முதல்வருக்கு எதிராக தனி ஒருவராக போராடும் எம்எல்ஏ: பரபரப்புடன் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம்!

முதல்வருக்கு எதிராக தனி ஒருவராக போராடும் எம்எல்ஏ: பரபரப்புடன் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம்!

தனது தொகுதியை புறக்கணிப்பதாக கூறி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக சுயேச்சை எம்எல்ஏ ஒருவர் சட்டப்பேரவை வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நடந்து முடிந்த புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் ஏனாம் தொகுதியில் தற்போது முதல்வராக இருக்கும் ரங்கசாமி போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் வெற்றி பெற்றார். இந்த நிலையில் புதுச்சேரியில் பாஜக ரங்கசாமி கட்சியுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தார். இதனிடையே சுயேச்சை வேட்பாளராக வெற்றி பெற்ற கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் பாஜகவுக்கு ஆதரவு அளித்து வருகிறார்.

இந்த நிலையில், தனது தொகுதியை முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணிப்பதாக சில மாதங்களாக குற்றச்சாட்டை கூறி வருகிறார் எம்எல்ஏ ஸ்ரீனிவாஸ். இதை எடுத்து அவரை பாஜக மேலிட தலைவர்கள் சமாதானப்படுத்தி வந்தனர். மேலும் அவரை டெல்லிக்கு அழைத்துச் சென்ற பாஜக நிர்வாகிகள், முதல்வர் உடனான மோதல் குறித்து பேசியதாக தெரிகிறது. அப்போது, கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸிடம் பிரச்சினைக்கு தீர்வு காணுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில் கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் தனி ஒருவராக புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து அங்கு வந்த புதுச்சேரி பாஜக எம்எல்ஏக்கள் அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்றனர். மேலும் தகவல் அறிந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் விரைந்து வந்து ஸ்ரீனிவாசனிடம் சமரச பேச்சு நடத்தினார். ஆனால் அதனை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

"எனது தொகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. எத்தனை முறை முறையிட்டும் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை" என்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் தனது வேதனையை கூறினார். ஆனால் அவரை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் நமச்சிவாயம் ஈடுபட்டு வந்தார். ஆனால் எம்எல்ஏ அதற்கு அடிபணியவில்லை. தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார். சுயேச்சை எம்எல்ஏ உடன் பாஜக எம்எல்ஏக்களும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவது ஆளும் புதுச்சேரி அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

படங்கள்: சாம்ராஜ்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in