எச்.ராஜா திராவிட இயக்கங்களைச் சாடுவதை ஏற்கமுடியாது!

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சுளீர் பேட்டி
செல்லூர் கே.ராஜூ
செல்லூர் கே.ராஜூ படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

அதிரடிப் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்த அதிமுக அமைச்சர்கள் பலர், ஆட்சி மாறியதும் ஆழ்ந்த அமைதிக்குச் சென்றுவிட்டார்கள். ஆனால், செல்லூர் ராஜூவோ ஆட்சியர் அலுவலம் முன் ஆர்ப்பாட்டம், போலீஸ் கமிஷனரிடம் புகார், மாநகராட்சி கமிஷனரிடம் மனு என்று ஒரு வட்டச் செயலாளர் அளவுக்கு இறங்கி வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். 'காமதேனு' இதழுக்காக அவருடன் ஒரு நேர்காணல்.

வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் கோயில்களைத் திறக்க வேண்டும் என்று பாஜக போராட்டம் நடத்தியிருக்கிறது. கூட்டணிக் கட்சியான அதிமுக அதில் கலந்துகொள்ளவில்லையே ஏன்?

மக்களுக்கு எந்தவிதமான தொற்றும் ஏற்படக்கூடாது என்று சில விஷயங்களை அரசு சொல்கிறபோது, பொறுப்பான எதிர்க்கட்சியாக அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். 3-வது அலை வரக்கூடும் என்று நமது ஆட்சிக்காலத்திலே அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு சொன்னதன் அடிப்படையில் சில தடைகளைப் போட்டிருக்கிறார்கள். எனவே, எங்களைப் பொறுத்தவரையில் மக்களுக்கு எந்த வகையிலும் துன்பம் தரக்கூடாது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. பாஜக அதன் கொள்கைக்காகப் போராடுகிறது என்றால், நாங்களும் ஒன்றாகச் சேர்ந்து போய் போராட வேண்டும் என்றில்லை. தேர்தலின்போது கூட்டணி வைத்திருந்தாலும், நாங்கள் மதச்சார்பற்ற அணியைச் சேர்ந்தவர்கள்.

எச்.ராஜா, ”அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பல கோயில்கள் அழிந்தே போய்விட்டன. கிட்டத்தட்ட 10 லட்சம் கோடி மதிப்புள்ள கோயில் சொத்துகளை கடந்த 55 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் கொள்ளையடித்துவிட்டார்கள்” என்கிறாரே, ஏற்கிறீர்களா?

நிச்சயமாக அதை நான் மறுக்கிறேன். எச்.ராஜா எந்த அடிப்படையில் 55 ஆண்டுகள் என்று சொன்னார் என்று தெரியவில்லை. ஏனென்றால், தமிழகத்தை அதிகமாக ஆட்சி செய்தது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான். இந்துக் கோயில்கள் எல்லாம் பராமரிக்கப்பட்டு, புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டு, அடிப்படை வசதிகளையும் அன்னதானத் திட்டத்தையும் கொண்டுவந்தது நாங்கள். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது திராவிட இயக்கங்கள் ஆண்ட தமிழகத்தில்தான் கோயில்கள் மேம்பாடு, அடிப்படை வசதிகள், மக்களின் வாழ்க்கைத்தரம் எல்லாம் உயர்ந்திருக்கின்றன. இதற்குக் காரணம், திராவிட இயக்கங்கள்தான். பொத்தாம் பொதுவாக திராவிட இயக்கங்களை எச்.ராஜா சாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதிமுகவில் உள்ள தீவிர ஆன்மிகவாதிகள் பாஜக பக்கமும், முற்போக்கு பேசுபவர்கள் திமுக பக்கமும் நகர்வதாகத் தெரிகிறதே. அதைத் தடுக்க அதிமுக என்ன செய்யப் போகிறது?

