எனக்கு ஓபிஎஸ் சிபாரிசு செய்தாரா?

ராஜ்ய சபா வேட்பாளர் முதுகுளத்தூர் தர்மர் பேட்டி
ஓபிஎஸ்சுடன் தர்மர்...
ஓபிஎஸ்சுடன் தர்மர்...

நீண்ட இழுபறிக்குப் பிறகு அதிமுகவில் ராஜ்ய சபாவுக்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும், தர்மரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். சி.வி.சண்முகம் அனைவருக்கும் தெரிந்த முகம்தான். ஆனால், ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளர் தர்மர் இன்னொரு வேட்பாளராகத் தேர்வானது தான் பலருக்கும் ஆச்சரியம். வாய்ப்புக் கிடைத்த சந்தோஷத்தில் ஆலய தரிசனம், கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு என ஏக பிஸியாக இருந்த தர்மர், காமதேனு மின்னிதழுக்கு அளித்த பேட்டியிலிருந்து...

தர்மர்
தர்மர்

உங்களுக்கு இந்த வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?

அதிமுகவின் ஒன்றியச் செயலாளராகவும், முதுகுளத்தூர் யூனியன் சேர்மனாகவும் இருக்கிறேன். 1987-ம் ஆண்டிலிருந்தே அதிமுகவில் இயங்கி வருகிறேன். மாவட்டச் செயலாளராகவும் இருந்திருக்கிறேன். கட்சியின் அடிமட்டத் தொண்டர்களோடும், எளிய மக்களோடும் எனக்கு நெருக்கமான தொடர்பு இருக்கிறது. அதையெல்லாம் பரிசீலித்து இந்த வாய்ப்பை வழங்கியிருப்பதாகவே தோன்றுகிறது.

நீங்கள் இந்த வாய்ப்பை தலைமையிடம் கேட்டீர்களா... உங்கள் பெயரும் பரிசீலனையில் இருந்தது தெரியுமா?

நான் கேட்கவில்லை. என்பெயரும் பரிசீலனையில் இருக்கிறது என்பதுகூட எனக்குத் தெரியாது. அம்மா காலத்தில் நடக்கும் அதிசயம், அதிமுகவில் இப்போதும் நடந்துள்ளது. அம்மா கால அதிமுகவில், சாதாரண தொண்டனுக்கும் நினைத்துப் பார்க்க முடியாத பெரிய பதவிகள் வந்துசேரும். அதுபோலத்தான் திடீர் என எனக்கும் இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் நான். 35 ஆண்டுகளாக இந்த இயக்கத்திற்காக உழைத்து வருகிறேன். அந்த உழைப்பை தலைமை உள்வாங்கி இந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள். என் பெயரை அறிவித்தது எனக்கே இன்ப அதிர்ச்சியாகத்தான் இருந்தது. தொண்டர்கள் இந்த இயக்கத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நான் நிகழ்கால சாட்சி ஆகியுள்ளேன்.

பின் தங்கிய மாவட்டம் என்பதால் அதை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல நம் கட்சிக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தேவை எனவும் ராமநாதபுரத்திற்கு இந்தவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கலாம். அரசியலில் வெற்றி தோல்வி சகஜம். அதையும்மீறி, அதிமுக ராமநாதபுரம் மாவட்டத்தில் வலுவாகவே இருக்கிறது. இந்த மாவட்டத்திற்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுகவில் ராஜ்ய சபா இடம் கிடைத்திருக்கிறது. அதனால் இங்குள்ள அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

அதிமுக பிளவின் போது ஓபிஎஸ் பக்கம் நின்றவர் நீங்கள். அதனால் ஓபிஎஸ் தான் உங்களுக்கு இந்த வாய்ப்பை வாங்கிக் கொடுத்ததாகச் சொல்கிறார்களே?

கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஓபிஎஸ்சும், இணை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஈபிஎஸ்சும் இரட்டைக் குதிரைப் போல் அதிமுகவை சுமந்து செல்கிறார்கள். எம்.பி வேட்பாளர் பட்டியலை அறிவித்தக் கையோடு, இருவருமே என்னை அழைத்து வாழ்த்தியதுடன், “நன்றாகச் செயல்பட வேண்டும்” எனவும் அறிவுறுத்தினார்கள். ஆக, இருவருமே கண்ணின் மணிபோல் இந்த இயக்கத்தைக் கட்டிக்காக்கிறார்கள். இருவரும் சேர்ந்து தான் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.

