக்கு மாற்றினோம் என்கிறீர்களா?

யங் இந்தியாவில் இருந்து ஒரு பைசா கூட யாரும் எடுத்துச் செல்ல முடியாது. அது முறைப்படி பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனம். காங்கிரஸ் கட்சி நேரடியாகச் செய்ய முடியாது என்பதால் இப்படிச் செய்திருக்கிறார்கள். அதுவும் சட்டரீதியாகச் செய்யப்பட்டிருக்கிறது. சட்ட விரோதமாகவோ ரகசியமாகவோ எதையும் செய்யவில்லை.

இவை அனைத்துமே மோடி அரசாங்கத்துக்குத் தெரியும். ஆனாலும் இப்போது தேர்தல் வரப்போகிறது என்பதால் அரசியல் பழிவாங்கும் விதமாக இதைக் கையில் எடுத்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைவர்களையும் இந்த வழக்கைக் காட்டி மிரட்டலாம் என்று நினைக்கிறார்கள். அது நடக்காது. காங்கிரஸ் கட்சி வெள்ளையர்களின் துப்பாக்கிக்கு மார்பைக் காட்டிய கட்சி என்பதை இவர்கள் மறந்துவிட வேண்டாம்.

கட்சிக்கு நிலையான தலைவர் தேவை என்பதை இந்தத் தருணத்தில் உணர்கிறீர்களா?

சோனியா நிலையான தலைவர் தானே. அவரை விட வேறு யார் இருக்க முடியும். பாஜகவைப்போல ஆர்எஸ்எஸ்சில் இருந்து எங்கள் கட்சிக்கு தலைவரை நியமிக்க முடியாதில்லையா. காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இருக்கிறது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, தலைவராக இருந்த ராகுல் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த தேர்தல் வருவதற்குள் திரும்பவும் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடுவார். அதற்கான பணிகள் தான் நாடு முழுவதும் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன.

காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இருப்பதாக சொல்கிறீர்கள்... ஆனால், கபில்சிபல் உள்ளிட்ட சீனியர்களும் செல்வாக்கானவர்களும் கட்சியைவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார்களே?

மேற்கு வங்கத்தில் பாஜகவிலிருந்து எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட பலர் வெளியேறுகிறார்கள். ராஜஸ்தானில் ஒரு பாஜக எம்எல்ஏ மாற்றி காங்கிரசுக்கு வாக்களித்தார். அதையெல்லாம் பெரிதாகச் சொல்ல மறுக்கிறீர்கள். காங்கிரசிலிருந்து வெளியேறுவதை மட்டும் பெரிதுபடுத்திக் கேட்கிறீர்கள்.

ஏதோ ஒரே ஒரு பாஜக எம்எல்ஏ காங்கிரசுக்கு மாற்றி வாக்களித்ததைச் சொல்கிறீர்கள்... நான் கேட்பது மக்கள் செல்வாக்குப் பெற்ற தலைவர்கள் காங்கிரசிலிருந்து வெளியேறுவதைப் பற்றி?

ஒரு கட்சியில் இருந்து சிலர் வெளியேறிச்செல்வதும் இன்னொரு கட்சியில் சேர்வதும் இந்திய அரசியலில் ஒரு விரும்பத்தகாத போக்கு. அப்படிப் பார்த்தால் எல்லா கட்சிகளிலும் தான் தலைவர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். பாஜக அசுர பலத்தோடு ஆட்சியில் இருக்கிற ஒரு கட்சி. அந்த கட்சியில் இருந்தே எம்பி-க்கள் எம்எல்ஏ-க்கள் கூண்டோடு விலகி திரிணமூல் காங்கிரசில் சேருகிறார்கள். எனவே, காங்கிரஸ் கட்சியிலிருந்து மட்டுமே தலைவர்கள் விலகுவதாகச் சொல்லக் கூடாது.

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த என்ன மாதிரியான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன?

கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான வேலைகள் கடந்த ஆறு ஏழு வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்பெல்லாம் காங்கிரஸ் கட்சியில் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இப்போது அப்படியில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் எங்களைப் போன்று அடுத்த கட்ட தலைவர்கள் பலர் இருக்கிறோம். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக மிகப் பெரிய யாத்திரையை தலைவர் ராகுல் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி நாளில் தொடங்கி இந்தியா முழுவதும் செல்ல இருக்கிறார். அந்த பயத்தில்தான் அவருக்கு எதிராக அமலாக்கத்துறையை ஏவி இருக்கிறது மோடி அரசு. நேரு குடும்பம் தெருவில் இறங்கி நடந்தால் என்ன நடக்கும் என்பது மோடி அரசுக்குத் தெரியும். அதற்காகத்தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறது.

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு மாற்று அணியை உருவாக்க மாநில கட்சிகளான திரிணமூல் காங்கிரஸ், டிஆர்எஸ் கட்சிகள் எடுக்கும் முயற்சிகளைக்கூட காங்கிரஸ் எடுக்கவில்லையே?

ஏன், காங்கிரஸும்தான் அழைப்பு விடுத்திருக்கிறது. அனைவரும் இணைந்து தேர்தலைச் சந்திப்போம் என்று அன்னை சோனியா காந்தியும் அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

அழைப்பு மட்டும் விடுத்தால் போதுமா? அதற்கான தொடர் நடவடிக்கைகள் எதுவுமில்லையே?

ஒரு பிரதான எதிர்க்கட்சியின் தலைவர், இந்தியாவை ஆண்ட கட்சியின் தலைவர் அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார். அதற்குப் பிறகு என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். தற்போது அவருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மருத்துவமனையில் இருக்கிறார். இந்த நிலையில் தற்போது என்ன செய்ய முடியும்?

பாஜகவுக்கு எதிரான ஒரு வலுவான கூட்டணியை காங்கிரசால் உருவாக்க முடியும் என்று நம்புகிறீர்களா?

தற்போது காங்கிரஸ் தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி இருக்கிறது. இதில் மேலும் பல கட்சிகளை இணைக்க வேண்டும். தேர்தலுக்கு இன்னும் இரண்டாண்டு காலம் அவகாசம் இருக்கிறது என்பதால் அதற்கான வேலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நிச்சயம் வலுவான கூட்டணியை காங்கிரஸ் உருவாக்கும். காங்கிரஸ் இல்லாத கூட்டணியால் பாஜகவை வீழ்த்த முடியாது என்பது அனைவருக்குமே தெரியும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in