அந்த மாதிரி அதிமுகவில் யாரும் கொள்கைப்பிடிப்பு இல்லாமல் மற்ற கட்சிக்குப் போகிறவர்கள் கிடையாது. எதிர்க்கட்சிகளில் இருந்து ஆளுங்கட்சியை நோக்கிப் போகிறவர்கள் எல்லாக் கட்சியிலும் இருப்பார்கள். அப்படிச் சில பேர் போகிறார்கள் என்பதற்காக கொள்கையுள்ள அண்ணா திமுக சிதைந்துபோகாது. புரட்சித் தலைவரால் தொடங்கப்பட்டு, புரட்சித் தலைவியால் வளர்த்தெடுக்கப்பட்ட இந்த இயக்கத்தில் இன்றைக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் கொள்கைப் பிடிப்போடு இருக்கிறார்கள். திராவிட இயக்கங்களில் வளர்ந்தவர்கள், இன்னொரு கட்சிக்குப் போவதும், அங்கே போய் நீடிப்பதும் சாத்தியமில்லை.

செல்லூர் கே.ராஜூ
செல்லூர் கே.ராஜூ படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

”கொடுத்த 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறாரே?

முதல்வர் சொன்ன கருத்து சரியா, தவறா என்ற கேள்வியை ஜனநாயகத்தை நிலைநாட்டக்கூடிய பத்திரிகையாளர்களிடமே விட்டுவிடுகிறேன். நீங்களே சொல்லுங்கள், அவர்கள் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறார்களா? (சிரிக்கிறார்). எங்களைப் பொறுத்தவரையில், கொடுத்த வாக்குறுதியில் ஒரு சிலவற்றைத் தவிர மற்றவற்றை எல்லாம் அவர்கள் நிறைவேற்றியதாகத் தெரியவில்லை. மக்களை ஏமாற்றுகிறார்கள், அவ்வளவுதான்!

”ரவுடிகளை ஒழிப்பதில் ஜெயலலிதா போலவே ஸ்டாலினும் சிறப்பாகச் செயல்படுகிறார்” என்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னீர்களே, எந்த அடிப்படையில் அதைச் சொன்னீர்கள்?

அந்த வார்த்தையை நான் எங்கேயும் சொல்லவே இல்லை. அப்படிச் செய்தி போட்டதற்காகத்தான் ரொம்பப் பொறுமையான நானே, பத்திரிகையாளர்களிடம் கோபப்பட வேண்டிய நிலை வந்தது. உண்மையில், ”நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்தபோது இதேபோன்ற மழைக்காலத்தில் மதுரை மாநகராட்சியில் சாலைகளைச் சீரமைப்பதற்காக அம்மாவைச் சந்தித்து 500 கோடி ரூபாய் கேட்டோம். கூடவே, ’ரவுடிகள் தொல்லை அதிகமாக இருக்குதம்மா’ என்றும் சொன்னோம். அம்மா மதுரைக்கு 250 கோடி ரூபாய் கொடுத்ததுடன், ரவுடிகளையும் மொத்தமாகப் பிடித்து உள்ளே போட்டார். இப்ப கூட ரவுடிகளைப் பிடிக்கிறார் ஸ்டாலின்” என்றுதான் அன்றைக்கு நான் சொன்னேன்.

ஆனால், நான் ஸ்டாலினைப் புகழ்ந்தது போல ஊடகங்களில் செய்தி வந்துவிட்டது. நான் கட்சியில் இதுவரை சம்பாதித்திருப்பதே எம்ஜிஆரின் உண்மைத் தொண்டன் என்ற நல்ல பெயரைத்தான். எனக்கும் கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டதால்தான், அடுத்த சந்திப்பில் பத்திரிகையாளர்களிடம் கொஞ்சம் கோபப்பட்டேன். இனிமேல் நிச்சயமாக அப்படிச் செயல்பட மாட்டேன்.

இன்றைக்குத் தமிழக அமைச்சர்களில் சிறப்பாகச் செயல்படுபவர் யார் என்று நினைக்கிறீர்கள்?

