
நிதி மேலாண்மையில் மத்திய அரசு மிகுந்த கவனமுடன் செயல்பட்டு வருகிறது. எனவே, நாட்டின் கடன் சுமை அடுத்த தலைமுறையினா் மீது சுமத்தப்படாது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பொருளாதாரம் பற்றிய கருத்தரங்கில் பங்கேற்ற நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் நாட்டின் பொருளாதாரம், கடன் சுமை குறித்து உரையாற்றினார். அதில் நாட்டின் குறு பொருளாதார நிலைத்தன்மை தொடா்பான விவகாரங்கள், நிதி மேலாண்மை தொடா்பான விவகாரங்களில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் மிகுந்த கவனமுடன் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்றார். ஊதாரித்தனமாகச் செயல்படுவதும், அதனால் ஏற்படும் கடன் சுமையை வருங்கால தலைமுறையினா் மீது சுமத்துவதும் எளிதானது. ஆனால், நாட்டின் கடன்கள் மீது மத்திய அரசு மிகுந்த கவனமுடன் உள்ளது என தெரிவித்தார்.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் கடன் சுமை மிக அதிகமல்ல. பிற வளா்ந்து வரும் நாடுகளின் கடன் சுமை தொடா்பான புள்ளி விவரங்கள், அதனை அவா்கள் எவ்வாறு சமாளிக்கின்றனா் என்பதையும் மத்திய அரசு தொடர்ந்து கவனித்து வருகிறது என்றும், வருங்கால தலைமுறையினா் மீது நாட்டின் கடன் சுமையை திணித்துவிடக் கூடாது என்ற மிகுந்த பொறுப்புணா்வுடன், கடன் சுமை மேலாண்மையை இந்தியா வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறது என கூறினார்.
மூலதனச் செலவினங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், அதனை டிஜிட்டல் முறையில் செலவழிக்கவும் அரசு முடிவு செய்து, நடவடிக்கை மேற்கொண்டது. இதன் மூலம், ஒவ்வொரு பணமும் எங்கு செல்கிறது என்பதை மக்களால் பார்க்க முடியும். குடிமக்களுக்கு அதிகாரமளிக்க டிஜிட்டல் மயமாக்கலைக் காட்டிலும் சக்திவாய்ந்த நடைமுறை வேறெதுவும் இல்லை என பேசினார்.
இதற்கு, ஜன் தன் வங்கிக் கணக்குகளை உதாரணமாக கூறலாம். இந்தத் திட்டம் கடந்த 2014-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்குகளால் பொதுத் துறை வங்கிகளுக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்று கூறப்பட்டது. ஆனால், இன்றைக்கு ஜன் தன் திட்ட வங்கிக் கணக்குகளில் ஒட்டுமொத்தமாக ரூ.2 லட்சம் கோடி ரொக்கம் இருப்பு உள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் பேசினார்.
இதையும் வாசிக்கலாமே...
வங்கிகளுக்கு பறந்த புதிய உத்தரவு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஆளுநர் தடையாக உள்ளார்- அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்!
யாரை ஏமாற்ற கூட்டம் நடத்துகிறீர்கள்?- ராமதாசுக்கு காடுவெட்டி குரு மகள் கேள்வி!
33 வருடம்... என் இதயம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது! அமிதாப்புடன் நடிக்கும் ரஜினி நெகிழ்ச்சி!