பிரியங்கா காந்தி குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் ஹேக் செய்யப்பட்டது உண்மையா?

புதிய தகவல் சொல்வது என்ன?
பிரியங்கா காந்தி குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் ஹேக் செய்யப்பட்டது உண்மையா?
வாரிசுகளுடன் பிரியங்கா காந்தி

தனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாக பிரியங்கா காந்தி பொதுவெளியில் புகார் கூறிய நிலையில், அவ்வாறு ஹேக்கிங் ஏதும் நடக்கவில்லை அரசு ஏஜென்சிகள் விளக்கமளித்துள்ளனர்.

இஸ்ரேல் உளவு அமைப்பின் பெகாசஸ் மென்பொருள் வாயிலாக, இந்தியாவின் எதிர்க்கட்சியினர், பத்திரிகையாளர்கள் உட்பட பலரது அலைபேசியின் உரையாடல்கள் மற்றும் தகவல்களை அரசு முறைகேடாக ஒற்றறிவதாக புகார் எழுந்தது. அரசின் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படும் இந்த மென்பொருள், பயங்கரவாதத்துக்கு எதிரான நோக்கத்தை பிரதானமாகக் கொண்டிருப்பது. ஆனால், அரசியல் ஆதாயங்களுக்காக ஆளும் அரசுகள் பயன்படுத்துவதாக பல்வேறு நாடுகளில் எழுந்த குற்றச்சாட்டு இந்தியாவிலும் எதிரொலித்தது.

எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, உச்ச நீதிமன்ற நீதிபதி, சிபிஐ அமைப்பின் முன்னாள் இயக்குநர், மூத்த பத்திரிகையாளர் 40 பேர் உட்பட ஏராளமானோர் அலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுவதாக புகார் வெடித்தது. எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை அடுத்து உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில், ஓய்வுபெற்ற நீதிபதி வாயிலாக இந்த விவகாரம் ஆராயப்பட்டு வருகிறது. இதற்கிடையே மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தர பிரதேச சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் தாங்களும் பெகாசஸ் இலக்குக்கு ஆளாகி இருப்பதாகப் புகார் தெரிவித்தனர்.

இவற்றுக்கு மத்தியில் 2 நாட்களுக்கு முன்னர், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி புதிய புகாரை எழுப்பினார். மிரையா(18), ரைஹான்(20) ஆகிய தனது 2 குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்குகளை மத்திய புலனாய்வு அமைப்புகள் ஹேக் செய்திருப்பதாக புகார் தெரிவித்தார். “எங்களை உளவு பார்ப்பது தவிர்த்து வேறு வேலையே உங்களுக்கு இல்லையா?” என்றும் அவர் குமுறினார். எதிர்க்கட்சி தலைவர்களின் வாரிசுகளையும் அரசின் புலனாய்வு அமைப்புகள் உளவு பார்ப்பதும், சமூக ஊடகக் கணக்குகளை ஹேக் செய்ததுமான பிரியங்காவின் புகார்கள் பரபரப்பாக பேசப்பட்டன.

பிரியங்கா முறைப்படி புகார் அளிக்காதபோதும், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் முறையான விசாரணைக்கு உத்தரவிட்டது. முதல்கட்ட விசாரணயில், பிரியங்காவின் பிள்ளைகள் இருவரின் இன்ஸ்டாகிராம் ஹேக் செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. சைபர் தாக்குதல்கள் மற்றும் ஹேக்கர்களின் நடமாட்டத்தை ஆராயும் அரசின் சிஇஆர்டி புலனாய்வு அமைப்பு இந்த ஆய்வை மேற்கொண்டது. ஹேக்கிங் புகார் தொடர்பான முழு ஆய்வும் முடிந்த பிறகு, பிரியங்கா புகார் தொடர்பான முழுத் தகவல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.