இறங்குமுகத்தில் இருக்கிறாரா எடப்பாடி பழனிசாமி?

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

முதல்வராக பதவியேற்ற போது எதிர்க்கட்சியினரால் கைப்பிள்ளை ரேஞ்சிலேயே பார்க்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, ஐந்து ஆண்டுகள் ஆட்சியை ‘திறமையாக’ நடத்தியதுடன் ஆட்சியை விட்டு இறங்கிய பிறகும் கட்சிக்குள் அசைக்க முடியாத சக்தியாக நிற்கிறார். ஆனாலும் சமீபகாலமாக கட்சிக்குள்ளும் அரசியல் ரீதியாகவும் அவருக்கு சில பின்னடைவுகள் ஏற்பட்டு வருவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

கடந்த மக்களைவைத் தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தல்களிலும் எடப்பாடியின் சொந்த ஊரான சிலுவம்பாளையத்தை உள்ளடக்கிய பகுதிகளில் அதிமுகவைவிட திமுக அதிக வாக்குகளை வாங்கியது எடப்பாடி பழனிசாமியின் பின்னடைவுக்காக பிள்ளையார் சுழி. சொந்த ஊரிலேயே மக்கள் செல்வாக்கை இழந்த பழனிசாமி, தற்போது சொந்த மாவட்டத்திலும் கட்சிக்காரர்களின் செல்வாக்கையும், நம்பிக்கையையும் இழந்துவிட்டார் என்கிறார்கள். அதற்கு அடையாளமாக சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியில் இளங்கோவனை நியமித்திருப்பதைச் சொல்கிறார்கள்.

பழனிசாமியால் தனது மாவட்டத்தில் கட்சித் தேர்தலை நேர்மையான முறையில் நடத்த முடியாததை பெரும் குறையாகச் சொல்கிறார்கள். பழனிசாமியின் நண்பரும், அவரின் நிழல் என்று சொல்லப்படுபவருமான இளங்கோவனை மாவட்ட செயலாளர் வேட்பாளராக அவர் நிறுத்தியிருந்தால் அவரை எதிர்த்து பலரும் போட்டியிட்டிருப்பார்கள். இளங்கோவனால் வெற்றி பெற்றிருக்க முடியாது. இதைப் புரிந்துகொண்டு, தானே மீண்டும் மா.செ பதவிக்கு போட்டியிடுவதாக வேட்பு மனு கொடுத்தார் பழனிசாமி. இதனால் அவரை எதிர்த்து யாரும் மனு கொடுக்கவில்லை. இந்த நிலையில் ரகசியமாக இளங்கோவனை மனுகொடுக்க வைத்து அவரை மாவட்ட செயலாளாராக அறிவிக்க வைத்துவிட்டார் பழனிசாமி. இது பழனிசாமி தங்களுக்கு இழைத்த மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் என்ற அளவுக்கு பேசுகிறார்கள் சேலத்து அதிமுகவினர்.

பழனிசாமியின் நண்பரான இளங்கோவனை மாவட்ட செயலாளராக ஏற்க முடியாது, அவர் தலைமையில் செயல்பட முடியாது என சேலம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளரான வையாபுரி பகிங்கிரமாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். “அந்த இளங்கோவனால் ஒன்றிய செயலாளர்கள் பலரும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம். பொருளாதார ரீதியில் அவர் எங்களை சுத்தமாக சுரண்டிவிட்டார். ஒன்றிய செயலாளர்களையும், எல்எல்ஏ-க்களையும் ஒன்றாக இருக்க விடமாட்டார். ஒவ்வொருவருக்கும் இடையே மோதலை ஏற்படுத்தி பிரித்து வைத்துவிடுவார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பல முறை தெரிவித்துவிட்டோம். ஆனால், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பழனிசாமியிடம் இளங்கோவன் நெருக்கமாக இருப்பதாக காட்டிக்கொண்டு எல்எல்ஏ-க்களையும், எங்களைப் போன்ற நிர்வாகிகளையும் மிரட்டி வைத்துள்ளார். அவருக்கு ஏமாற்றும் திறமை அதிகமாக இருக்கிறது. இளங்கோவன் எடப்பாடிக்கு நண்பரா... அவரது நிழலா என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. இளங்கோவனுக்கு கட்சியில் நல்லபெயர் இல்லை. ஒன்றிய செயலாளர் ஒருவருடன் சேர்ந்து அதிமுக கவுன்சிலர்களை மாற்றுக்கட்சிக்கு அனுப்பி வருகிறார். கட்சியில் குழி பறிப்பதில் இளங்கோவன் நம்பர் ஒன். இப்படிப்பட்டவருக்கு எடப்பாடி பழனிசாமி எப்படி மாவட்ட செயலாளர் பதவி கொடுத்தார் என்பதை நினைத்துப்பார்க்க முடியவில்லை” என்கிறார் வையாபுரி.