நீங்கள் ராஜ்ய சபாவுக்குச் செல்வதால் முதுகுளத்தூர் ஒன்றியத் தலைவர் பதவியை அதிமுக இழந்துவிடும் ஆபத்து இருக்கிறதே..?

முதுகுளத்தூர் ஒன்றியத்தில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இங்கே அதிமுகவுக்கு 4 கவுன்சிலர்கள் உள்ளனர். நான் எனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தாலும் அந்த இடத்திலும் அதிமுகவே ஜெயிக்கும். எங்களின் பலம் 4 தான் என்றாலும் சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் தலைவர் பதவியை மட்டுமல்லாது துணைத் தலைவர் பதவியையும் நாங்கள் தான் கைப்பற்றினோம். அவ்வளவுதான் இங்கே திமுகவின் செல்வாக்கு. எனவே, நான் ராஜ்ய சபாவுக்குப் போனாலும் இந்த யூனியன் தொடர்ந்து அதிமுக கையில் தான் இருக்கும்.

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக ஆளும் கட்சியாக இருந்ததால் சுயேச்சைகள் உங்களை ஆதரித்திருக்கலாம். ஆனால், இப்போது திமுக ஆளும்கட்சியாக இருக்கிறதே?

அதனால் என்ன... மக்கள் இப்போதும் அதிமுகவைத்தான் ஆதரிக்கிறார்கள். அதேபோல் சுயேச்சை கவுன்சிலர்களும் எங்களையே ஆதரிப்பார்கள்.

எம்.பி. ஆனதும் எதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?

எங்கள் மாவட்டம் கடலோர மாவட்டம். இங்கு அதிகமானவர்கள் மீன்பிடித் தொழிலை நம்பியுள்ளனர். அவர்களுக்கு இங்கு ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. அவர்களின் பிரச்சினைகளுக்காக மாநிலங்களவையில் குரல் கொடுப்பேன். பவளப்பாறைகள் பிரச்சினை, எல்லை தாண்டுவதாக கைதாவது, கடலில் மாயமாவோரை மீட்பதற்கான வசதிகள் இல்லாதது என மீனவர்களுக்கு இங்கே ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. அதையெல்லாம் எம்.பியாக உரியவர்களிடம் வலியுறுத்தி தீர்த்துவைப்பேன்.

முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த உங்களுக்கு கொடுத்திருக்கும் இந்த வாய்ப்பு அமமுகவை வாயடைக்கத்தான் என்கிறார்களே..?

தென்மாவட்டங்களில் அமமுக பிரித்தது அதிமுக வாக்குகளை அல்ல. 2016-ல் அம்மா இருக்கும்போது முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட கிருத்திகா முனியசாமி 81 ஆயிரம் வாக்குகள் வாங்கினார். 2021 சட்டமன்றத் தேர்தலில் கிருத்திகாவும் போட்டியிட்டார். அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ-வான முருகனும் போட்டியிட்டார். ஆனாலும் கிருத்திகா அதே 81 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார். இதிலிருந்தே அதிமுக வாக்குகளை அமமுக பிரிக்கவில்லை என்பது தெளிவாகும். எனவே, எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டதற்கும் அமமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட பலமுறை வாய்ப்புக் கேட்ட உங்களுக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லையே..?

அம்மா பார்த்து கொடுப்பதுதான் அது. இப்போது என்னை எம்பி ஆக்குவார்கள் என்று நான் எதிர்பார்த்தேனா? என்னைப் பொறுத்தவரை கடமையைச் செய்வேன். பலனை எதிர்பார்க்கமாட்டேன். ஒன்றியச் செயலாளர் பதவி தரும்போதும், அம்மாவே நேரில் அழைத்துத்தான் பதவி கொடுத்தார்கள். அம்மாவே மாவட்டச் செயலாளர் ஆக்கி அழகுபார்த்தார். அவரே அந்தப் பொறுப்புக்கு புதியவரையும் கொண்டுவந்தார். ஆனாலும் 35 ஆண்டுகளாக மாறாத கரைவேட்டி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஓபிஎஸ், ஈபிஎஸ் என கட்சிக்கும் கொண்ட தலைமைக்கும் விசுவாசமாக இருக்கிறேன். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சமரசமின்றி பயணிக்கிறேன். அந்த விசுவாசத்துக்கு இப்போது இன்னொரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அந்த வகையில் மகிழ்ச்சி தான்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in