இந்தியா கூட்டணி படுதோல்வியடையும்; மீண்டும் பாஜகதான்... வெளியானது புதிய கருத்துக்கணிப்பு!

ராகுல், மோடி
ராகுல், மோடி

மக்களவைத் தேர்தல் தற்போது நடைபெற்றால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 315 இடங்களைக் கைப்பற்றி சரித்திரம் படைக்கும் என்று இந்தியா டிவி - சிஎன்எக்ஸ் (India TV- CNX) கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில் லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பான கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்த இந்தியா டிவி - சிஎன்எக்ஸ் தற்போது வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி- 315 இடங்கள்; காங்கிரஸ் தலைமையிலான "இந்தியா" கூட்டணி - 172 இடங்கள்; இதர மாநில கட்சிகள், சுயேட்சைகள் -56 இடங்கள் பெறக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

கட்சிகள் அடிப்படையில் தற்போது 303 எம்.பி.க்களைக் கொண்ட பாஜக 293 இடங்களில் வெல்லுமாம். 52 இடங்களில் கடந்த முறை வென்ற காங்கிரஸ் கட்சி இம்முறை 70 தொகுதிகளைக் கைப்பற்றுமாம். பாஜக, காங்கிரஸுக்கு அடுத்ததாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி 30 தொகுதிகளைக் கைப்பற்றுமாம். கடந்த முறை திரிணாமுல் காங்கிரஸ் 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 4-வது பெரிய கட்சியாக 21 இடங்களில் திமுக வெல்லுமாம். கடந்த முறை திமுக 24 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. உத்தவ் தாக்கரே சிவசேனா- 8; ஆம் ஆத்மி- 6; பிஜேடி- 13; ஏக்நாத் ஷிண்டே சிவசேனா- 4 இடங்களில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது.

மாநிலங்களில் உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பாஜக கூட்டணி 73 இடங்களைக் கைப்பற்றக் கூடும். பாஜக மட்டுமே 71 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான அப்னா தள் 2 இடங்களிலும் வெல்லும் வாய்ப்புள்ளதாம். இதர 7 தொகுதிகளில் "இந்தியா" கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதாம்.

குஜராத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளையும் பாஜக அள்ளுமாம். அதேபோல உத்தரகாண்ட் மாநிலத்தின் 5 லோக்சபா தொகுதிகளிலுமே பாஜகதான் ஜெயிக்குமாம். கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் பாஜக கூட்டணி 18 இடங்களில் வெல்லும் வாய்ப்பிருக்கிறதாம்.

கேரளாவில் ஆளும் இடதுசாரி, காங்கிரஸ் முன்னணியை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி மொத்தம் உள்ள 20 தொகுதிகளையும் வெல்லுமாம். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான "இந்தியா" கூட்டணி மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 32 ஐ கைப்பற்றிவிடுமாம். எஞ்சிய 10 தொகுதிகளில்தான் பாஜக கூட்டணி வெல்லுமாம்.

தமிழ்நாட்டில் திமுகவை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி 32 இடங்களிலும், அதிமுக 6 இடங்களிலும், பாஜக கூட்டணி 1 இடத்திலும் வெல்லும் என்று இந்த கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in