பாஜகவை வீழ்த்தியே தீருவோம் என்று ஆரவாரமாக புறப்பட்ட இந்தியா கூட்டணி பாதி வழியிலேயே ஆட்டம் கண்டிருக்கிறது. “காங்கிரஸ் கட்சிதான் பாஜகவின் உண்மையான பி டீம்” என கர்ஜித்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “மூன்றாவது அணியை உருவாக்குவோம்” என்று சொல்லி புதிய முஸ்தீபில் இறங்கி இருக்கிறார்.
பாட்னா, பெங்களூரு, மும்பை என அடுத்தடுத்து கூட்டங்களை நடத்தி, 28 எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து உருவாகியது இந்தியா கூட்டணி. எதிரும் புதிருமாக இருந்த காங்கிரஸ், திரிணமூல், ஆம் ஆத்மி, இடதுசாரிகள், சமாஜ்வாதி கட்சிகளெல்லாம் ஓரணியில் திரண்டதால் பாஜகவே பெரிய அளவில் பதற்றமானது. அந்த பயத்தில் அண்மைக்காலமாக பல்வேறு விதமாக ‘இந்தியா கூட்டணியை’ புரட்டியெடுத்து விமர்சித்துக் கொண்டிருந்தார் பிரதமர் மோடி. இந்தியா கூட்டணியை சுவடில்லாமல் விரட்டுவோம் என பாஜகவினர் ஒருபக்கம் முழங்கிக்கொண்டிருக்க, உங்களுக்கு ஏன் அந்த வேலை என தனக்குத்தானே முடிவுரை எழுத ஆரம்பித்திருக்கிறது இந்தியா கூட்டணி.
5 மாநில தேர்தல் தேதி வெளியாகும் வரை எல்லாமே நன்றாகத்தான் போனது. அதுவரை ‘பங்காளி’ தோழமையோடு நடந்துகொண்ட காங்கிரஸ் கட்சி, இப்போது ‘முதலாளி’ தோரணையோடு நடந்துகொள்வதாக கூட்டணிக்கட்சிகளே குமுறுகின்றன.
தேர்தல் நடைபெறும் இந்த 5 மாநிலங்களிலும் இடதுசாரிகளுக்கு கணிசமான செல்வாக்கு உள்ளது. ம.பியில் சமாஜ்வாதிக்கும், நிதிஷ்குமார் கட்சிக்கும் கொஞ்சம் செல்வாக்கு உள்ளது. எனவே, இவர்கள் காங்கிரஸோடு கூட்டணி வைக்க விரும்பினார்கள். ஆனால், பெரியண்ணன் மனப்பான்மையோடு காங்கிரஸ் கட்சி முரண்டு பிடித்ததால் இப்போது இந்த கட்சிகளெல்லாம் தனித்தனியாக போட்டியிடுகின்றன. மறுபக்கம் ஆம் ஆத்மி கட்சியும் 5 மாநிலங்களிலும் தனி ஆவர்த்தனம் செய்கிறது. சிறிதாக தொடங்கிய இந்த விரிசல் இப்போது மூன்றாவது அணிக்கான முயற்சியில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.
காங்கிரஸின் நடவடிக்கைகளால் விரக்தியடைந்த நிதிஷ் குமாரும் அக்கட்சியை கடுமையாக கடிந்துகொண்டார். ஆனால், கார்கே அவரிடம் பேசி சமாதானம் செய்தார். ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவும் “இந்தியா கூட்டணி இருக்கிறதா என தெரியவில்லை” என்று விமர்சித்தார். திரிணமூல் தலைவர் மம்தா ஏற்கெனவே காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருக்கிறார். இடதுசாரிகளும் இணக்கமான சூழலில் இல்லை. இந்தகைய சூழலில்தான், ‘பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர்’ கூட்டணி எனப்படும் ‘பிடிஏ’ கூட்டணியை அமைக்கப் போவதாக குரலெழுப்பியுள்ளார் அகிலேஷ்.
ஒருவேளை, அகிலேஷ் யாதவ் 3 வது அணியை உருவாக்கினால், அதில் திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இணையும் வாய்ப்பு உள்ளது. இதுமட்டுமில்லாமல் ஒடிசாவின் ஆளும் கட்சியான பிஜூ ஜனதா தளமும், தெலங்கானாவின் ஆளும் கட்சியான சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சியும் இணையக்கூடும். காங்கிரஸின் அணுகுமுறை பிடிக்காத மேலும் சில மாநில கட்சிகளும் தங்களோடு வரக்கூடும் என நினைக்கிறார் அகிலேஷ்.