முதலமைச்சர் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று நினைப்பது மாதிரி தெரிகிறது. அவர் சிறப்பாகச் செயல்படுகிறார் என்று உங்களைப் போன்ற ஊடகங்கள் வாயிலாகத்தான் எங்களுக்குத் தெரிகிறது. அறநிலையத் துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், போக்குவரத்துத் துறை அமைச்சர், தொழில்துறை அமைச்சர் போன்றோர் வேகமாக செயல்படுவது போல் தெரிகிறது. நான்கைந்து மாதங்கள்தானே ஆகிறது! போகப்போகத்தான் அமைச்சர்களின் செயல்பாடுகள் பற்றி சொல்ல முடியும்.

ஆளுங்கட்சியாக இருந்தபோது ஒற்றுமையாக இருந்த அதிமுகவில், இப்போதெல்லாம் நிறைய சலசலப்பு ஏற்படுகிறதே... கட்சியில் நிலவும் போட்டி பொறாமை பற்றி சீனியரான உங்கள் கருத்து என்ன?


ஆளுங்கட்சியாக இருக்கும்போதுகூட கருத்து மாறுபாடுகள் இருக்கலாம். எதிர்க்கட்சியாக இருக்கும்போது கருத்து வேறுபாடுகளுக்கு வேலையே இல்லை. எல்லோரும் ஒன்றுபட்டு உழைக்கிறோம். இன்னும் நூறாண்டுகள் இந்த இயக்கம் தமிழகத்தை ஆள வேண்டும் என்று அம்மா சொன்னார்கள் இல்லையா? அதை நோக்கித்தான் நாங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

மதுரையில் நீண்ட காலமாக அரசியல் செய்பவர் என்கிற முறையில் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜனையும், அவரது மகன் பழனிவேல் தியாகராஜனையும் ஒப்பிடலாமா?

பி.டி.ஆர். பண்பாளர் என்று போற்றப்பட்டதுடன், மீனாட்சி மைந்தனாகவே இருந்தவர். அவர் திராவிட இயக்கத்தில் இருந்தாலும் துணிந்து கோயில்களுக்குப் போனதுடன், திருப்பணிகளிலும் ஆர்வம் காட்டியவர். அவரிடம் எதிலும் ஒரு நிதானம் இருக்கும். பழனிவேல் தியாகராஜனிடம் கொஞ்சமும் நிதானம் இல்லை என்று தெரிகிறது. ஒருவேளை அவர் வளர்ந்த சூழ்நிலை, கலாச்சாரம், வெளிநாட்டு வாழ்க்கை காரணமாக அப்படி இருக்கிறாரா என்று தெரியவில்லை. போகப்போக நல்ல பண்புகளை வளர்த்துக்கொள்வார் என்று நம்புகிறேன். முதல்வரும், மூத்த அமைச்சர்களும் அவரைப் பண்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன்.

கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும், மாவட்டங்களில் செயல்படாத மாவட்டச் செயலாளர்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் குறித்து உங்கள் கருத்து என்ன?


நிர்வாகிகள் மாற்றம் ஒரு இயக்கத்துக்கு புத்தெழுச்சியைக் கொடுக்கும். நானே பதவி வாங்கிவிட்டு சரியாக வேலை பார்க்கவில்லை என்றால், நான் நீண்ட நாட்களாக இயக்கத்தில் இருக்கிறேன் என்று காரணம் சொல்வதெல்லாம் சரிப்பட்டு வராது. நான் என்னுடைய பணியை, கட்சிக்கான வேலையை, குறிப்பாக, எதிர்க்கட்சியாக இருக்கும்போது சரியாகச் செய்யவில்லை என்றால், என்னை மாற்றிவிட்டு இன்னொருவரைப் போடுகிறார்கள் என்றால் அந்த மாற்றம் வரவேற்கத்தக்கதுதான். அதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. ஆனால், இப்போது எல்லோரும் ஒன்றுபட்டுத்தான் எங்கள் இயக்கத்துக்கு உழைத்துக்கொண்டிருக்கிறோம். கருத்து வேறுபாடு என்பது எல்லாக் கட்சிகளிலும் உண்டு. கட்சிக்கு ஒரு ஆபத்து என்றால், எல்லோரும் ஒன்றாகிவிடுவார்கள்.

