500 கோடிக்கும் மேலாக வரிஏய்ப்பு: முன்னாள் முதல்வரின் உதவியாளர், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ரெய்டில் சிக்குகிறார்களா?

500 கோடிக்கும் மேலாக வரிஏய்ப்பு: முன்னாள் முதல்வரின் உதவியாளர், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ரெய்டில் சிக்குகிறார்களா?

சென்னையில் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்குச் சொந்தமான 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த ஐந்து நாட்களாக வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

சென்னையைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் ‘சமீரா ரியல்’ என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சென்னை, பெங்களூரு, வேலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட ஏழு இடங்களில் இந்த நிறுவனம் மூலமாக வீட்டுமனைகள் மற்றும் குடியிருப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பெங்களூருவில் உள்ள ஒரு சொத்தை விற்பனை செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக வருமான வரித் துறைக்கு வந்த புகாரை அடுத்து வருமான வரித் துறையினர் பெங்களூருவில் உள்ள சமீரா ரியல் அலுவலகத்தில் சோதனை நடத்தினார்கள்.

அப்போது அந்நிறுவனம் பல இடங்களில் பினாமி பெயரில் முறைகேடாக நிலங்கள் வாங்கிக் குவித்திருப்பதும், போலியான நிறுவனங்களைத் தொடங்கி ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. அங்கு நடைபெற்ற சோதனையில் சமீரா ரியல் நிறுவனத்தில் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் பல நூறு கோடி ரூபாய் கறுப்புப் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து அண்ணா நகரில் உள்ள பாஸ்கரனின் வீடு மற்றும் நுங்கம்பாக்கம், வேலூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரித் துறையினர் கடந்த ஐந்து நாட்களாகச் சோதனை நடத்தி வருகிறார்கள். கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமாக சஹாரா ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் சொத்துக்கள் ஏலம் வந்தபோது, உச்ச நீதிமன்ற அனுமதியோடு அந்த நிறுவனத்தின் பல நூறு கோடி ரூபாய் சொத்துகளை பாஸ்கரன் வாங்கியிருக்கிறார்.

குறுகிய காலத்தில் இவரின் வளர்ச்சியைக் கண்டு ரியல் எஸ்டேட் தொழல் செய்பவர்களே மிரண்டு போனதாகப் பேசப்பட்டது. இந்த நிறுவனத்தில் சுமார் 500 கோடி ரூபாய்க்கும் மேலாக வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. வருமான வரித் துறை சோதனையை மறைக்கப் பெரிய அளவில் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளராகப் பணிபுரிந்த பாண்டியன் என்பவரும் இதில் சிக்குகிறார். சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேலாக முதலீடு செய்துள்ள பாண்டியன் தொடர்பான ஆவணங்களும் சோதனையில் சிக்கியுள்ளன. ஏலத்துக்கு வந்த சஹாரா நிறுவன சொத்துக்களை பாண்டியன் வாங்கியதும், பிரீஸ் ஹோட்டல் உள்ளிட்ட சொத்துகளில் சுமார் 100 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இதனால் பாண்டியனுக்கு நெருக்கமான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் கலக்கத்தில் உள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனைத் தனக்கு நன்கு தெரியும் என ரியல் எஸ்டேட் தொழிலில் பாண்டியன் கோலோச்சி வருகிறார். ஆனால் சபரீசனுக்கும் பாண்டியனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவரது பெயரை பாண்டியன் தவறாகப் பயன்படுத்தி வருவதாகவும் ரியல் எஸ்டேட் வட்டாரத்தினர் சொல்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in