மோடி மீண்டும் பிரதமராவதை விரும்புகிறார்களா இந்தியர்கள்?

உடையும் பலூன்களும், உடையாத செயல்களும்: ஒரு பார்வை
மோடி
மோடி

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தலையொட்டி வெளியான கருத்துக் கணிப்பு ஒன்று, மோடி மீண்டும் பிரதமராக 72 சதவீத இந்தியர்கள் ஆதரவளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது சிலருக்கு மகிழ்ச்சியாகவும், பலருக்கு அதிர்ச்சியாகவும் இருக்கலாம். ‘மோடியின் செல்வாக்கு குறைவதைக் கண்கூடாகப் பார்க்கிறோமே... பிறகெப்படி?’ எனச் சிலர் கேள்வி எழுப்பலாம்.

உலகின் செல்வாக்கு மிக்க தலைவர் என்று பாஜகவினரால் போற்றிப் புகழப்படும் மோடியின் செல்வாக்கு, படிப்படியாகச் சரிந்துகொண்டேதான் இருக்கிறது. குஜராத் முதல்வராக இருந்த மோடியை நாட்டின் பிரதமராக்குவதற்காக அவரது பிம்பம் எப்படியெல்லாம் ஊதிப் பெரிதாக்கப்பட்டதோ, அந்தப் பலூன்கள் எல்லாம் ஒவ்வொன்றாக உடையத் தொடங்கியிருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

உடைந்த பிம்பங்கள்

மோடி குறித்த வியப்பை ஏற்படுத்துவதற்காகச் சொல்லப்பட்ட தனிப்பட்ட தகவல்களிலேயே ஏகப்பட்ட குளறுபடிகள். அவர் ரயில் நிலையத்தில் டீ விற்றது, டிகிரி படித்தது, திருமண உறவு என்று பல விஷயங்களின் உண்மைத்தன்மைகள் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டன. பிறகு அவற்றில் பெரும்பாலானவை பொய் என்றும் நிரூபிக்கப்பட்டன. குஜராத் மாநிலத்தில் அவர் செய்த சாதனைகள் என்று சொல்லப்பட்டவை, பின்தங்கிய பிஹார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில்தான் சாதனைகள்; தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற தென்மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் அது சாதனையே இல்லை என்பதும் நிரூபிக்கப்பட்டது.

சமூக வலைதளத்திலும் முன்பு மோடியே ராஜாவாக இருந்தார். ட்விட்டரில் அவரைப் பின்தொடர்வோர் எண்ணிக்கையும் சரி, அவர் குறித்த செய்திகளுக்குக் குவியும் லைக்குகளும் சரி உலகளாவிய தலைவர்களையே பொறாமைப்பட வைப்பவை. சமூக வலைதளம் மூலம் வளர்ந்த பாஜகவின் வீழ்ச்சி, அதே சமூக வலைதளத்திலேயே தொடங்கியது. மோடியின் புகழ் மகுடத்தில் வைரமாகப் பார்க்கப்பட்ட, ‘மன் கி பாத்’ வீடியோவுக்கு யூடியூபில் லைக் 4 லட்சம், டிஸ்லைக் 12 லட்சம் என்று போனது ஓர் உதாரணம்.

விமர்சனத்துக்குள்ளான நடவடிக்கைகள்

களத்தில் மோடிக்கு அதிக கெட்ட பெயரை வாங்கித்தந்தது, பண மதிப்பு நீக்க நடவடிக்கை. கோடிக்கணக்கான ஏழை மக்களைப் பரிதவிக்கவிட்டு, லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தையே பறித்து, சிலரின் உயிரையும் பறித்த அந்த நடவடிக்கை மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது.

