இன்னொரு சோமாலியாவாக இந்தியா மாறப்போகிறது: எச்சரிக்கும் சீமான்

இன்னொரு சோமாலியாவாக  இந்தியா மாறப்போகிறது: எச்சரிக்கும் சீமான்

உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் பட்டினிக் குறியீடு தரவரிசையில் 121 நாடுகளில் 107-வது இடத்தில் இந்தியா உள்ளது. பஞ்சப் பிரதேசமாக இந்த நாடு மாறிக் கொண்டிருக்கிறது. இன்னொரு சோமாலியா, எத்தியோப்பியா, நைஜீரியாவாக இந்தியா மாறப்போகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள மேல்மா கூட்ரோடு பகுதியில் சிப்காட் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் பட்டினிக் குறியீடு தரவரிசையில் 121 நாடுகளில் 107-வது இடத்தில் இந்தியா உள்ளது. பஞ்சப் பிரதேசமாக இந்த நாடு மாறிக் கொண்டிருக்கிறது. இன்னொரு சோமாலியா, எத்தியோப்பியா, நைஜீரியாவாக இந்தியா மாறப்போகிறது. இலங்கையில் நடந்ததைப் போன்று இங்கேயும் நடக்கப் போகிறது.

எது வளர்ச்சி எனத் தெரியாமல் நாட்டை ஆட்சி செய்கிறார்கள். நீங்கள் கட்டமைக்கும் வளர்ச்சி என்பது என்ன? கல்வி, மருத்துவம், சாலைப் போக்குவரத்து, மின் உற்பத்தி என எல்லாம் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதுதான் வளர்ச்சியா? ஒருவர் இறந்துவிட்டால்  கட்டையில் எரிக்காமல், கரண்ட்டில் எரிப்பதுதான் வளர்ச்சியா?

சிறப்புப் பொருளாதார மண்டலம் என நிலங்களை முதலாளிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து வருகிறார்கள். அதனால் என்ன வளர்ச்சியைக் கண்டார்கள்? இவர்கள் விட்டாலும் நான் விடமாட்டேன். என்னை நேர்ந்து விட்டதே போராட்டத்துக்குத்தான். ஏனென்றால் நான் போராட்டக்காரனின் மகன். எங்கள் அண்ணன் கையில் துப்பாக்கி வைத்திருந்தார். நான் அறிவாயுதம் வைத்துள்ளேன் ” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in