வையாபுரி
வையாபுரி

இத்தனைக்கும் பழனிசாமியே முன்வந்து நியமித்த மாவட்ட செயலாளர் இளங்கோவன். அவரையே ஏற்றுக்கொள்ள முடியாது என்று பகிங்கிரமாக சொன்ன ஒன்றியச்செயலாளர் மீது எடப்பாடி பழனிசாமி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு காரணம் இருக்கிறது என்கிறார்கள். எதிர்க்குரல் எழுப்பியிருப்பது வையாபுரி என்றாலும் அதன் பின்னால் சேலம் மாவட்டத்திலுள்ள 20 ஒன்றிய செயலாளர்களும் இருக்கிறார்கள். இளங்கோவனை ஏற்க முடியாது என்று அவர்கள் அத்தனைபேரும் கலந்துபேசி ஒரே முடிவில் இருக்கிறார்களாம். இது தெரிந்ததாலேயே வையாபுரி மீது நடவடிக்கை எடுக்காமல் அவரை சமாதானப்படுத்தும் வேலைகளை பழனிசாமி தரப்பு செய்து வருகிறதாம். மற்ற ஒன்றிய செயலாளர்கள் யாரும் இதுபற்றி வெளியில் பேசிவிடக்கூடாது என்பதற்காக அவர்களுடன் தொடர்பிலேயே இருக்கிறாராம் பழனிசாமி.

இந்த நிலையில், கொங்கணாபுரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு வந்தால் கட்சியினர் மத்தியில் கலகம் ஆகிவிடும் என்பதால் இதில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டார் இளங்கோவன். தொடர்ந்து 12 ஆண்டுகள் தன் வசம் வைத்திருந்த மாவட்டச் செயலாளர் பதவியை இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியில் எதற்காக இளங்கோவனிடம் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி என்று கேட்டால், இதற்குக் காரணம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்குதான் என்கிறார்கள் சேலம் மாவட்ட அதிமுகவினர்.

பழனிசாமியுடன் இளங்கோவன்
பழனிசாமியுடன் இளங்கோவன்

இம்முறையும் மாவட்ட செயலாளர் பதவியை யாருக்கும் விட்டுத் தரும் மனநிலையில் பழனிசாமி இல்லை. அதனால்தான் சட்டமன்றத்திற்குக்கூட செல்லாமல் தனது வேட்புமனுவை அவர் தாக்கல் செய்தார். மாவட்டச் செயலாளர் பதவி தனக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த இளங்கோவன் இதனால் எடப்பாடி மீது கடுமையாக வருத்தத்தில் இருந்தார். கோடநாடு வழக்கு விசாரணை தீவிரமாகி வரும் நிலையில், இந்த விசாரணை வளையத்தில் இளங்கோவனும் இருப்பதாகச் சொல்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியும் விசாரணை வளையத்துக்குள் இழுக்கப்படலாம் என்று சொல்லப்படும் நிலையில், கோடநாடு கொலை வழக்கு தொடர்புடைய ஆவணங்களைத் தேடி இளங்கோவன் சம்பந்தப்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையும் மேற்கொண்டனர்.

இப்படி, ஆளும் கட்சியின் தொடர் நெருக்குதலுக்கு ஆளாகும் தன்வசம் மாவட்டச் செயலாளர் என்ற கேடயம் இருந்தால் எதையும் எளிதில் சமாளிக்கலாம் என நினைத்தார் இளங்கோவன். இதையெல்லாம் எடப்பாடியிடம் எடுத்துச் சொல்லியே மாவட்டச் செயலாளர் பதவியைக் கைப்பற்றி இருக்கிறார் இளங்கோவன் என்கிறார்கள்.

கோடநாடு வழக்கில் சசிகலாவிடம் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு, பழனிசாமி மீதான பிடி இன்னும் இருகியிருப்பதாகச் சொல்கிறார்கள். பழனிசாமி பற்றிய சில தகவல்களை விசாரணை அதிகாரிகளிடம் சசிகலா தெரிவித்திருக்கிறாராம். "அதிகாரத்தில் இருந்தவர்களுக்குத் தெரியாமல் கோடநாட்டில் இத்தனை பெரிய காரியங்கள் நடந்திருக்க வாய்ப்பில்லை. கோடநாடு பங்களாவில் வீடியோக்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை வைத்திருந்தார் ஜெயலலிதா. நான் அங்கு போய் பார்த்தால் தான் அதெல்லாம் என்ன ஆனது என்று அறியமுடியும்” என்று விசாரணையின் போது சசிகலா தெரிவித்ததாகச் சொல்கிறார்கள். இந்தத் தகவல்களின் அடிப்படையில் பழனிசாமிக்கும், இளங்கோவனுக்கும் அடுத்தகட்ட சம்மன் போகலாம் என்றும் சொல்கிறார்கள்.