அடித்தட்டு மக்களை வெகுவாகப் பாதித்த மற்றொரு நிகழ்வு, 2020 மார்ச்சில் மோடி அறிவித்த தேசம் தழுவிய 21 நாள் ஊரடங்கு. எவ்வித முன்னறிவிப்போ, முன்னேற்பாடோ இல்லாமல் போடப்பட்ட அந்தப் பொதுமுடக்கத்தால், புலம்பெயர் தொழிலாளர்கள் பட்ட இன்னல்களை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. முதல் அலையைக் காட்டிலும் வீரியமாகவும், தீவிரமாகவும் 2-ம் அலையின் தாக்குதல் இருந்தபோதிலும்கூட இரண்டாம் முறையாக அதே தவறை மோடி செய்யவில்லை என்பதே மிகப்பெரிய ஆறுதலாக அமைந்தது. எனினும், 2-ம் அலையின்போது பலர் உயிரிழந்ததும், ஆக்சிஜன் பற்றாக்குறை, சுடுகாட்டில் இடப்பற்றாக்குறை போன்ற நிகழ்வுகளும் கடும் விமர்சனத்துக்குள்ளாகின.

இதுவரையிலான மோடியின் தவறுகள் எல்லாம் வெறும் விமர்சனங்களை மட்டுமே ஏற்படுத்தியதே தவிர, பாஜகவின் தேர்தல் வெற்றிக்குப் பாதகமாக அமைந்ததில்லை என்பதை 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற மிகப் பிரம்மாண்டமான வெற்றி காட்டியது. ஆனால், அதன் பிறகு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகளும் வெற்றிபெற்றன.

வேளாண் சட்டங்கள் விஷயத்தில் தேவையற்ற வேகம் காட்டி கையைச் சுட்டுக்கொண்டது பாஜக. ஓராண்டுக்கும் மேலாக டெல்லியில் போராடிய விவசாயிகளை நேரில் சந்தித்துப் பேசக்கூட மோடி முன்வரவில்லை. அது பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் மோடியின் செல்வாக்கைப் பதம் பார்த்தது. தேர்தல் நெருங்கியதும் வேளாண் சட்டங்களை பாஜக அரசு திரும்பப்பெற்றுவிட்டது என்றாலும், இழந்த செல்வாக்கை அக்கட்சியால் திரும்பப் பெறவே முடியவில்லை. பஞ்சாப் மாநிலத்துக்குச் சென்ற மோடி, பாதி வழியில் திரும்பவேண்டிய சூழலின் பின்னணியில் இருந்தது விவசாயிகளின் கோபம்தான்.

வீழ்ந்த பொருளாதாரம், அதிகரித்த விலைவாசி, வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டம் என்று பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. உலகளாவிய கோவிட் தாக்குதலும் இதற்கொரு காரணம் என்றாலும்கூட, அதற்கு அடித்தளம் அமைத்தது, மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளே என்று அடித்துச் சொல்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமியும் அதையே சொல்கிறார்.

நிறைவேறாத வாக்குறுதிகள்

2019 மக்களவைத் தேர்தலுக்காக பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கை மிக முக்கியமானது. அதில் 75 அறிவிப்புகள் பத்திரிகைகளால் வெகுவாகக் கொண்டாடப்பட்டன. முக்கியமாக விவசாயிகளின் லாபத்தை இரட்டிப்பாக்குவோம், வேலைவாய்ப்புகளை அதிகரிப்போம், தனிநபர் வருமானத்தை உயர்த்துவோம், விலைவாசியைக் குறைப்போம் என்பன போன்றவை. இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது விமர்சனங்களை உருவாக்கியது.

பாஜக தேர்தல் அறிக்கையின் முதல் தலைப்பே, தீவிரவாதத்தை ஒடுக்குவதும், தேசப் பாதுகாப்பும்தான். தீவிரவாதத் தாக்குதல்கள்கூட ஓரளவு மட்டுப்பட்டிருக்கின்றன, பாதுகாப்பான கைகளில்தான் தேசம் இருக்கிறது என்ற நம்பிக்கை இன்னும் மக்களுக்கு வரவில்லை. சீன அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், அந்த நாட்டின் பெயரைக்கூட உச்சரிக்கப் பயப்படுகிறது மோடி அரசு. பக்கத்து நாட்டின் அத்துமீறல் என்றே இன்னமும் சொல்லிக்கொண்டிருக்கிறது பாஜக. உங்கள் வீரமெல்லாம் பாகிஸ்தானிடம் மட்டும்தானா என்று மக்களே கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.

