25 லட்சம், 15 பவுன் மோசடி; ஜாமீன் கிடைக்காததால் விரக்தி: உயிரை மாய்த்துக் கொண்ட இந்து மக்கள் கட்சி பிரமுகர்

25 லட்சம், 15 பவுன் மோசடி; ஜாமீன் கிடைக்காததால் விரக்தி: உயிரை மாய்த்துக் கொண்ட இந்து மக்கள் கட்சி பிரமுகர்

சென்னையைச் சேர்ந்தவரிடம் 25 லட்சம், 15 பவுன் மோசடி செய்த வழக்கில் ஜாமீன் கிடைக்காத விரக்தியில் விஷம் குடித்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ஜோதிடர் பிரசன்னசாமி (41). இவர் இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் பிரிவு துணைத்தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில் பிரசன்னசாமி, அவரது மனைவி அஸ்வினி ஆகியோர் 25 லட்சம் பணம் மற்றும் 15 பவுன் நகை மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த கருப்பையா, செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் ஜாமீன் கேட்டு நிதிமன்றத்தில் பிரசன்னசாமி மனுதாக்கல் செய்தார். ஆனால், ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் மனஉளைச்சலில் இருந்த பிரசன்னசாமி, அவரது மனைவி அஸ்வினி, தாய் கிருஷ்ணகுமாரி, பிரசன்னசாமியின் மகள் ஆகியோர் ஆக.3-ம் தேதி விஷம் குடித்தனர். இது தொடர்பாக குடும்பமாக வீடியோவும் வெளியிட்டனர்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்கள் நான்கு பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே பிரசன்னசாமியின் தாய் கிருஷ்ணகுமாரி உயிரிழந்தார். இதையடுத்து மற்ற மூவரும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பிரசன்னசாமியும் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in