செல்லூர் ராஜூ நகைச்சுவை உணர்வு கொண்டவர், அறிவியல் பார்வை கொண்டவர். இன்றைய அமைச்சர்களில் உங்களுடன் ஒப்பிடும் தகுதிபெற்றவர் யார்?


அப்படின்னா செந்தில் பாலாஜிதான் (கை தட்டிச் சிரிக்கிறார்)! அதிகாரிங்க சொல்லி நான் போய் வைகை அணையில தெர்மோகோலைப் போட்டு, எல்லோரும் என்னை ‘தெர்மோகோல் ராஜூ’ன்னு சொன்னது மாதிரி, அவரு அணில் ஏறி விளையாண்டதாலதான் கரன்ட் கட் ஆச்சுன்னு சொன்னாரு இல்லையா? அதனால திமுக அமைச்சரவையில என்னையக் காட்டிலும் அறிவாளி செந்தில் பாலாஜிதான்னு நான் நினைக்கிறேன்.

அமைச்சராக இருந்தபோது அதிரடியாக, பரபரப்பாகப் பேசிய அதிமுக அமைச்சர்கள் இப்போது இருக்கிற இடம் தெரியாமல் அமைதியாக இருக்கிறார்களே?


என்ன காரணத்தினால் அவர்கள் அப்படியிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. இப்படிப் பல பேரைப் பார்த்திருக்கிறது அண்ணா திமுக. பலர் இந்த இயக்கத்திலே பதவியை அனுபவித்துவிட்டு, உடனடியாக அடுத்த கட்சிக்குப் போகிற காட்சியை எல்லாம் பார்த்திருக்கிறோம். சில பேர் எதிர்க்கட்சியானதும் அமைதியாக இருந்துவிட்டு, மறுபடியும் ஆளுங்கட்சியாகிறபோது ஆக்ரோஷமாக வருவார்கள்.

இந்தத் தேர்தலில் வியூகம் சரியாக அமைக்காததால்தான் அதிமுக தோல்வியடைந்தது என்று ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

கழகத்தின் ஒருங்கிணைப்பாளரே இந்த வார்த்தையைச் சொல்கிறார் என்றால், அதில் எதுவும் இல்லாமல் இருக்காது என்றுதான் அர்த்தம்.

நீங்கள் 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்தவர். ஆனால், இப்போது சட்டப்பேரவையில், “என் தொகுதிக்கு அரசு கல்லூரி வேண்டும்” என்று நீங்கள் கோரிக்கை விடுப்பதும், போலீஸ் கமிஷனரைச் சந்தித்து மதுரையில் போக்குவரத்து நெருக்கடி அதிகமிருக்கிறது என்று மனு கொடுப்பதும் விமர்சிக்கப்படுகிறதே?


நான் அமைச்சராக இருந்தபோது என்னுடைய தொகுதிக்காக ஏற்கெனவே நிறைய கோரிக்கைகளை வைத்திருக்கிறேன். அமைச்சராக இருக்கும்போது சட்டமன்றத்தில் கேள்வி கேட்க முடியாது. சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களிடம் எழுத்துபூர்வமாகத்தான் கேட்க முடியும். அன்றைக்கு அவர்கள் செய்யவில்லை. எனவே இன்றைக்கு எதிர்க்கட்சியாக இருப்பதால் கேட்கிறேன்.

கட்சியினருடன் சென்று ஆட்சியரிடம் மனு கொடுக்கிறார் செல்லூர் கே.ராஜூ
கட்சியினருடன் சென்று ஆட்சியரிடம் மனு கொடுக்கிறார் செல்லூர் கே.ராஜூபடம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in