வடநாட்டினரின் விழிப்புணர்வு

வரலாற்று ரீதியாக வடநாட்டு இந்துக்கள், அந்நியப் படையெடுப்பால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்கள். குறிப்பாக இஸ்லாமியப் படையெடுப்பால். அந்த வரலாற்றைக் கிளறிவிட்டு, வெறுப்பை விதைத்து இந்துக்களை ஒன்று திரட்டுகிற வேலையை பாஜக செய்தது. அதில் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது. தொடர்ந்து இரண்டு முறை மோடி அரசை ஆதரித்த வடநாட்டு இந்துக்கள், சொந்த வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதை மிகத் தாமதமாகவே உணரத் தொடங்கியிருக்கிறார்கள். ‘‘எல்லாம் சரி எங்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?’’ என்று கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

1990-க்குப் பிறகான பிரதமர்களில், மிகச்சிறந்த மேடைப் பேச்சாளர் மோடி என்பதில் சந்தேகமே இல்லை. எந்த மாநிலத்துக்குப் போனாலும் அந்த மாநிலத்தைப் பற்றி மிகையாகப் புகழ்வது, மாநில மொழியில் சில வரிகள் பேசுவது, இலக்கியங்களில் இருந்து சில வரிகளை மேற்கோள் காட்டுவது என்று பின்னியெடுக்கிறார் மோடி. இந்தப் புதிய பாணி மேடைப் பேச்சு கர்நாடகாவுக்கு மேல் உள்ள மாநில மக்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்த மாதிரிப் பேச்சுகளை எல்லாம் கேட்டுக்கேட்டுப் புளித்துப்போன தமிழ்நாட்டு மக்களோ, இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. இப்போது அதே மனநிலைக்கு வடமாநிலத்தவர்களும் வரத் தொடங்கியிருக்கிறார்கள். டெலிபிராம்ப்டர் சொதப்பல் வேறு, அவரது பேச்சாற்றலைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.

உடையாத பலூன்கள்

மோடி உச்சத்தில் பறக்கக் காரணம், ஆயிரக்கணக்கான பலூன்கள். அதில் சில பலூன்கள் மட்டுமே உடைந்திருக்கின்றன. மீதியிருக்கிற பலூன்கள் உடையாவிட்டால், இன்னும் 10 ஆண்டுகள்கூட அவர் பறக்க முடியும் என்பதை மறுப்பதற்கில்லை.

நாம் இந்துக்கள், நம் வாழ்க்கை முறை உலகமே பின்பற்றத்தக்க பாரம்பரியப் பெருமிதம் கொண்டது, பாரத மாதா நம் வழிபாட்டுக்குரியவள், பாகிஸ்தான் நமது எதிரி நாடு, ராணுவ வீரர்கள் நம் மரியதைக்குரியவர்கள், மதமாற்றக் கும்பலும், இந்து மதத்தை கேலி செய்வோரும் நம் பகைவர்கள் என்ற அடையாள அரசியலைச் சிறப்பாக முன்னெடுத்தது பாஜக. அரசியல் விழிப்புணர்வு பெற்ற தமிழ்நாட்டிலேயே தமிழர், தமிழ்நாடு, தமிழர் பெருமிதம் என்கிற அரசியல் சிறப்பாக எடுபடுகிறபோது, விழிப்புணர்வற்ற வட மாநிலங்களில் அடையாள அரசியல் அவ்வளவு சீக்கிரம் செல்வாக்கிழந்துவிடாது என்பது பாஜகவுக்குப் பலம்.

