இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி; ஜனநாயகத்தின் மரணத்தை கண்கூடாகக் காண்கிறோம் - ராகுல் காந்தி பாய்ச்சல்

இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி; ஜனநாயகத்தின் மரணத்தை கண்கூடாகக் காண்கிறோம் - ராகுல் காந்தி பாய்ச்சல்

இந்தியாவில் ஜனநாயகம் என்பதே இல்லாத சூழல் நிலவுகிறது. இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்

விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி இன்று நாடு முழுவதும் போராட்டம் நடத்திவரும் சூழலில், டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “ இந்தியாவில் ஜனநாயகம் என்பதே இல்லாத சூழல் நிலவுகிறது. நாட்டில் 4 பேர் சேர்ந்து சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. ஜனநாயகத்தின் மரணத்தை நாம் கண்கூடாகக் காண்கிறோம். ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன் ஒவ்வொரு செங்கற்களாக கட்டப்பட்ட இந்தியா, நமது கண் முன்னே அழிந்து வருகிறது. சர்வாதிகாரத்துக்கு எதிராக நிற்கும் எவரும் கொடூரமாக தாக்கப்படுகிறார்கள், சிறையில் அடைக்கப்படுகிறார்கள் , கைது செய்யப்பட்டு அடிக்கப்படுகிறார்கள்.

எனக்கு பயம் கிடையாது. நான் இப்படி தாக்கப்படும்போது மகிழ்ச்சியாகவே உணர்கிறேன். உண்மையை சொல்வதால் தாக்கப்படுவேன் என்பதற்காக உண்மையை சொல்வதை நிறுத்திக்கொள்ள மாட்டேன். போரில் காயம் ஏற்படும் போது எப்படி மகிழ்ச்சியாக இருக்குமோ, இப்போது அப்படி உள்ளது.

இந்தியாவில் இருக்கக் கூடிய 2, 3 பணக்காரர்களுக்காக மட்டுமே இந்த சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. நாடாளுமன்றத்தில் எந்த விவாதத்தையும் நடத்துவதற்கு மத்திய அரசு தயாராக இல்லை. அனைத்து சுதந்திரமான அமைப்புகளும் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இந்த அமைப்புகளை ஆர்.எஸ்.எஸ் கட்டுப்படுத்துகிறது. நாட்டில் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது, அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இந்த சர்வாதிகார ஆட்சியை நீங்கள் மகிழ்ச்சியாக அனுபவிக்கிறீர்களா” என மக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “ஹிட்லரும் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார், ஜெர்மனியின் அனைத்து நிறுவனங்களையும் அவர் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அதுப்போலவே இங்கும் நடக்கிறது. முழு அமைப்பையும் என்னிடம் கொடுங்கள், தேர்தலில் பாஜக எப்படி வெற்றி பெறுகிறது என்பதை நான் உங்களுக்குக் காண்பிப்பேன்.

காந்தி குடும்பத்தை இவர்கள் ஏன் தாக்குகிறார்கள். நாங்கள் ஒரு சித்தாந்தத்திற்காக போராடுவதால் தாக்குகிறார்கள். நாங்கள் ஜனநாயகத்திற்காகவும், மத நல்லிணக்கத்திற்காகவும் போராடுகிறோம்,

என் குடும்பம் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்துள்ளது. இந்த சித்தாந்தத்திற்காக நாங்கள் போராடுவதால் இது எங்கள் பொறுப்பு. இந்துக்கள்-முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் போதும், தலித்துகள் கொல்லப்படும் போதும், ஒரு பெண் தாக்கப்படும் போதும் நமக்கு வலிக்கிறது. எனவே நாங்கள் போராடுகிறோம்” என தெரிவித்தார்

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படுகிறது. டெல்லியில் அக்கட்சி தலைவர்கள் ராஷ்டிரபதி பவனுக்கு பேரணியாக செல்கின்றனர். காங்கிரஸ் போராட்டத்தை முன்னிட்டு டெல்லியின் சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in