கூட்டணி தர்மத்திற்காக அடக்கி வாசிக்கிறோமா?

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பதில்
இரா.முத்தரசன்
இரா.முத்தரசன்

பொருளாதரத்தில் முற்பட்ட பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றிருக்கும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோ மிகத்தீவிரமாக எதிர்க்கிறது. இப்படியான சூழலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனிடம் காமதேனு இணையதளத்திற்காகப் பேசினோம்.

இட ஒதுக்கீட்டின் அளவுகோல் தான் பிரச்சினையா... ஏன் 10 சதவீத இட ஒதுக்கீட்டை சிபிஐ எதிர்க்கிறது?

முன்னேறிய பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்ததே தவறானது. அதிலும் அதில் வைத்திருக்கும் வரம்புகள் மிக மிகத் தவறானது. ஆண்டுக்கு 8 லட்சம் வருமானம், ஐந்து ஏக்கர் நிலம், ஆயிரம் சதுர அடிவரை வீடு உள்ள எந்த ஏழையும் இந்தியாவில் கிடையாது. இது உள் நோக்கத்துடன் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்னவென்றால், எல்லா சாதியையும் கணக்கெடுங்கள். எண்ணிக்கையின் அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கொண்டுவாருங்கள். அதற்கு மாறாக, மிகக்குறைவான எண்ணிக்கையில் உள்ள சமூகங்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்றால் அது இட ஒதுக்கீட்டின் நோக்கத்தையே சிதைத்துவிடும்.

மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தை நம்பியிருக்கும் மக்கள் இன்றும் இருக்கிறார்கள். தமிழகத்தில் மாதமே 250 ரூபாய் ஊதியம் மட்டுமே வாங்கிக்கொண்டு தூய்மைப்பணியாளராக இருக்கும் ஊழியர்களும் இருக்கிறார்கள். இதையெல்லாம் பரிசீலனையே செய்யாமல் 10 சதவீதத்தை வாரிக் கொடுப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது.

மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் 10 சதவீத இடஒதுக்கீட்டை வரவேற்றுள்ளன. இதனால் திமுக கூட்டணிக்குள்ளேயே மாறுபட்ட கருத்துகள் உருவாகியுள்ளதே?

கூட்டணியையும், இதையும் ஒப்பிட்டுப் பேசவேண்டிய தேவை இல்லை. எல்லாப் பிரச்சினையிலும் அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலைத்தான் பேசவேண்டும் என எதிர்பார்க்க முடியாது. காங்கிரஸ், சிபிஎம் இதில் மாறுபட்ட கருத்தைச் சொல்கிறார்கள். அதனாலேயே இது கூட்டணிக்கு பங்கம் எனச் சொல்லமுடியாது. அது அவரவரின் நிலைப்பாடு. அனைத்து பிரச்சினைகளிலும் ஒரே குரலை எழுப்பவும் முடியாது. எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மதச்சார்பற்ற அணி, மக்கள் நலனில் அக்கறையுள்ள அணி என்பதுதான் எங்களை ஒரே நேர்கோட்டில் பயணிக்கவைக்கிறது.

ஆளுநர் - முதல்வர் மோதல் தமிழகம், கேரளம் என பாஜக ஆளாத மாநிலங்களில் அதிகமாகத் தெரிகிறதே?

நாடு விடுதலைப் பெற்ற பின்பு, நாட்டின் தலைவர் குடியரசுத் தலைவர். மாநிலங்களுக்கான தலைவர் ஆளுநர் என்றானது. அப்போது ஆளுநர்கள் கண்ணியத்துடனும், கெளரவத்துடனும் செயல்பட்டனர். பொறுப்பை உணர்ந்தும் செயல்பட்டனர். ஆனால் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்பு, பாஜக ஆட்சிக்கு வராத மாநிலங்களில் அம்மாநில அரசுகளுக்கு ஆளுநர்களை வைத்து இடையூறு செய்யும்போக்கு அதிகரித்துள்ளது.

மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமே இருக்கிறது. அதற்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். ஆனால், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் எல்லாம் ஆளுநர் மூலம் ஒரு போட்டி அரசாங்கத்தை செய்யும்போக்கை ஒன்றிய அரசு கையாள்கிறது. இது ஜனநாயக விரோதமானது. மக்கள் அளித்த தீர்ப்புக்கும் எதிரானது. இதை ஆளுநர் - முதல்வர் மோதல் என சுருக்கிக்கொள்ளக் கூடாது. இது மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது இருக்கும் நம்பிக்கையைக் குலைத்துவிடும்.

உலகம் முழுவதுமே இரண்டு பாதைகள் தான் இருக்கிறது. ஒன்று, ஜனநாயகப் பாதை. மற்றொன்று, ஆயுதம் தாங்கிய பாதை. நம் மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். அதுதான் நம் நாட்டின் ஆணிவேர். அது மேலும் மேலும் மெருகூட்டப்பட வேண்டும். அதுதான் நாட்டிற்கும், நாட்டு வளர்ச்சிக்கும் நல்லது. ஒன்றிய அரசு ஆளுநர் தொடங்கி பல விஷயங்களிலும் செய்யும் செயல் மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையைச் சிதைக்கிறது.

மக்களைப் பாதிக்கும் சிறு சிறு பிரச்சினைகளுக்குக்கூட இடதுசாரிகள் போராடுவார்கள். ஆனால் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு இதற்கெல்லாம் இடதுசாரிகள் போராடவில்லையே?

இதுதொடர்பாக அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறோம். போராடக் கூடாது என்றெல்லாம் ஒன்றும் இல்லை. போராட்டங்கள் வழக்கம்போல் நடக்கும். வேறு சில பிரச்சினைகளும் இருந்ததால் அதையும் கவனித்துக்கொண்டு இருந்தோம்.

ஒருவேளை, கூட்டணி தர்மத்திற்காக அடக்கி வாசிக்கிறீர்களா..?

கூட்டணி தர்மத்தை காப்பது என்பது அனைத்துக் கட்சிகளுக்குமானது. அந்தப் பொறுப்பு திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கும் உள்ளது. எங்களுக்கானது மட்டும் இல்லை. கூட்டணி தர்மத்திற்காக மக்கள் பிரச்சினைகளில் தலையிடக் கூடாது என யாரும் எங்களிடம் சொல்லவில்லை. அப்படி சொல்லவும் முடியாது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினே கம்யூனிஸ்ட் கட்சிகள் பற்றிச் சொல்லும்போது, “நாங்கள் நல்லது செய்தால் வரவேற்கிறார்கள். பிரச்சினை இருந்தால் விமர்சிக்கிறார்கள். இயக்கம் நடத்துகிறார்கள்’’ என்று தான் சொன்னார். கூட்டணி தர்மத்திற்கும், போராட்டத்திற்கும் தொடர்பில்லை. மக்கள் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து போராடுவோம்.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் கூடுதல் இடங்களைக் கேட்கும் முடிவில் காங்கிரஸ் இருப்பதாகத் தகவல் கசிகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்ன?

தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறது. அண்மையில் ஒரு பத்திரிகை, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் திமுக 30 தொகுதிகளில் போட்டியிடப் போவதாகவும், மீதமுள்ள 10 தொகுதிகளில் சில கட்சிகளுக்கு தலா ஒரு இடம்தான் கொடுக்கப்படும் எனவும் எழுதியது. எங்களுக்குள் சங்கடத்தை, குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி அது. எங்களை குழப்பும் கருத்தியலை உருவாக்கப் பலரும் முயற்சிக்கின்றனர். ஆனால், எங்களைப் பொறுத்தவரை இந்த அணி உறுதியாக நீடிக்கும். இந்த அணிதான் வெற்றிபெறும். மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு பற்றி பேசுவதற்கு இன்னும் காலம் இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in