வேத காலத்திலேயே அறுவை சிகிச்சை இருந்தது, புராண காலத்திலேயே ஆகாய விமானம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்பது போன்ற போலிப் பெருமிதங்களை இந்தியர்கள் அப்படியே நம்புகிறார்கள். இதுவும் பாஜகவின் பலம்.

இடஒதுக்கீடு அரசியல்

முன்னேறிய வகுப்பினரின் நீண்டநாள் கோரிக்கையான பொருளாதார இடஒதுக்கீட்டை அள்ளிக்கொடுத்திருக்கிறார் மோடி. உயர் மருத்துவப் படிப்புகளில் ஓபிசிக்கு இடஒதுக்கீடு வழங்கியதையும் இதோடு சேர்த்துக்கொள்ளலாம். நீண்டகாலமாக நிலுவையில் இருந்த இந்தக் கோரிக்கையை சமூகநீதிக்காக உரத்த குரல் எழுப்புகிற காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு மத்தியில் இருந்தும்கூட நிறைவேறவில்லை. இப்போது நீதிமன்ற வழக்கு காரணமாக அதைப் பாஜக செய்திருந்தாலும்கூட, ‘ஓபிசி இடஒதுக்கீட்டை நாங்கள்தான் கொண்டுவந்ததோம்’ என்கிற அவர்களது வாதம், வட இந்தியாவில் நன்றாகவே எடுபட்டிருக்கிறது. வி.பி.சிங்கின் மண்டல் கமிஷன் அறிக்கைக்கு எதிராகப் போராடி, அந்த ஆட்சியையே கவிழ்த்தவர்கள் பாஜகவினர் என்கிற பழைய வரலாற்றை எல்லாம் யார் நினைவில் வைத்திருக்கிறார்கள்?

வீடுதோறும் கழிப்பறை, கிராமந்தோறும் மின்வசதி, வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு என்ற மோடியின் முழக்கம் ஓரளவுக்குச் சாத்தியமாகியிருக்கிறது. தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலங்களில் இத்திட்டம் குறித்த பார்வை வேறு மாதிரி இருந்தாலும், மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் இந்த அறிவிப்புகள் ஓரளவுக்குச் செயல்பாட்டுக்கு வந்திருப்பது அம்மக்களைப் பொறுத்தவரையில் ஒரு புரட்சிதான்.

உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி, 1,000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும். குறைந்தது 1,400 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலையைக் கொண்டுவருவோம் என்று 2019 தேர்தல் அறிக்கையில் சொன்னது பாஜக. தமிழ்நாட்டில் அப்போதே 800 பேருக்கு ஒரு மருத்துவர் இருந்தார் என்பது வேறு கதை. 1,800 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற அளவுக்கு மருத்துவப் படிப்புகளின் சீட் எண்ணிக்கையை உயர்த்தியிருக்கிறது மத்திய அரசு. தமிழ்நாட்டில், தற்போது ஒரேநேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளைத் திறந்துவைத்து மோடி பேசியது சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அதில் அவர் சொன்ன புள்ளிவிவரங்களை யாரும் மறுக்க முடியாது.

மிகைப்படுத்துதல், பொய்யான தகவல்கள், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்பன போன்ற அரசியல் உத்திகள் எல்லாக் கட்சிகளுக்கும் கைகொடுப்பதைப் போல பாஜகவுக்கும் கைகொடுக்கின்றன. பொய்யையே சொன்னாலும் யார் உறுதியாகவும், உரத்த குரலிலும், கொஞ்சம்கூட தயக்கமே இல்லாமலும் சொல்கிறார்களோ அவர்களுக்கே வெற்றி என்பதுதான் இந்தியத் தேர்தல் களத்தின் நிலை என்றால், அந்தக் களத்தில் நிச்சயம் மோடிதான் வெல்வார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in