`எனது போராட்டம் ஓயாது; முதல்வர் பதவியில் இருந்து ரங்கசாமியை தூக்க வேண்டும்'- கொந்தளிக்கும் கூட்டணி எம்எல்ஏ

சட்டமன்ற வாயிலில் உண்ணாவிரதம் இருக்கும் அங்காளன் எம்எல்ஏ
சட்டமன்ற வாயிலில் உண்ணாவிரதம் இருக்கும் அங்காளன் எம்எல்ஏ

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்து வரும்  சுயேச்சை எம்எல்ஏ அங்காளன் சட்டமன்ற வாயிலில்  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது  அம்மாநிலத்தில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம்  திருபுவனை தொகுதி சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன். இவர் பாஜக -என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். ஆனாலும் தனது தொகுதியில் எந்தவிதமான திட்டங்களும் செயல் படுத்தப்படவில்லை என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மீது வருத்தத்தில் இருக்கிறார்.

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தனது தொகுதி புறக்கணிக்கப்படுவதாகவும், எந்தவித நலத்திட்ட உதவிகளையும், அரசுத் திட்டங்களையும் செயல்படுத்த விடுவதில்லை எனவும்  அவர் நேரடியாக குற்றம்சாட்டியிருந்தார். இந்தநிலையில் இன்று தனது தொகுதி மக்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் சட்டமன்றத்திற்கு வந்த அங்காளன், வாயிலில் அமர்ந்து, முதலமைச்சர் ரங்கசாமியை கண்டித்து ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்தார்.

அங்காளனுக்கு ஆதரவாக வந்த கல்யாணசுந்தரம் எம்எல்ஏ
அங்காளனுக்கு ஆதரவாக வந்த கல்யாணசுந்தரம் எம்எல்ஏ

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முதலமைச்சர் ரங்கசாமி எனது தொகுதியை முழுமையாக புறக்கணிக்கிறார். நான் பாஜகவிற்கு ஆதரவளிப்பதால் நான் பரிந்துரை செய்யும் எந்த ஒரு பணிகளையும் முதலமைச்சர் ஏற்க மறுக்கிறார். மேலும் என்னுடைய தொகுதியில் எந்த பணியும் செய்யக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறார். புதுச்சேரி ஆட்சியில் வெளிப்படையான தன்மை இல்லை, ஊழல் மலிந்துவிட்டது. முதலமைச்சர் ரங்கசாமி மதுபான தொழிற்சாலை அனுமதி வழங்குவதில் பல முறைகேடுகளை கையாள்கிறார். பாஜகவின் பணம் தேவை, பாஜகவின் ஆளுநர் தேவை என கூறும் முதலமைச்சர், பாஜகவில் ஒரு எம்எல்ஏ கூட வளரக்கூடாது என்றும், புதுச்சேரியில் பாஜக  வளரக்கூடாது என நினைக்கிறார். இதனால் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு முதலமைச்சர் ரங்கசாமியை பதவியில் இருந்து தூக்க வேண்டும். ரங்கசாமி முதலமைச்சர் பதவியில் இருக்கும் வரை எனது போராட்டம் ஓயாது"  என தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in