பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றும்... இந்தியா கூட்டணி மீது ஜெய்ராம் ரமேஷ் நம்பிக்கை!

ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்

மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி 272 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றும் என  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணி தலைவர்கள்
இந்தியா கூட்டணி தலைவர்கள்

இந்தியாவின் 18 வது மக்களவைத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 19ம் தேதியன்று தொடங்க உள்ளது. தொடர்ந்து  மூன்றாவது முறையாக இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க பாரதிய ஜனதா கட்சி மும்முரம் காட்டி வருகிறது. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றி மாற்று அரசை அமைக்க வேண்டும் என்று இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன. அதில் பல்வேறு கட்சிகள் இடம்பெற்று இருப்பதால் பல்வேறு குழப்பங்களும் அந்த கூட்டணியில் உள்ளது. 

நாடு தழுவிய அளவில் எடுக்கப்பட்டுள்ள பல்வேறு கருத்துக் கணிப்புகளின்படி மீண்டும் பாஜகவே ஆட்சி அமைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தேர்தலில்  272 இடங்களுக்கு மேல் பெற்று இந்தியா கூட்டணி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார். 

ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்

செய்தி நிறுவனம் ஒன்று  நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பங்கேற்று தனது கருத்துக்களை தெரிவித்தார். "உள்கட்டமைப்பு ஒப்பந்தங்கள் முடிந்த பிறகு பாஜக தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற்றுள்ளது. மேலும், மத்திய விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுத்தபிறகு, அந்த நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு நிதி அளித்துள்ளன. 

சிபிஐ, அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்ட 30 நிறுவனங்கள் மூலம் பாஜகவுக்கு ரூ.330 கோடி நன்கொடை கிடைத்துள்ளதற்கு தெளிவான ஆதாரங்கள் உள்ளன. ஹேமந்த் சோரன், அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோரது பெயர்களை பயன்படுத்தி, ஊழலுக்கு எதிராக போராடுவதாக பிரதமர் மோடி வெற்று கோஷமிடுகிறார். ஆனால், பாஜக தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றது பிரதிபலன் நடவடிக்கைக்கு மிக சிறந்த உதாரணம். 

காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் கோடிக்கணக்கில் நன்கொடை பெற்றுள்ளன. ஆனால், எங்களிடம் விசாரணை அமைப்புகள் இல்லை. நாங்கள் எந்த நிறுவனங்களுக்கும் ஒப்பந்தம் வழங்கவில்லை.

சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்அணி), திமுக, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளுடன் இந்தியா கூட்டணி உறுதியாகவே உள்ளது. மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் எங்கள் கூட்டணி இறுதி செய்யப்பட உள்ளது. அசாமில் 11 கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளோம். மம்தா பானர்ஜி எங்களுடன் தொகுதி பங்கீடு செய்யவில்லையே தவிர, இந்தியா கூட்டணியின் ஓர் அங்கமாகத்தான் உள்ளார்.

எதிர்க்கட்சிகள் இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணி நிச்சயம் 272 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று, பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றும். காங்கிரஸ் கட்சியின் விசுவாசமான வீரன் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். அவரது அரசியல் வித்தியாசமானது. கட்சிக்கு புதிய சக்தி, புத்துயிர் அளிப்பதில் வெற்றிகரமாக செயல்படுகிறார். கட்சியை நன்றாக வழி நடத்துகிறார்.

தேசிய ஒற்றுமை யாத்திரையை வெற்றிகரமாக மேற்கொண்டார். நாட்டில் வேறு யாரும் இதுபோல செய்தது இல்லை. யாத்திரைக்கு பிறகு, ராகுல் காந்தி மீதான பார்வை மாற்றம் அடைந்துள்ளது. நம்பிக்கை அதிகரித்துள்ளது" என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in