அதேசமயம் “5 மாநில தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்வோம். அதன்பின்னர் தற்போது எதிர்க்கும் கட்சிகளெல்லாம் மீண்டும் எங்களோடு வருவார்கள்” என்று உறுதியாகச் சொல்கிறது காங்கிரஸ். அதுமட்டுமில்லாமல் பீகாரில் தங்களின் தயவு நிதிஷுக்கும், தேஜஸ்விக்கும் தேவை. அதுபோல மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேயும், சரத் பவாரும் நம்மைவிட்டு பிரியமாட்டார்கள். ஜார்க்கண்ட் ஆளும் முதல்வரான ஹேமந்த் சோரனுக்கும் காங்கிரஸின் ஆதரவு தேவை. அத்துடன் திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட சில கட்சிகளின் ஆதரவும் தங்களுக்கு இருக்கும் என காங்கிரஸ் நம்புகிறது.
இன்னொருபக்கம், 3-வது அணி அமைந்தாலும் பரவாயில்லை, நாம் சிக்கலில்லாமல் தேர்தலை சந்திப்போம் என்று காங்கிரஸ் கணக்குப் போடுகிறது. தேர்தலுக்குப் பிறகு தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் அதன்பின் இவர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளலாம் என்பது காங்கிரஸ் தலைகள் சிலரின் கணக்காக இருக்கிறது.
ஆனால், 3-வது அணி உருவானால் அது நிச்சயமாக பாஜகவுக்கு பெரிய பிளஸ்ஸாக மாறும் என்பதே உண்மை. ஒருங்கிணைந்த இந்தியா கூட்டணி பொதுமக்களால் பாஜகவுக்கு எதிரான வலுவான அணியாகப் பார்க்கப்பட்டது. ஆனால், அது உடைந்து 3-வது அணி உதிக்குமேயானால் மக்களின் நம்பிக்கை சிதையும். அது பாஜகவுக்கான வாய்ப்பாகவே மாறும்.
தமிழகத்தில் திமுகவுடன் பிரிக்க முடியாத பந்தத்தில் இருக்கிறது காங்கிரஸ். அந்த பந்தத்தால் திமுக இம்முறையும் தங்களுக்கு புதுச்சேரியையும் சேர்த்து 10 மக்களவைத் தொகுதிகளை விட்டுக் கொடுக்கும் என நம்புகிறார்கள். ஆனால், “இம்முறை அவ்வளவுக்கெல்லாம் வாய்ப்பில்லை 6 தொகுதிகளைக் கொடுத்தாலே அதிகம்” என்கிற ரீதியில் திமுகவுக்குள்ளேயே சிலர் செய்திகளைப் பரப்புகிறார்கள். ஒருவேளை, இது உண்மையாக இருந்து திமுகவின் முடிவை காங்கிரஸ் ஏற்காமல் போனால் திமுகவும் மூன்றாவது அணி நோக்கி நகரக்கூடும்.
இந்தியா கூட்டணியிலேயே திமுக தொடரும் பட்சத்தில் அதிமுகவை மூன்றாவது அணியில் இணைக்க அகிலேஷ் உள்ளிட்டவர்கள் அடிப்போடுவார்கள். தேசிய அளவிலான நெட்வொர்க் இல்லாமல் தடுமாறும் இபிஎஸ்சும் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்துக்கொள்ளலாம். எனவே, 3-வது அணியின் தாக்கம் தேசிய அளவில் மட்டுமின்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும்.
பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரண்ட எதிர்க்கட்சிகள் ரெண்டுபடுவதால் மூன்றாவது முறையாகவும் அரியணை ஏறுவதில் சிக்கல் இருக்காது என இப்போது தெம்பாக இருக்கிறது பாஜக. ஆக, 5 மாநில தேர்தல்கள் மொத்தமாக கூட்டணி கணக்குகளையே கலைத்துப் போட்டுள்ளது. மூன்றாவது அணி பிறக்குமா, இல்லையா என்பது டிசம்பர் 3-ல் தேர்தல் முடிவுகள் வரும்போது உறுதியாகிவிடும்!
இதையும் வாசிக்கலாமே...
தீபாவளியன்று இப்படி விளக்கேற்றினால் ஐஸ்வர்ய கடாட்சம் கிட்டும்!
வெடித்து சிதறும் பட்டாசுகள்... 3 மாவட்டங்களில் காற்று மாசு அதிகரிப்பு!
மோடியை அலற வைத்த இளம்பெண்... பிரச்சார பொதுக்கூட்டத்தில் பரபரப்பு!
திருப்பதியில் இன்று தீபாவளி ஆஸ்தானம்... லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!
தனுஷ் முதல் சமந்தா வரை... மூன்றாவது நபர் தலையீட்டால் பிரிந்த பிரபலங்கள்!