கட்சிக்குள் நிலைமை இப்படியிருக்க, பொதுவெளியிலும் பழனிசாமியின் செல்வாக்கு தேய்ந்து வருகிறது. ஒரு பிரதான எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட வேண்டிய பழனிசாமி, அண்மைக்காமலாம ஏதோ காரணத்தால் அடக்கி வாசிக்கிறார். அதனால் அவரது இடத்தை பாஜக தலைவர் அண்ணாமலை பிடித்துக் கொண்டிருக்கிறார். இதைப் புரிந்துகொண்டு மின்வெட்டு விவகாரத்தை அரசியல் செய்யப்பார்த்தார் பழனிசாமி. ஆனால் அது, அவரையே பூமராங் ஆக திரும்பிவந்து தாக்கியது.

“எங்க வீட்லயும் 2 மணி நேரம் கரன்ட் இல்லை” என்றார் பழனிசாமி. ஆனால், அவரது வீட்டருகே உள்ள துணை மின் நிலையத்தில் புதிய மின் மாற்றி பொருத்தப்படுவதால் மின்சாரம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய செந்தில் பாலாஜி, “தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டபோது, ‘எனக்கு தெரியாது, நான் டிவி பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன்’ என்று சொன்னவர் இப்படித்தான் இருப்பார்” என்று காட்டமாக பதில் அளித்து எடப்பாடியை எதுவும் பேசவிடாமல் வாயடைத்தார்.

ஆட்சியின் அந்திம காலத்தில் அவசரக் கோலத்தில் வன்னியர்களுக்கு10.5 சதவீத ஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட்டார் பழனிசாமி. அது செல்லாது என்ற தீர்ப்பு வந்ததிலும் அவருக்கு பின்னடைவுதான். யாருக்காக இந்த உள் ஒதுக்கீட்டை கொண்டுவந்தாரோ அந்த பாமகவே இந்த விவகாரத்தில் அதிமுகவுக்கு நேர் எதிராகப் போய்விட்டது. இதை கையாளும் விதத்தில் ஆளும் திமுகவானது பாமகவின் நன்மதிப்பைப் பெற்றுவிட்டது. இதனால் அதிமுகவுடன் லேசான மோதல் போக்கை காட்ட ஆரம்பித்திருக்கிறது பாமக.

இன்னொரு பக்கம், இதுவரை ஆர்ப்பாட்டமில்லாமல் இருந்த சசிகலா தற்போது ஆரவாரத்துடன் ஆதரவாளர்களைச் சந்திப்பதும், ஆன்மிக பயணம் போவதுமாக இருக்கிறார். இவரை இயக்குவது பாஜக தான் என்ற சந்தேகம் பழனிசாமிக்கு பலமாக இருக்கிறது. அதனால் தான் அண்மையில் சென்னை வந்த அமித்ஷாவை மரியாதை நிமித்தமாகக்கூட சந்திக்க முயற்சிக்கவில்லையாம் பழனிசாமி. ஆக, மத்திய அரசு தரப்பிலும் பழனிசாமிக்கு பாசிட்டீவ் அப்ரோச் குறைந்து வருகிறது.

இத்தகைய காரணங்களால் கட்சி நிகழ்வுகளுக்காக தமிழகம் முழுவதும் பயணிப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டு விட்டார் பழனிசாமி. சட்டப்பேரவை நடக்கும்போது மட்டும் சென்னையில் இருக்கும் அவர் மற்ற நாட்களில் சேலத்திலேயே முடங்கி விடுகிறார். இதனால் அரசியல் செய்ய ஸ்கோப் உள்ள விஷயங்களில்கூட மவுனமாக இருக்கிறார். உதாரணத்துக்கு, தஞ்சை களிமேட்டில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்த விவகாரத்தையே சொல்லலாம். முதல்வர் ஸ்டாலின் களிமேடுக்கு விரைந்து வந்து ஆறுதல் கூறுகிறார். சசிகலாவும், தினகரனும் வந்து ஆறுதல் கூறுகிறார்கள். ஜி.கே.வாசன் கூட வந்து போனார். ஆனால் எதிர்கட்சித் தலைவரான பழனிசாமி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

ஆக மொத்தத்தில், அதிகாரம் கையில் இருந்தபோது எதையும் சாதிக்கும் வல்லமை பெற்றிருந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது எதிர்காலம் குறித்த கவலைகள் சுற்றுவதால் அரசியல் ரீதியாக இறங்குமுகத்தில் இருக்கிறார் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in